Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

2 தெசலோனிக்கேயர் 3:14-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘குறித்து வைத்துக்கொள்வது,’ மூப்பர்கள் செய்ய வேண்டியதா அல்லது சபையில் இருக்கிற தனிப்பட்ட நபர்கள் செய்ய வேண்டியதா?

தெசலோனிக்கே சபையில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இப்படி எழுதினார்: ‘இந்தக் கடிதத்தில் இருக்கிற எங்கள் வார்த்தைக்கு யாராவது கீழ்ப்படியாமல்போனால், . . . அவனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.’ (2 தெ. 3:14) இது மூப்பர்களுக்குக் கொடுக்கப்பட்ட வழிநடத்துதல் என்று முன்பு நினைத்தோம். ஒருவருக்குத் திரும்பத் திரும்ப ஆலோசனை கொடுக்கப்பட்ட பிறகும், அவர் தொடர்ந்து பைபிள் நியமங்களை மீறி நடந்தால், மூப்பர்கள் சபையில் எச்சரிப்புப் பேச்சைக் கொடுப்பார்கள். அதற்குப் பிறகு, கூட்டங்களிலும் ஊழியத்திலும் தவிர, மற்ற சமயங்களில் அந்த நபரோடு சேர்ந்து நேரம் செலவு செய்வதை சபையில் இருக்கிற பிரஸ்தாபிகள் தவிர்ப்பார்கள்.

ஆனால், நம்முடைய புரிந்துகொள்ளுதலில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பவுல் கொடுத்த இந்த வழிநடத்துதல், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக செய்ய வேண்டிய விஷயம் என்பது தெரிகிறது. அதனால், மூப்பர்கள் இனிமேலும் எச்சரிப்புப் பேச்சைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் இந்த மாற்றம்? பவுல் இந்த வழிநடத்துதலைக் கொடுத்தபோது அவர் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் என்று கவனியுங்கள்.

சபையில் சிலர் “ஒழுங்கீனமாக” நடக்கிறார்கள் என்று பவுல் சொன்னார். பைபிள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைக்கு அவர்கள் கீழ்ப்படிய மறுத்துவிட்டார்கள். முன்பு ஒருதடவை சபையைச் சந்தித்தபோது, பவுல் இப்படிக் கட்டளை கொடுத்திருந்தார்: “வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது.” இந்தக் கட்டளை கொடுக்கப்பட்ட பிறகும், தங்களால் வேலை செய்ய முடிந்திருந்தும் சிலர் வேலை செய்யாமல் இருந்தார்கள். மற்றவர்களுடைய விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி ஒழுங்கீனமாக நடக்கிறவர்களை மற்ற கிறிஸ்தவர்கள் எப்படி நடத்த வேண்டும்?—2 தெ. 3:6, 10-12.

‘அவனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பவுல் சொன்னார். கிரேக்க மொழியில் இந்த வார்த்தைக்கான அர்த்தம், ஒரு நபரை நன்றாகக் கவனித்து வைத்துக்கொள்வதைக் குறிக்கிறது. இதை மூப்பர்களுக்கு மட்டுமல்ல, முழு சபைக்கும் பவுல் சொன்னார். (2 தெ. 1:1; 3:6) அதனால், ஒரு கிறிஸ்தவர் பைபிளின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஆலோசனையை மீறி நடந்தால், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாக அவரோடு ‘பழகுவதை நிறுத்திக்கொள்ள’ முடிவு செய்வார்கள்.

அப்படியென்றால், சபையிலிருந்து நீக்கப்படுகிற ஒருவரை நடத்துவதுபோல், இந்த நபரையும் நடத்த வேண்டுமா? இல்லை. “சகோதரனாக நினைத்து அவனுக்குத் தொடர்ந்து புத்திசொல்லுங்கள்” என்று பவுல் சொன்னார். அதனால், குறித்து வைக்கப்பட்ட ஒருவரோடு கூட்டங்களிலும் ஊழியத்திலும் கிறிஸ்தவர்கள் பழகினாலும், அவரோடு சேர்ந்து சமூக நிகழ்ச்சிகளிலோ பொழுதுபோக்கு விஷயங்களிலோ நேரம் செலவிட மாட்டார்கள். ஏன்? “அவன் வெட்கப்படும்படி” அப்படிச் செய்ய வேண்டுமென்று பவுல் சொல்கிறார். அதாவது, இப்படிக் குறித்து வைத்திருப்பதால், ஒழுங்கீனமாக நடக்கிற ஒருவர் தன்னுடைய நடத்தையை நினைத்து வெட்கப்பட்டு தன்னையே மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.—2 தெ. 3:14, 15.

இன்று இந்த வழிநடத்துதலைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கடைப்பிடிக்கலாம்? முதலில், பவுல் சொல்கிற மாதிரி உண்மையிலேயே ஒருவர் “ஒழுங்கீனமாக” நடக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மனசாட்சியின் அடிப்படையிலோ சொந்த விருப்புவெறுப்புகள் அடிப்படையிலோ ஒருவர் வித்தியாசமான முடிவுகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி பவுல் இங்கே சொல்லவில்லை. அதேமாதிரி, மனதைக் காயப்படுத்தியவர்களைப் பற்றியும் அவர் இங்கே சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, கடவுள் கொடுத்திருக்கிற தெளிவான ஆலோசனைக்கு, வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுக்கிற ஆட்களைப் பற்றித்தான் சொல்கிறார்.

இன்று, சபையில் ஒருவர் தொடர்ந்து பைபிள் கொடுக்கிற ஆலோசனையை மீறி நடந்தால், a அவரோடு சமூக நிகழ்ச்சிகளிலோ பொழுதுபோக்கு விஷயங்களிலோ பழகக் கூடாது என்று தனிப்பட்ட விதமாக நாம் முடிவெடுப்போம். இது தனிப்பட்ட முடிவாக இருப்பதால், ஒரே வீட்டில் வாழ்கிற நம்முடைய குடும்பத்தாரைத் தவிர வேறு யாரிடமும் இந்த முடிவைப் பற்றிப் பேச மாட்டோம். அந்த நபரோடு சபைக் கூட்டங்களிலும் ஊழியத்திலும் நாம் கலந்துகொண்டாலும், அவர் தன்னுடைய யோசனையையும் நடத்தையையும் மாற்றிக்கொள்ளும்போதுதான், அவரோடு சேர்ந்து மற்ற சமயங்களில் சகஜமாகப் பழக ஆரம்பிப்போம்.

a உதாரணத்துக்கு, ஒரு கிறிஸ்தவர், தன்னால் வேலை செய்ய முடிந்திருந்தும் அப்படிச் செய்ய மறுக்கலாம், யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரைக் காதலிப்பதில் விடாப்பிடியாக இருக்கலாம், சபையில் கொடுக்கப்படும் வழிநடத்துதலுக்கு எதிராகப் பேசலாம், பைபிள் போதனைகளுக்கு எதிராக வாக்குவாதம் செய்யலாம் அல்லது மற்றவர்களுக்குத் தீங்கை உண்டாக்குகிற மாதிரி கிசுகிசுக்கலாம். (1 கொ. 7:39; 2 கொ. 6:14; 2 தெ. 3:11, 12; 1 தீ. 5:13) இதுபோன்ற விஷயங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு இருப்பவர்கள்தான் “ஒழுங்கீனமாக” நடப்பவர்கள்.