படிப்புக் கட்டுரை 40
பேதுருவை போலவே எப்போதும் உறுதியாக நில்லுங்கள்
“எஜமானே, நான் ஒரு பாவி, என்னைவிட்டுப் போய்விடுங்கள்.”—லூக். 5:8.
பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
இந்த கட்டுரையில்... a
1. அற்புதமாக மீன் கிடைத்ததை பார்த்தபோது பேதுரு என்ன செய்தார்?
ராத்திரி முழுதும் பேதுரு படகில் சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை. அப்போது, யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை இயேசு பேதுருவிடம் சொன்னார். “ஆழமான இடத்துக்குப் படகைக் கொண்டுபோய், உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்” என்று சொன்னார்.” (லூக். 5:4) ‘அப்படி செய்தால் மட்டும் மீன் உடனே கிடைத்துவிடுமா’ என்று பேதுரு ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால், இயேசு சொன்னதை பேதுரு செய்தார். சொன்ன மாதிரியே போய் வலையைப் போட்டார்கள். வலை கிழியும் அளவுக்கு மீன் கிடைத்தது. இவ்வளவு பெரிய அற்புதம் நடந்ததைப் பார்த்தபோது பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் “மலைத்துப்போயிருந்தார்கள்”. உடனே பேதுரு இயேசுவிடம், “’எஜமானே, நான் ஒரு பாவி, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொன்னார்.” (லூக். 5:6-9) இயேசுவின் முன் நிற்பதற்குக்கூட தனக்கு தகுதியில்லை என்று பேதுரு நினைத்திருப்பார்.
2. பேதுருவின் உதாரணத்தை யோசித்துப் பார்க்கும்போது நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
2 பேதுரு சொன்னது சரிதான்—அவர் ‘ஒரு பாவிதான்’. சிலசமயம் அவர் சொன்ன அல்லது செய்த விஷயங்களை நினைத்து பிற்பாடு அவர் வருத்தப்பட்டிருக்கிறார் என்று பைபிளிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். ‘நானும் பேதுருவை போல்தான் இருக்கிறேன்’ என்று நினைக்கிறீர்களா? ஏதோ ஒரு கெட்ட குணத்தை விடுவதற்காக நீங்களும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறீர்களா? ரொம்ப நாளாகவே உங்களிடம் இருக்கும் பலவீனத்தை சரிசெய்ய வேண்டுமென்று போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், பேதுருவுடைய உதாரணத்தை படிக்கும்போது உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். அது எப்படி? பேதுரு செய்த தவறை எல்லாம் பைபிளில் பதிவு செய்யாமலே இருந்திருக்கலாம். இருந்தாலும், நமக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக யெகோவா அவற்றையும் சேர்த்து பதிவு செய்து வைத்திருக்கிறார். (2 தீ. 3:16, 17) நம்மைப்போலவே யோசித்த, நடந்துகொண்ட பேதுருவைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, நம்மிடம் குறையே இருக்கக்கூடாது என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்வோம். நமக்கு பலவீனங்கள் இருந்தாலும், விடாமல் அவருக்கு சேவை செய்ய தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
3. நாம் ஏன் விடாமல் முயற்சி செய்ய வேண்டும்?
3 நாம் விடாமல் முயற்சி செய்வது ஏன் முக்கியம்? முயற்சி திருவினையாக்கும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஒரு விஷயத்தை விடாமல் செய்துகொண்டே இருந்தால்தான் அதில் திறமைசாலியாக ஆக முடியும். ஒரு உதாரணத்தை கவனியுங்கள்: ஒரு இசை கருவியை நன்றாக வாசிக்க கற்றுக்கொள்ள ஒருவருக்கு பல வருஷங்கள் ஆகும். ஆரம்பத்தில் தப்பு தப்பாகத்தான் வாசிப்பார். ஆனால், விடாமல் பயிற்சி செய்யும்போது அவரால் நன்றாக வாசிக்க கற்றுக்கொள்ள முடியும். அப்படி வாசிக்க கற்றுக்கொண்ட பிறகும்கூட சிலசமயம் தவறு செய்யலாம். ஆனாலும் முயற்சியை விட்டுவிட மாட்டார். இன்னும் நன்றாக வாசிப்பதற்கு முயற்சி செய்துகொண்டேதான் இருப்பார். அதேபோல், நாம் ஒரு பலவீனத்தை சமாளித்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் மறுபடியும் அதே தவறை செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், நாம் சோர்ந்துபோய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். சிலசமயம் ஏதோவொன்றை சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு பின்பு அதை நினைத்து நாம் வருத்தப்படலாம். ஆனாலும் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தால், நாம் முன்னேறுவதற்கு யெகோவா உதவி செய்வார். (1 பே. 5:10) பேதுரு எப்படி விடாமல் முயற்சி செய்தார் என்று இப்போது பார்க்கலாம். தவறு செய்த பேதுருவிடம் இயேசு கரிசனையோடு நடந்துகொண்டதைப் பற்றி படிக்கும்போது, யெகோவாவுக்கு விடாமல் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை நமக்கும் வரும்.
பேதுருவின் போராட்டங்களும் ஆசீர்வாதங்களும்
4. லூக்கா 5:5-10 சொல்வதுபோல், பேதுரு தன்னைப் பற்றி என்ன நினைத்தார், இயேசு அவருக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்தார்?
4 “நான் ஒரு பாவி” என்று பேதுரு ஏன் சொன்னார், எந்த பாவத்தை மனதில் வைத்து அப்படி சொன்னார் என்று பைபிள் எதுவும் சொல்லவில்லை. (லூக்கா 5:5-10-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை அவர் மோசமான தவறுகளை செய்திருக்கலாம். ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்று பேதுரு நினைத்ததால்தான் அவர் இந்தளவுக்கு பயப்படுகிறார் என்பதை இயேசு புரிந்துகொண்டார். ஆனால், பேதுருவால் உண்மையாக இருக்க முடியும் என்று இயேசு நம்பினார். அதனால்தான், “பயப்படாதே” என்று அவரிடம் அன்பாக சொன்னார். தன்னை இயேசு எவ்வளவு நம்புகிறார் என்று பார்த்தது பேதுருவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதன் பின்பு, பேதுருவும் அவருடைய சகோதரன் அந்திரேயாவும் மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு, முழுநேரமாக இயேசுவோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்காக போனார்கள். அதனால் அவர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்தன. —மாற். 1:16-18.
5. பயத்தை ஓரங்கட்டிவிட்டு இயேசுவைப் பின்பற்றி போனதால் பேதுருவுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?
5 இயேசுவைப் பின்பற்றியதால் பேதுரு நிறைய அருமையான விஷயங்களைப் பார்த்தார். இயேசு, உடம்பு சரியில்லாதவர்களை குணமாக்கியதை, பேய்களை துரத்தியதை, இறந்தவர்களை உயிரோடு எழுப்பியதை எல்லாம் பேதுரு கண்ணால் பார்த்தார். b (மத். 8:14-17; மாற். 5:37, 41, 42) இயேசு பரலோகத்தில் ராஜாவாக ஆகும்போது, அவருக்கு கிடைக்கப்போகிற மகிமையை தரிசனமாக பார்க்கும் வாய்ப்பும் பேதுருவுக்கு கிடைத்தது. இப்படி ஒரு காட்சியை அவரால் மறந்திருக்க முடியுமா! (மாற். 9:1-8; 2 பே. 1:16-18) இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பார்ப்பார் என்று பேதுரு கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். நல்லவேளை, பேதுரு தேவையில்லாத எண்ணங்களால் சோர்ந்துபோய், அப்படியே உட்கார்ந்துவிடவில்லை. அப்படி செய்திருந்தால், இந்த அருமையான ஆசீர்வாதங்களை எல்லாம் தொலைத்திருப்பார்!
6. பேதுரு அவருடைய பலவீனங்களை உடனே தாண்டி வந்துவிட்டாரா? விளக்குங்கள்.
6 இவ்வளவு விஷயங்களை பேதுரு பார்த்த பிறகும், கேட்ட பிறகும் அவருடைய பலவீனங்களோடு அவர் போராடிக்கொண்டே தான் இருந்தார். அதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம். பைபிள் தீர்க்கதரிசனங்கள் சொல்வதுபோல் இயேசு கஷ்டப்பட்டுதான் சாக வேண்டியிருக்கும் என்பதை அவர் விளக்கி சொன்னபோது, இயேசுவை பேதுரு அதட்டினார். (மாற். 8:31-33) திரும்பத் திரும்ப, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் ‘நான்தான் பெரியவன்’ என்று வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தார்கள். (மாற். 9:33, 34) இயேசு இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, பேதுரு அவசரப்பட்டு ஒரு மனுஷனுடைய காதை வெட்டிவிட்டார். (யோவா. 18:10) கொஞ்ச நேரத்திலேயே, அவர் பயந்துபோய், அவருடைய உயிர் நண்பன் இயேசுவை தெரியாது என்று மூன்று தடவை சொல்லிவிட்டார். (மாற். 14:66-72) பின்பு, அதை நினைத்து பேதுரு கதறி அழுதார்.—மத். 26:75.
7. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவுக்கு என்ன வாய்ப்பு கிடைத்தது?
7 மனம் உடைந்துபோன இந்த அப்போஸ்தலனை இயேசு அப்படியே விட்டுவிடவில்லை. அவர் உயிர்த்தெழுந்து வந்தபிறகு தன்மேல் இருக்கும் அன்பை காட்டுவதற்கு பேதுருவுக்கு வாய்ப்பு கொடுத்தார். தன்னுடைய ஆடுகளை தாழ்மையாக மேய்க்கும் வேலையையும் இயேசு பேதுருவுக்கு கொடுத்தார். (யோவா. 21:15-17) இயேசு சொன்னதை செய்ய பேதுரு தயாராக இருந்தார். அதனால் பெந்தெகோஸ்தே நாள் அன்று அவர் எருசலேமில் இருந்தார். முதன்முதலாக கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் பேதுருவும் ஒருவர்.
8. அந்தியோகியாவில் இருந்தபோது பேதுரு என்ன பெரிய தவறை செய்தார்?
8 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவராக ஆன பிறகும்கூட, பேதுரு அவருடைய பலவீனங்களோடு போராட வேண்டியிருந்தது. கி.பி. 36-ல் யூதராக இல்லாத கொர்நேலியுவை, கடவுள் அவருடைய சக்தியால் அபிஷேகம் செய்தபோது, பேதுருவும் அங்கு இருந்தார். “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” என்பதற்கும், மற்ற தேசத்து மக்களாலும் கிறிஸ்தவ சபையில் ஒருவராக ஆக முடியும் என்பதற்கும் இது தெளிவான ஆதாரமாக இருந்தது. (அப். 10:34, 44, 45) அதன் பிறகு, மற்ற தேசத்தாருடன் சேர்ந்து பேதுரு சாப்பிட்டார். இப்படி செய்வார் என்று அவர் முன்பு யோசித்துக்கூட பார்த்திருக்க மாட்டார். (கலா. 2:12) ஆனால் சில யூத கிறிஸ்தவர்கள், யூதர்களும் மற்ற தேசத்தாரும் சேர்ந்து சாப்பிடக் கூடாது என்ற நினைத்தார்கள். அப்படி நினைத்த சிலர் அந்தியோகியாவுக்கு வந்திருந்தபோது, அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்று பயந்துபோய், பேதுரு மற்ற தேசத்தாராக இருந்த சகோதரர்களோடு சேர்ந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். பேதுரு இப்படி வெளிவேஷம் போடுவதை அப்போஸ்தலன் பவுல் பார்த்துவிட்டு, எல்லாருக்கும் முன்பாக அவரை கண்டித்தார். (கலா. 2:13, 14) இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும் பேதுரு சோர்ந்துபோகவில்லை. எது அவருக்கு உதவியது?
விடாமல் முயற்சி செய்ய பேதுருவுக்கு எது உதவியது?
9. யோவான் 6:68, 69-ல் இருந்து பேதுரு உண்மையாக இருந்தார் என்று எப்படி தெரிந்துகொள்கிறோம்?
9 பேதுரு உண்மையாக இருந்தார். என்ன நடந்தாலும் அவர் இயேசுவை ஒரேயடியாக விட்டுவிட்டு போகவே இல்லை. ஒருசமயம் இயேசு சொன்ன விஷயம், அவருடைய சீஷர்களுக்கு புரியவில்லை. அந்த சமயத்திலும் பேதுரு உண்மையாக இருந்தார். (யோவான் 6:68, 69-ஐ வாசியுங்கள்.) நிறையப்பேர் இயேசு என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யவே இல்லை. அவர் விளக்கம் சொல்லும்வரைக்கும் பொறுமையாக காத்திருக்கவும் இல்லை. அவரை பின்பற்றுவதையே நிறுத்திவிட்டார்கள். ஆனால், பேதுரு அப்படி செய்யவில்லை. “முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள்” இயேசுவிடம்தான் இருக்கின்றன என்பதை அவர் புரிந்துகொண்டார்.
10. பேதுரு மேல் இருந்த நம்பிக்கையை இயேசு எப்படி காட்டினார்? (படத்தையும் பாருங்கள்.)
10 இயேசு பேதுருவை அம்போவென்று விட்டுவிடவில்லை. இயேசு பூமியில் இருந்த கடைசி ராத்திரி, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அவரை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அவருக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், பேதுரு அவருடைய தவறை திருத்திக்கொள்வார் என்றும் தொடர்ந்து அவருக்கு உண்மையாக இருப்பார் என்றும் இயேசு நம்பினார். (லூக். 22:31, 32) “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று இயேசு புரிந்துகொண்டார். (மாற். 14:38) அதனால், தன்னை யாரென்றே தெரியாது என பேதுரு சொன்ன பிறகும்கூட இயேசு அவர்மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட்டுவிடவில்லை. அவர் உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவைப் போய் பார்த்தார். அநேகமாக, பேதுரு அப்போது தனியாக இருந்திருக்க வேண்டும். (மாற். 16:7; லூக். 24:34; 1 கொ. 15:5) செய்த தவறை நினைத்து உடைந்து போயிருந்த பேதுருவுக்கு இது எவ்வளவு தெம்பை கொடுத்திருக்கும்!
11. பேதுருவுக்கு யெகோவா உதவி செய்வார் என்று இயேசு எப்படி அவருக்கு நம்பிக்கை கொடுத்தார்?
11 யெகோவா உதவி செய்வார் என்று பேதுருவுக்கு இயேசு நம்பிக்கை கொடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்து வந்த பிறகு, பேதுருவுக்கும் அவரோடு இருந்த மற்ற அப்போஸ்தலர்களுக்கும் மீன்பிடிப்பதில் இன்னொரு அற்புதத்தை செய்து காட்டினார். (யோவா. 21:4-6) இந்த அற்புதத்தை பார்த்தபோது யெகோவா அவருடைய பொருள் தேவைகளை கவனித்துக்கொள்வார் என்று பேதுருவுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுப்பவர்களை’ யெகோவா கவனித்துக்கொள்வார் என்று இயேசு சொன்ன வார்த்தைகளும் அப்போது அவருடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும். (மத். 6:33) அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட ஊழிய வேலைக்கு தான் பேதுரு முதலிடம் கொடுத்தார். கி.பி. 33 பெந்தேகோஸ்தே நாள் அன்று, அவர் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். அதைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 2:14, 37-41) அதற்குப்பின், சமாரியர்களும் மற்ற தேசத்தை சேர்ந்தவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி செய்தார். (அப். 8:14-17; 10:44-48) எல்லா விதமான மக்களையும் அவருடைய சபைக்குள் கொண்டுவருவதற்கு யெகோவா பேதுருவை பெரிய அளவில் பயன்படுத்தினார்.
நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12. ரொம்ப நாளாக ஒரு பலவீனத்தோடு போராடிக்கொண்டு இருந்தால், பேதுருவுடைய உதாரணத்தை யோசித்துப்பார்ப்பது நமக்கு எப்படி உதவி செய்யும்?
12 விடாமல் முயற்சி செய்ய யெகோவா உதவி செய்வார். ரொம்ப நாளாக ஏதோ ஒரு பலவீனம் நமக்கு இருந்தால் அதை சமாளிப்பது நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். ‘பேதுருவுக்கு இருந்ததைவிட எனக்கு இருக்கிற பலவீனம் ரொம்ப பெரியது’ என்று சிலசமயம் நமக்கு தோன்றலாம். ஆனால், சோர்ந்துபோய்விடாமல் இருக்க யெகோவா நமக்கு பலம் கொடுப்பார். (சங். 94:17-19) உதாரணத்துக்கு, பைபிள் உண்மைகளை தெரிந்துகொள்வதற்கு முன்பு ஒரு சகோதரர் ரொம்ப வருஷமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். ஆனால் அதற்குபிறகு, அவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றிக்கொண்டார். இருந்தாலும், சில சமயம் தப்பான ஆசைகளோடு அவர் போராட வேண்டியிருந்தது. விடாமல் முயற்சி செய்ய அவருக்கு எது உதவி செய்தது? “யெகோவா நமக்கு பலம் கொடுப்பார். யெகோவாவுடைய சக்தியின் உதவியால் . . . என்னால் [தொடர்ந்து] சத்திய வழியில் நடக்க முடியும் என்று புரிந்துகொண்டேன். . . . என்னிடம் குறைகள் இருந்தாலும் யெகோவாவால் என்னை பயன்படுத்த முடியும், என்னை பலப்படுத்த முடியும் என்று புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார்.
13. அப்போஸ்தலர் 4:13, 29, 31 சொல்வதுபோல் பேதுருவுடைய உதாரணத்தை நாம் எப்படி பின்பற்றலாம்? (படத்தையும் பாருங்கள்.)
13 மனிதர்களுக்கு பயந்ததால் பேதுரு பெரிய தவறுகளை செய்தார் என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் தைரியத்துக்காக அவர் ஜெபம் செய்தார். அதனால், தைரியமாக இருக்க அவருக்கு பலம் கிடைத்தது. (அப்போஸ்தலர் 4:13, 29, 31-ஐ வாசியுங்கள்.) நம்மாலும் பயத்தை சமாளித்து அதிலிருந்து வெளியே வர முடியும். நாசி ஜெர்மனியில் வாழ்ந்த ஹார்ஸ்ட் என்கிற இளம் சகோதரருக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். ஸ்கூலில் எல்லாரும் கட்டாயப்படுத்தியதால் ஒருசில தடவை அவர் “ஹிட்லர் வாழ்க!” என்று சொல்லியிருக்கிறார். அவருடைய அம்மா அப்பா அதற்காக அவரை திட்டவில்லை. அதற்குப்பதிலாக, அவருடன் சேர்ந்து ஜெபம் செய்தார்கள். தைரியமாக இருக்க உதவி செய்யச் சொல்லி யெகோவாவிடம் கேட்டார்கள். அவருடைய அப்பா அம்மா செய்த உதவியினாலும், யெகோவாவையே நம்பி இருந்ததாலும், உறுதியாக இருக்க ஹார்ஸ்ட்க்கு பலம் கிடைத்தது. “யெகோவா என்னை கைவிடவே இல்லை” என்று அதன்பின் அவர் சொன்னார். c
14. சோர்ந்துப்போனவர்களுக்கு அன்பான மேய்ப்பர்கள் எப்படி நம்பிக்கை கொடுக்கிறார்கள்?
14 யெகோவாவும் இயேசுவும் ஒருநாளும் நம்மை விட்டுவிட மாட்டார்கள். இயேசுவை யார் என்றே தெரியாது என்று சொன்ன பிறகு ஒரு முக்கியமான தீர்மானத்தை பேதுரு உடனே எடுக்க வேண்டியிருந்தது. அவர் தொடர்ந்து இயேசுவுடைய சீஷராக இருப்பாரா? அல்லது, விட்டுவிட்டுப் போய்விடுவாரா? பேதுரு தன்னுடைய விசுவாசத்தை விட்டுவிடக் கூடாது என்று இயேசு அவருக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்திருந்தார். அதைப் பற்றி பேதுருவிடமும் சொன்னார். சீக்கிரத்திலேயே பேதுரு அவருடைய சகோதரர்களை பலப்படுத்துவார், அதில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் காட்டினார். (லூக். 22:31, 32) இயேசு சொன்னதை யோசித்துப் பார்த்தது பேதுருவுக்கு எவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கும் இல்லையா? நம்முடைய வாழ்க்கையிலும் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கலாம். அந்த சமயத்தில் நம்மால் உண்மையாக இருக்க முடியும் என்று நமக்கு நம்பிக்கை கொடுக்க யெகோவா அன்பான மேய்ப்பர்களை பயன்படுத்தலாம். (எபே. 4:8, 11) ரொம்ப நாளாக மூப்பராக சேவை செய்கிற பால் என்கிற சகோதரரும் மற்றவர்களுக்கு இப்படித்தான் நம்பிக்கை கொடுக்கிறார். சோர்ந்துபோய் இருக்கிறவர்களிடம், ‘யெகோவா முதன்முதலில் உங்களை எப்படி சத்தியத்திற்குள் கொண்டுவந்தார் என்று யோசித்துப் பாருங்கள்’ என்று அவர் சொல்வார். யெகோவாவிடம் மாறாத அன்பு இருப்பதால், அவரால் யாரையும் விட்டுவிட முடியாது என்று சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்துவார். அவர் இப்படி சொல்கிறார், “சோர்ந்துபோன எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு யெகோவா உதவி செய்ததால், விட்டுக்கொடுத்து விடாமல் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.”
15. மத்தேயு 6:33-ல் இருக்கிற வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை பேதுரு மற்றும் ஹார்ஸ்ட்டின் உதாரணங்கள் எப்படி காட்டுகிறது?
15 பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் தேவையானதை யெகோவா பார்த்துக்கொண்டார். அதேமாதிரி நாமும் நம்முடைய வாழ்க்கையில் ஊழியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்றால் நமக்கு அடிப்படையாக தேவைப்படுகிற விஷயங்களை அவர் பார்த்துக்கொள்வார். (மத். 6:33) இரண்டாவது உலகப் போருக்கு பிறகு, நாம் முன்னாடி பார்த்த ஹார்ஸ்ட் என்ற சகோதரர் பயனியர் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தார். இருந்தாலும், அவரிடம் அவ்வளவு காசு இல்லை. அதனால் ‘என்னால் முழு நேர சேவையை செய்ய முடியுமா? என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியுமா?’ என்று யோசித்தார். அப்போது அவர் என்ன செய்தார்? யெகோவா சொன்ன மாதிரியே செய்வாரா என்று அவர் சோதித்துப் பார்த்தார். வட்டார கண்காணியின் சந்திப்பில் அந்த வாரம் முழுவதும் அவர் ஊழியத்துக்கு போனார். அந்த வார கடைசியில் வட்டார கண்காணி அவர் கையில் ஒரு கவரை கொடுத்தார். ஆனால் அதை யார் கொடுத்தது என்று அவர் சொல்லவில்லை. அடுத்த பல மாதங்களுக்கு பயனியர் சேவை செய்யும்போது அவரை பார்த்துக்கொள்வதற்கு தேவையான பணம் அதில் இருந்தது. அந்த பரிசைப் பார்த்தபோது நான் உன்னை விட்டுவிட மாட்டேன் என்று யெகோவாவே அவரிடம் சொன்ன மாதிரி இருந்தது. அதற்குப் பிறகு அவருடைய வாழ்க்கை முழுவதும் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு தான் அவர் முதலிடம் கொடுத்தார்.—மல். 3:10.
16. பேதுருவுடைய உதாரணத்தையும் அவர் எழுதிய விஷயங்களையும் யோசித்து பார்ப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
16 “என்னைவிட்டு போய்விடுங்கள்” என்று பேதுரு இயேசுவிடம் சொன்னார். ஒருவேளை இயேசு போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நல்லவேளை இயேசு அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக, பேதுரு ஒரு உண்மையுள்ள அப்போஸ்தலனாக இருப்பதற்கும், கிறிஸ்தவர்களுக்கு நல்ல உதாரணமாக இருப்பதற்கும் இயேசு தொடர்ந்து அவருக்கு பயிற்சி கொடுத்தார். அவர் கொடுத்த பயிற்சிகள் பற்றிய பதிவுகளைப் படிக்கும்போது நம்மால் நிறைய நல்ல நல்ல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். அதில் சில பாடங்களைப் பற்றி பைபிளில் அவர் எழுதிய இரண்டு கடிதங்களில் பார்க்கிறோம். அதை முதல் நூற்றாண்டில் இருந்த சபைகளுக்கு அவர் அனுப்பினார். அந்த கடிதங்களில் இருக்கிற சில ஆலோசனைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். இன்று நாம் அதை எப்படி பயன்படுத்தலாம் என்றும் பார்க்கலாம்.
பாட்டு 126 விழிப்பாய், தைரியமாய் நில்லுங்கள்!
a நீங்கள் பலவீனங்களோடு போராடிக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால் கண்டிப்பாக உங்களால் அதை தாண்டி வர முடியும். யெகோவாவுக்கு தொடர்ந்து உண்மையாக சேவை செய்ய முடியும். அந்த நம்பிக்கையை இந்த கட்டுரை உங்களுக்கு கொடுக்கும்.
b இந்தக் கட்டுரையில் மாற்கு புத்தகத்தில் இருக்கும் நிறைய வசனங்களை நீங்கள் பார்ப்பீர்கள். இயேசு செய்த நிறைய விஷயங்களை பேதுரு அவருடைய கண்ணால் பார்த்தார். அநேகமாக, அவர் சொன்ன விஷயங்களை வைத்துதான் மாற்கு இதை எழுதியிருக்க வேண்டும்.
c சகோதரர் ஹார்ஸ்ட் ஹென்ஷெல்லுடைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள விழித்தெழு! பிப்ரவரி 22, 1998-ல் வந்த “தேவனுக்கு என் குடும்பத்தார் காட்டிய உண்மைத்தன்மையே எனக்கு தூண்டுகோல்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
d பட விளக்கம்: ஹார்ஸ்ட் ஹென்ஷெலுடைய அப்பா அம்மா அவருடன் சேர்ந்து ஜெபம் செய்தார்கள், விடாமல் உறுதியாக இருப்பதற்கு அவருக்கு உதவி செய்தார்கள். இந்த படத்தில் அது நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.