படிப்புக் கட்டுரை 34
பாட்டு 107 கடவுள் காட்டும் அன்பின் வழி
மூப்பர்களே, பாவம் செய்தவர்களுக்கு அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்
“கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார்.”—ரோ. 2:4.
என்ன கற்றுக்கொள்வோம்?
சபையில் ஒருவர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால் மூப்பர்கள் எப்படி அவருக்கு உதவலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1. படுமோசமான பாவம் செய்த ஒருவருக்குக்கூட என்ன நம்பிக்கை இருக்கிறது?
கொரிந்து சபையில் ஒருவர் படுமோசமான பாவம் செய்தபோது சபை அதை எப்படிக் கையாள வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். போன கட்டுரையில் அதைப் பற்றிப் பார்த்தோம். பாவம் செய்தவர் மனம் திருந்தாததால் அவரைச் சபையிலிருந்து நீக்க வேண்டியிருந்தது. ஆனாலும், இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் காட்டுகிற மாதிரி, படுமோசமான பாவங்களைச் செய்தவர்களுடைய மனதைக்கூட கடவுளால் தொட முடியும்; அவர்களை மனம் திருந்தத் தூண்ட முடியும். (ரோ. 2:4) அதற்கு அவர் மூப்பர்களை எப்படிப் பயன்படுத்துவார்?
2-3. ஒரு சகோதரரோ சகோதரியோ படுமோசமான பாவம் செய்தது தெரியவந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
2 ஒருவர் பாவம் செய்துவிட்டார் என்பது மூப்பர்களுக்குத் தெரிந்தால்தான் அவர்களால் அவருக்கு உதவ முடியும். அப்படியென்றால், ஒரு சகோதரரோ சகோதரியோ படுமோசமான பாவம் செய்தது தெரியவந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? அதுவும் சபையிலிருந்து அவர் நீக்கப்படுகிற அளவுக்கு, அது பெரிய பாவமாக இருந்தால் என்ன செய்வது? மூப்பர்களிடம் போய்ப் பேசி உதவி கேட்கச் சொல்லி நாம் அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.—ஏசா. 1:18; அப். 20:28; 1 பே. 5:2.
3 ஆனால், பாவம் செய்தவர் மூப்பர்களிடம் பேச விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? நாமே மூப்பர்களிடம் போய்ப் பேசி அவருக்குத் தேவையான உதவி கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது, அவர்மேல் அன்பு இருப்பதைக் காட்டுவோம். ஏனென்றால், அவரை இழக்க நாம் விரும்பவில்லை. பாவம் செய்தவர் தன்னுடைய வழியை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை இன்னும் கெடுத்துக்கொள்வார். சபையின் நல்ல பெயரையும் கெடுத்துவிடுவார். யெகோவாமேலும் தவறு செய்தவர்மேலும் நமக்கு அன்பு இருப்பதால், நமக்குக் கஷ்டமாக இருந்தாலும், தைரியமாகப் போய் மூப்பர்களிடம் சொல்வோம்.—சங். 27:14.
படுமோசமான பாவம் செய்தவருக்கு மூப்பர்கள் எப்படி உதவலாம்?
4. படுமோசமான பாவத்தைச் செய்தவரிடம் பேசும் சமயத்தில் மூப்பர்களுடைய குறிக்கோள் என்ன?
4 ஒருவர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால், மூப்பர் குழுவில் இருக்கிற சகோதரர்கள் தங்கள் மத்தியிலிருந்து மூன்று தகுதியுள்ள மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த மூன்று பேரும் ஒரு குழுவாக செயல்படுவார்கள். a இந்த சகோதரர்கள், அடக்கமுள்ளவர்களாகவும், மனத்தாழ்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பாவம் செய்தவர் மனம் திருந்துவதற்கு அவர்கள் உதவ முயற்சி எடுப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால், மாற்றங்கள் செய்வதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் புரிந்துவைத்திருப்பார்கள். (உபா. 30:19) பாவம் செய்த எல்லாருமே கொடுக்கப்பட்ட உதவியை தாவீது மாதிரி நல்ல விதத்தில் எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது; அதையும் மூப்பர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். (2 சா. 12:13) சிலர் யெகோவா கொடுக்கிற ஆலோசனையை ஒதுக்கித்தள்ளலாம். (ஆதி. 4:6-8) ஆனாலும், முடிந்தவரை, பாவம் செய்தவரை மனம் திருந்தத் தூண்டுவதுதான் மூப்பர்களுடைய குறிக்கோள். பாவம் செய்தவரிடம் பேசுகிற சமயத்தில், என்னென்ன நியமங்கள் மூப்பர்களுக்கு உதவும்?
5. பாவம் செய்தவர்களிடம் பேசும்போது எந்த ஆலோசனையை மூப்பர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்? (2 தீமோத்தேயு 2:24-26) (படத்தையும் பாருங்கள்.)
5 பாவம் செய்தவரை காணாமல்போன ஆடாக, யெகோவாவின் பார்வையில் மதிப்புள்ள ஆடாக, மூப்பர்கள் பார்க்கிறார்கள். (லூக். 15:4, 6) அதனால், அவரிடம் பேசும்போது கடுமையாகப் பேச மாட்டார்கள், அவரை அன்பில்லாமல் நடத்த மாட்டார்கள். வெறுமனே கேள்விகளைக் கேட்டு உண்மைகளை வாங்கினால் போதும் என்ற எண்ணத்தோடு பேச மாட்டார்கள். அதற்குப் பதிலாக, 2 தீமோத்தேயு 2:24-26-ல் சொல்லியிருக்கிற குணங்களைக் காட்டுவார்கள். (வாசியுங்கள்.) பாவம் செய்தவருடைய மனதைத் தொடுவதற்கு முயற்சி எடுக்கும்போது, மூப்பர்கள் சாந்தமாகவும், கனிவாகவும், அன்பாகவும் இருப்பார்கள்.
6. பாவம் செய்தவரைச் சந்திப்பதற்கு முன்பு மூப்பர்கள் எப்படி தங்களுடைய இதயத்தைத் தயார்படுத்துகிறார்கள்? (ரோமர் 2:4)
6 யெகோவா மாதிரியே யோசிப்பதற்கு மூப்பர்கள் தங்களுடைய இதயத்தைத் தயார்படுத்துகிறார்கள். பாவம் செய்தவர்களிடம் யெகோவா மாதிரி நடந்துகொள்ள மூப்பர்கள் முயற்சி எடுக்கிறார்கள். “கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார்” என்று பவுல் சொன்ன வார்த்தைகளை அவர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். (ரோமர் 2:4-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்துவின் கீழ், மூப்பர்கள் முதலில் மேய்ப்பர்களாக இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். (ஏசா. 11:3, 4; மத். 18:18-20) பாவம் செய்தவரை சந்திப்பதற்கு முன்பு, மூப்பர்களின் அந்தக் குழு தங்களுடைய குறிக்கோளைப் பற்றி ஜெபம் செய்து யோசித்துப் பார்ப்பார்கள். பாவம் செய்தவரை மனம் திருந்தத் தூண்டுவதுதான் அவர்களுடைய குறிக்கோள். பைபிளையும் பிரசுரங்களையும் பயன்படுத்தி மூப்பர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். புரிந்துகொள்ளும் திறனைக் கேட்டு ஜெபம் செய்வார்கள். பாவம் செய்தவருடைய பின்னணியைப் பற்றி என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று யோசித்துப் பார்ப்பார்கள். அவருக்குத் தப்பான எண்ணங்கள் வந்ததற்கும், அந்தத் தவறைச் செய்ததற்கும் அவருடைய பின்னணி எப்படிக் காரணமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பார்கள்.—நீதி. 20:5.
7-8. பாவம் செய்தவரை சந்தித்துப் பேசும்போது மூப்பர்கள் எப்படி யெகோவா மாதிரி பொறுமையாக நடந்துகொள்ளலாம்?
7 மூப்பர்கள் யெகோவா மாதிரியே பொறுமையாக நடந்துகொள்கிறார்கள். பைபிள் காலங்களில், பாவம் செய்தவர்களை யெகோவா எப்படி நடத்தினார் என்பதை அவர்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, யெகோவா காயீனிடம் பொறுமையாக நடந்துகொண்டார். பாவம் செய்தால் வருகிற விளைவுகளைப் பற்றி எச்சரித்தார். அவன் கீழ்ப்படிந்தால் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார். (ஆதி. 4:6, 7) அதேமாதிரி, தாவீது ராஜாவுக்கும் நாத்தான் தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி யெகோவா ஆலோசனை கொடுத்தார். நாத்தான் ஒரு அழகான உதாரணத்தைச் சொல்லி தாவீதின் மனதைத் தொட்டார். (2 சா. 12:1-7) வழிவிலகிப்போன இஸ்ரவேல் மக்களிடம், யெகோவா “திரும்பத் திரும்ப” தன்னுடைய தீர்க்கதரிசிகளை ‘அனுப்பினார்.’ (எரே. 7:24, 25) மக்கள் மனம் திருந்தி வந்த பிறகு அவர்களுக்கு உதவலாம் என்று யெகோவா காத்திருக்கவில்லை. அவரே முதல்படி எடுத்து வைத்தார், அவர்களை மனம் திருந்தத் தூண்டினார்.
8 மூப்பர்களும் யெகோவா மாதிரி நடந்துகொள்கிறார்கள். 2 தீமோத்தேயு 4:2 சொல்வதுபோல், படுமோசமான பாவத்தைச் செய்தவருக்கு உதவி செய்யும் சமயத்தில் “பொறுமையோடு” நடந்துகொள்கிறார்கள். மூப்பர்கள் ஒருவேளை கோபப்பட்டாலோ, எரிச்சல் அடைந்தாலோ அவர்கள் கொடுக்கிற ஆலோசனையை அந்த நபர் கேட்காமல் போய்விடலாம். மனம் திருந்தவும் மறுத்துவிடலாம். சரியானதைச் செய்யத் தூண்டுவதற்கு, மூப்பர்கள் எப்போதுமே அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
9-10. பாவம் செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று யோசிக்க வைக்க, மூப்பர்கள் எப்படிப் பாவம் செய்தவருக்கு உதவலாம்?
9 பாவம் செய்ய என்ன சூழ்நிலைகள் காரணமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள மூப்பர்கள் முயற்சி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, தவறாமல் பைபிள் படிக்காததாலோ ஊழியத்துக்கு ஒழுங்காக போகாததாலோ, யெகோவாவோடு அவருக்கு இருக்கிற பந்தம் பலவீனமாகிவிட்டதா? அடிக்கடி ஜெபம் செய்யாமல் போய்விட்டாரா அல்லது வெறுமனே கடமைக்காக ஜெபம் செய்துகொண்டிருந்தாரா? கெட்ட ஆசைகளை எதிர்த்து போராடுவதற்குப் பதிலாக, அதற்கு இடம்கொடுத்துக் கொண்டிருந்தாரா? எப்படிப்பட்ட ஆட்களோடு நேரம் செலவு செய்தார், என்ன மாதிரி பொழுதுபோக்கில் ஈடுபட்டார்? இது எப்படி அவருடைய மனதைப் பாதித்தது? தான் செய்த காரியம் யெகோவாவின் மனதை எப்படிப் பாதித்திருக்கும் என்று உணருகிறாரா?
10 யெகோவாவோடு இருக்கும் பந்தம் பலவீனமானதற்கும் பாவம் செய்ததற்கும் எது காரணமாக இருந்தது என்பதை பாவம் செய்தவர் புரிந்துகொள்ள மூப்பர்கள் அன்பாக உதவ வேண்டும். அதற்கு அர்த்தமுள்ள சில கேள்விகளைக் கேட்கலாம். (நீதி. 20:5) அதேசமயத்தில், தெரிந்துகொள்ள அவசியமில்லாத விஷயங்களைப் பற்றி, ஒருவேளை அவருடைய சில தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி, மூப்பர்கள் கேள்விகள் கேட்க வேண்டியதில்லை. தான் செய்த செயலைப் பற்றியும்... அது ஏன் ஒரு பெரிய பாவம் என்பதைப் பற்றியும்... அவரை யோசிக்க வைப்பதற்கு மூப்பர்கள் உதாரணங்களைப் பயன்படுத்தலாம்—தாவீதுக்கு நாத்தான் சொன்ன மாதிரி! ஒருவேளை, முதல் சந்திப்பிலேயே தான் செய்த பாவத்தை நினைத்து அந்த நபர் உண்மையிலேயே வருத்தப்பட ஆரம்பிக்கலாம், மனமும் திருந்தலாம்!
11. பாவம் செய்தவர்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்?
11 மூப்பர்கள் இயேசு மாதிரியே நடந்துகொள்ள முயற்சி எடுக்கிறார்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுலிடம் யோசிக்க வைக்கிற இந்தக் கேள்வியைக் கேட்டார்: “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலமாக, தான் செய்துகொண்டு இருந்தது தவறு என்பதை சவுல் புரிந்துகொள்ள இயேசு உதவினார். (அப். 9:3-6) அதேமாதிரி, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் வருகிற “அந்த யேசபேலை” பற்றி இயேசு சொல்லும்போது, “மனம் திருந்த நான் அவளுக்கு அவகாசம் கொடுத்தேன்” என்று சொன்னார்.—வெளி. 2:20, 21.
12-13. பாவம் செய்தவருக்கு மூப்பர்கள் எப்படி மனம் திருந்த நேரம் கொடுக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
12 பாவம் செய்தவர் மனம் திருந்தவே மாட்டார் என்று அவசரப்பட்டு முடிவு செய்யாமல் இருப்பதன் மூலம், மூப்பர்கள் இயேசு மாதிரி நடந்துகொள்கிறார்கள். பாவம் செய்த சிலர், அந்தக் குழுவின் முதல் சந்திப்பிலேயே மனம் திருந்தலாம். ஆனால், வேறு சிலருக்கு இன்னும் நேரம் தேவைப்படலாம். அதனால், மூப்பர்கள் ஒருதடவைக்கும் மேல் அந்த நபரைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை, முதல் சந்திப்புக்குப் பிறகு, அவர் மூப்பர்கள் சொன்ன விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசிக்க ஆரம்பிக்கலாம். யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டு மனத்தாழ்மையாக ஜெபம் செய்யலாம். (சங். 32:5; 38:18) அதனால், அடுத்த ஒரு சந்திப்பில், அவரிடம் மாற்றங்கள் தெரியலாம்; முதல் சந்திப்பில் இருந்த மனப்பான்மை மாறியிருக்கலாம்.
13 பாவம் செய்தவரை மனம் திருந்தத் தூண்டுவதற்காக மூப்பர்கள் அன்போடும் அனுதாபத்தோடும் நடந்துகொள்கிறார்கள். தாங்கள் எடுக்கிற முயற்சிகளை ஆசீர்வதிக்கச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்கள். பாவம் செய்தவரும் புத்தி தெளிந்து, மனம் திருந்துவார் என்று நம்புகிறார்கள்.—2 தீ. 2:25, 26.
14. பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தும்போது அதற்கான புகழ் யாருக்குப் போய்ச் சேருகிறது, ஏன்?
14 பாவம் செய்தவர் மனம் திருந்தும்போது நமக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. (லூக். 15:7, 10) அதற்கான புகழ் யாருக்குப் போய்ச் சேர வேண்டும்? மூப்பர்களுக்கா? பாவம் செய்தவர்களைப் பற்றிப் பவுல் என்ன எழுதினார் என்று பாருங்கள்: ‘மனம் திருந்த . . . கடவுள் ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.’ (2 தீ. 2:25) அப்படியென்றால், ஒருவருடைய யோசனையும் மனப்பான்மையும் மாறுவதற்கு யெகோவாதான் உதவுகிறார், எந்த மனிதனும் அல்ல! ஒருவர் மனம் திருந்திய பிறகு, அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது என்று பவுல் விளக்குகிறார். அதாவது, சத்தியத்தைப் பற்றி அவரால் இன்னும் திருத்தமாகத் தெரிந்துகொள்ள முடியும், அவருடைய புத்தி தெளியும், சாத்தானுடைய கண்ணியில் இருந்தும் அவர் விடுபடலாம்.—2 தீ. 2:26.
15. பாவம் செய்தவர் மனம் திருந்திய பிறகு மூப்பர்கள் எப்படி அவருக்குத் தொடர்ந்து உதவலாம்?
15 பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தும்போது, அந்தக் குழு அவருக்கு மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்ய ஏற்பாடு செய்வார்கள். இப்படி, சாத்தானுடைய கண்ணிகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தன்னுடைய பாதையை நேராக்குவதற்கும் அவருக்கு உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும். (எபி. 12:12, 13) உண்மைதான், அவர் செய்த பாவத்தைப் பற்றி மூப்பர்கள் மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால், சபையில் இருக்கிறவர்கள் ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்குமா?
“எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்”
16. 1 தீமோத்தேயு 5:20-ல் “எல்லாருக்கும்” என்று சொன்னபோது பவுல் யாரை மனதில் வைத்துச் சொன்னார்?
16 1 தீமோத்தேயு 5:20-ஐ வாசியுங்கள். பாவம் செய்கிறவர்களை “எல்லாருக்கும் முன்னால்” கண்டிக்க வேண்டும் என்று தீமோத்தேயுவுக்குப் பவுல் சொன்னார். அப்படியென்றால், பாவம் செய்தவரை எப்போதுமே சபையில் இருக்கும் எல்லார் முன்பும் கண்டிக்க வேண்டும் என்று பவுல் அர்த்தப்படுத்தினாரா? இல்லை. “எல்லாருக்கும்” என்று சொன்னபோது, அந்தப் பாவத்தைப் பற்றித் தெரிந்த எல்லாரையும்தான் பவுல் அர்த்தப்படுத்தினார். ஒருவேளை, அவர்கள் அதைக் கண்ணால் பார்த்தவர்களாக இருக்கலாம். அல்லது, பாவம் செய்தவர், தான் செய்த பாவத்தைப் பற்றி யாரிடம் சொன்னாரோ அவராக இருக்கலாம். இந்த விஷயம் கையாளப்பட்டுவிட்டதையும் பாவம் செய்தவருக்கு கண்டிப்பு கொடுக்கப்பட்டிருப்பதையும் மூப்பர்கள் அவர்களிடம் மட்டும் சொல்வார்கள்.
17. ஒருவர் செய்த பாவம், சபையில் எல்லாருக்கும் தெரியவந்திருந்தாலோ தெரியவர வாய்ப்பு இருந்தாலோ என்ன அறிவிப்பு செய்யப்பட வேண்டும், ஏன்?
17 சில சந்தர்ப்பங்களில், ஒருவர் செய்த பாவம், சபையில் பரவலாகத் தெரியவந்திருக்கலாம். அல்லது, தெரியவர வாய்ப்பு இருக்கலாம். அந்த மாதிரி சமயத்தில் “எல்லாருக்கும்” என்று சொல்லும்போது அது முழு சபையையும் அர்த்தப்படுத்தும். அப்போது, ஒரு சகோதரரோ சகோதரியோ கண்டிக்கப்பட்டிருப்பதை ஒரு மூப்பர் சபைக்கு அறிவிப்பு செய்வார். ஏன்? பவுல் அதற்குப் பதில் சொல்கிறார்: பாவத்தில் விழாமல் இருக்க “அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.”
18. ஞானஸ்நானம் எடுத்த மைனர் பிள்ளைகள் படுமோசமான பாவத்தைச் செய்தால், மூப்பர்கள் அதை எப்படிக் கையாளுவார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
18 ஞானஸ்நானம் எடுத்த மைனர் பிள்ளைகள், அதாவது 18 வயதுக்கும் கீழே இருக்கிற பிள்ளைகள், ஒரு படுமோசமான பாவத்தைச் செய்தால் மூப்பர்கள் என்ன செய்வார்கள்? சபையின் மூப்பர் குழு, இரண்டு மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த இரண்டு மூப்பர்கள், அந்த மைனர் பிள்ளையோடும், சாட்சியாக இருக்கிற பெற்றோரோடும் பேசுவார்கள். b அந்தப் பிள்ளை மனம் திருந்த உதவுவதற்கு பெற்றோர் ஏற்கெனவே என்னென்ன படிகள் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள மூப்பர்கள் முயற்சி செய்வார்கள். அந்த மைனர் பிள்ளை நல்ல மனப்பான்மையைக் காட்டினால்... மனம் திருந்துவதற்கு பிள்ளையுடைய பெற்றோர்களும் தொடர்ந்து உதவி செய்துவந்தால்... அதற்குமேல் இந்த விஷயத்தில் வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று அந்த இரண்டு மூப்பர்கள் முடிவு செய்யலாம். சொல்லப்போனால், பிள்ளைகளை அன்பாகக் கண்டித்து திருத்துகிற பொறுப்பை பெற்றோருக்குத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார். (உபா. 6:6, 7; நீதி. 6:20; 22:6; எபே. 6:2-4) இருந்தாலும், அந்த மைனர் பிள்ளைக்குத் தேவையான உதவி கொடுக்கப்படுகிறதா என்பதை மூப்பர்கள் பெற்றோரிடம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஆனால், ஞானஸ்நானம் எடுத்த ஒரு மைனர் பிள்ளை மனம் திருந்தாமல் தொடர்ந்து தவறு செய்துகொண்டே இருந்தால் என்ன ஆகும்? அந்த மாதிரி சமயத்தில், மூப்பர்களின் ஒரு குழு அந்தப் பிள்ளையோடும், சாட்சியாக இருக்கிற பெற்றோரோடும் சேர்ந்து பேசுவார்கள்.
“யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்”
19. மூப்பர்கள் எப்படி யெகோவா மாதிரியே நடந்துகொள்ள முயற்சி செய்யலாம்?
19 இந்தக் குழுக்களில் சேவை செய்கிற மூப்பர்களுக்கு, சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை யெகோவா கொடுத்திருக்கிறார். (1 கொ. 5:7) பாவம் செய்த நபரை, முடிந்தவரை மனம் திருந்தத் தூண்ட அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அந்த நபர் மனம் திருந்துவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் யெகோவா மாதிரி நடந்துகொள்ள விரும்புகிறார்கள். “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்.” (யாக். 5:11) அப்போஸ்தலன் யோவானுக்கும் இதே மாதிரி ஒரு எண்ணம்தான் இருந்தது. அவர் இப்படி எழுதினார்: “சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்.”—1 யோ. 2:1.
20. இந்தத் தொடரின் கடைசிக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
20 வருத்தமான விஷயம் என்னவென்றால், ஒரு கிறிஸ்தவர் சிலசமயத்தில் மனம் திருந்த மறுக்கலாம். அந்த மாதிரி சமயத்தில் அவர் சபையிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தை மூப்பர்கள் எப்படிக் கையாள வேண்டும்? இதைப் பற்றி இந்தத் தொடரின் கடைசிக் கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு
a முன்பு இந்தக் குழுவை நீதி விசாரணைக் குழு என்று சொன்னோம். ஆனால், இனிமேலும் இப்படிச் சொல்ல மாட்டோம். ஏனென்றால், நீதி விசாரணை செய்வது இந்தக் குழு செய்கிற வேலைகளில் வெறுமனே ஒன்று மட்டும்தான். அதனால், இனிமேல் இந்தக் குழுவை மூப்பர்களின் ஒரு குழு என்று மட்டுமே சொல்வோம்.
b இங்கே பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டிருப்பது, யாரெல்லாம் மைனர் பிள்ளையின் சட்டப்பூர்வ பாதுகாவலர்களாக அல்லது பெற்றோரின் இடத்தில் இருந்து பொறுப்புகளை எடுத்துச்செய்கிறவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கும் பொருந்தும்.