படிப்புக் கட்டுரை 34
யெகோவா நல்லவர் என்பதை “ருசித்து” பாருங்கள்
“யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவரிடம் தஞ்சம் அடைகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—சங். 34:8.
பாட்டு 117 நல்மனம்
இந்தக் கட்டுரையில்... *
1-2. சங்கீதம் 34:8 சொல்கிறபடி, யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பார்ப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு உணவைச் சாப்பிடும்படி ஒருவர் உங்களிடம் சொல்கிறார். அது எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்கிறீர்கள். அதன் வாசனையை முகர்ந்து பார்க்கிறீர்கள், அதை எப்படிச் செய்தார்கள் என்றும் கேட்கிறீர்கள். அதன் ருசி எப்படி இருக்கும் என்று மற்றவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்கிறீர்கள். இப்படி எல்லாம் செய்தால், அந்த உணவைப் பற்றி ஓரளவு உங்களால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அது எந்தளவுக்கு ருசியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அதைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
2 யெகோவா எவ்வளவு நல்லவர் என்று ருசித்துப் பார்க்கிற விஷயத்திலும் இதுதான் உண்மை. பைபிளையும் பிரசுரங்களையும் படிக்கும்போதும், மற்றவர்களுடைய அனுபவங்களைக் கேட்கும்போதும் அவரைப் பற்றி ஓரளவுக்கு உங்களால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், உண்மையிலேயே அவர் எவ்வளவு நல்லவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் அவரை “ருசித்து” பார்க்க வேண்டும். (சங்கீதம் 34:8-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, முழுநேர சேவை செய்வதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளலாம். கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைத்தால் உங்களுடைய மற்ற தேவைகள் எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும் என்று இயேசு கொடுத்த வாக்குறுதியை நீங்கள் நிறைய தடவை படித்திருப்பீர்கள். ஆனால், அது எவ்வளவு நிஜம் என்பதை அனுபவித்திருக்க மாட்டீர்கள். (மத். 6:33) அதை அனுபவிக்க வேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் எளிமையாக்க வேண்டும். அதாவது, உங்களுடைய செலவுகளையும் நீங்கள் வேலை செய்கிற நேரத்தையும் குறைத்துக்கொண்டு, ஊழியத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, இயேசு கொடுத்த வாக்குறுதி எவ்வளவு உண்மை என்பது உங்களுக்குத் தெரியவரும். யெகோவா எவ்வளவு நல்லவர் என்பதை நீங்களாகவே “ருசித்து” பார்க்க முடியும்.
3. சங்கீதம் 16:1, 2 சொல்கிறபடி, யாருக்கெல்லாம் யெகோவா நல்லது செய்கிறார்?
3 யெகோவா “எல்லாருக்கும் நல்லது செய்கிறார்.” அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கும்கூட நல்லது செய்கிறார். (சங். 145:9; மத். 5:45) முக்கியமாக, அவரை நேசிப்பவர்களுக்கும் அவருக்கு முழுமனதோடு சேவை செய்பவர்களுக்கும் ஏராளமான ஆசீர்வாதங்களைத் தருகிறார். (சங்கீதம் 16:1, 2-ஐ வாசியுங்கள்.) அவர் நமக்கு என்னென்ன வழிகளில் நல்லது செய்திருக்கிறார் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
4. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நாம் முயற்சி எடுத்தபோது அவர் நமக்கு எப்படியெல்லாம் நல்லது செய்தார்?
கொலோ. 1:21) நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தபோது, அவர் எவ்வளவு நல்லவர் என்பது நமக்கு இன்னும் நன்றாகவே புரிந்தது. எப்படியென்றால், அவர் நமக்கு நல்ல மனசாட்சி கொடுத்தார். அவரிடம் ஒரு நல்ல நட்பு வைப்பதற்கு வழி திறந்துவைத்தார்.—1 பே. 3:21.
4 ஒவ்வொரு தடவையும் யெகோவா சொல்கிறபடி நாம் செய்யும்போது, நம் வாழ்க்கையில் நல்லதுதான் நடந்திருக்கிறது. யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை நேசிக்க ஆரம்பித்தபோது அவருக்குப் பிடிக்காத விஷயங்களை யோசிக்காமல் இருப்பதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் அவர் உதவினார். (5. யெகோவா நல்லவர் என்பதை ஊழியத்தில் நாம் எப்படி ருசித்துப் பார்க்கிறோம்?
5 யெகோவா நல்லவர் என்பதை ஊழியம் செய்யும்போதும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? உங்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கிறதா? யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேருக்கு அது இருக்கிறது. நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, முன்பின் தெரியாத ஒருவருடைய வீட்டுக் கதவைத் தட்டி, அவர் கேள்விப்படாத ஒரு செய்தியைச் சொல்வதைப் பற்றி நீங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால், இன்றைக்கு அதைத் தவறாமல் செய்துகொண்டு வருகிறீர்கள். அதுவும், யெகோவாவின் உதவியோடு அதை நன்றாக அனுபவித்து செய்துகொண்டு வருகிறீர்கள். இன்னும் சில வழிகளிலும் யெகோவா உங்களுக்கு உதவுகிறார். ஊழியத்தில் உங்களிடம் யாராவது கடுகடுப்பாகப் பேசியிருக்கலாம். அப்போது, அமைதியாக இருப்பதற்கு யெகோவா உங்களுக்கு உதவியிருப்பார். நீங்கள் சொன்ன செய்தியை ஆர்வமாகக் கேட்கிறவர்களுக்குச் சரியான வசனத்தை எடுத்துக் காட்ட உதவியிருப்பார். அதுமட்டுமல்ல, உங்களுடைய ஊழியப் பகுதியில் இருப்பவர்கள் நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காதபோதும் விடாமல் பிரசங்கிப்பதற்கு உங்களுக்குப் பலம் கொடுத்திருப்பார்.—எரே. 20:7-9.
6. யெகோவா கொடுக்கிற பயிற்சியிலிருந்து அவர் நல்லவர் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
6 ஊழியம் செய்வதற்கு யெகோவா நமக்குப் பயிற்சி கொடுக்கும்போதும் அவர் எவ்வளவு நல்லவர் என்பதை நாம் ருசித்துப் பார்க்கிறோம். (யோவா. 6:45) ஊழியத்தை நாம் நன்றாகச் செய்வதற்கு, வார நாட்களில் நடக்கும் கூட்டத்தில் “இப்படிப் பேசலாம்” என்ற பகுதியில் நல்ல நல்ல குறிப்புகளை யெகோவா சொல்லிக்கொடுக்கிறார். ஆரம்பத்தில் அதிலிருப்பதுபோல் செய்வதற்கு நாம் தயங்கலாம். ஆனால், அப்படிச் செய்யும்போது அது எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இதுவரைக்கும் நாம் செய்யாத வெவ்வேறு வழிகளில் ஊழியம் செய்யச் சொல்லி நமக்கு உற்சாகம் கிடைக்கிறது. நமக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை மட்டும் செய்யாமல் புதுப் புது வழிகளில் ஊழியம் செய்யும்போது யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். எப்படியெல்லாம் ஆசீர்வதிப்பார்? ஊழியத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்கு நாம் என்னவெல்லாம் செய்யலாம்? இவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யெகோவாவை நம்புகிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
7. ஊழியத்தை அதிகமாகச் செய்யும்போது யெகோவா உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதிப்பார்?
7முன்பைவிட இன்னும் யெகோவாவிடம் நெருங்கிப் போவோம். சாமுவல் * என்ற மூப்பருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவரும் அவருடைய மனைவியும் இப்போது கொலம்பியாவில் இருக்கிறார்கள். அவர்கள் முன்பிருந்த சபையில் சந்தோஷமாக பயனியர் சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இன்னும் யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தேவை அதிகம் இருக்கிற இடத்துக்குப் போக வேண்டும் என்று நினைத்தார்கள். அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. “மத்தேயு 6:33-ல இருக்கிற மாதிரி நாங்க செஞ்சோம். தேவை இல்லாத பொருள்கள வாங்கறத நிறுத்துனோம். ஆனா, எங்க அபார்ட்மென்ட்ட விட்டுட்டு வர்றதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எங்களுக்காகவே கட்டின மாதிரி அது இருந்துச்சு. அந்த வீட்டுக்கு கட்டவேண்டிய தவணையயும் கட்டி முடிச்சிருந்தோம்” என்று சாமுவல் சொல்கிறார். அந்தப் புது இடத்தில், முன்பு கிடைத்த வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை வைத்து அவர்களால் திருப்தியாக இருக்க முடிந்தது. “யெகோவா எங்கள எப்படி வழிநடத்தறாருன்னும் எங்க ஜெபங்களுக்கு எப்படி பதில் கொடுக்கறாருன்னும் நாங்க பாத்தோம். அவர் எங்கள பாத்து சந்தோஷப்படறாருன்னும் புரிஞ்சுகிட்டோம். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு அவரோட அன்ப அனுபவிச்சோம்” என்றும் சாமுவல் சொல்கிறார். ஊழியத்தை அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? அப்படிச் செய்தால், யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப்போவீர்கள். அவருடைய அன்பான அரவணைப்பையும் அனுபவிப்பீர்கள்.—சங். 18:25.
8. ஈவான்-விக்டோரியா தம்பதியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
8சந்தோஷம் கிடைக்கும். ஈவானும் அவருடைய மனைவி விக்டோரியாவும் கிர்கிஸ்தானில் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். எந்த நியமிப்பு கிடைத்தாலும் அதைச் செய்யத் தயாராக இருப்பதற்காக தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்திருந்தார்கள். கட்டுமான வேலை செய்வதற்கும் தயாராக இருந்தார்கள். “எந்த நியமிப்பு கிடச்சாலும் அத முழு மூச்சோட செஞ்சோம். நாள் முழுக்க வேல செஞ்சதால எங்களுக்கு ரொம்ப களைப்பா இருக்கும். ஆனா, கடவுளோட அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக எங்களோட சக்திய எல்லாம் செலவு செய்யறோங்கற திருப்தியும் சந்தோஷமும் எங்களுக்கு கிடைச்சது. நிறைய நண்பர்கள் எங்களுக்கு கிடைச்சாங்க. பசுமையான நினைவுகள் எங்களுக்கு கிடைச்சது” என்று ஈவான் சொல்கிறார்.—9. கஷ்டமாக இருந்தாலும், ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்காக ஒரு சகோதரி என்ன செய்கிறார், அதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது?
9 கஷ்டமான சூழ்நிலைகள் இருந்தாலும் யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும். மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மிரா என்ற வயதான சகோதரியைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர் டாக்டராக இருந்தார், அவருடைய கணவர் இறந்துபோயிருந்தார். அவர் வேலையிலிருந்து ரிட்டையர்டான பின்பு, பயனியர் சேவையை ஆரம்பித்தார். அவருக்கு ஆர்த்தரைட்டீஸ் என்ற மூட்டு வீக்கம் இருப்பதால், ஒரு மணிநேரத்துக்குமேல் அவரால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியாது. ஆனால், ரொம்ப நேரம் பொது ஊழியம் செய்ய முடிந்தது. அப்படிச் செய்ததால் நிறைய மறுசந்திப்புகளும் பைபிள் படிப்புகளும் கிடைத்தன. அவர்களில் சிலருக்கு அவர் போன் செய்து பேசுகிறார். யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிராவுக்கு எப்படி வந்தது? “யெகோவாவயும் இயேசு கிறிஸ்துவயும் நான் ரொம்ப நேசிக்கிறேன். ‘உங்களுக்கு நிறைய செய்ய உதவுங்க’ன்னு யெகோவாகிட்ட நான் அடிக்கடி ஜெபம் செய்வேன்” என்று அவர் சொல்கிறார்.—மத். 22:36, 37.
10. ஒன்று பேதுரு 5:10 சொல்கிறபடி, யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு என்ன கிடைக்கும்?
10யெகோவாவிடமிருந்து இன்னும் நிறைய பயிற்சி கிடைக்கும். மொரிஷியஸில் பயனியர் சேவை செய்யும் கென்னிக்கு அப்படிப்பட்ட பயிற்சி கிடைத்தது. அவர் சத்தியத்தைத் தெரிந்துகொண்ட பின்பு, பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டார், ஞானஸ்நானம் எடுத்தார். பின்பு, ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தார். “‘இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!’னு சொன்ன ஏசாயா தீர்க்கதரிசி மாதிரியே நானும் வாழணும்னு நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். (ஏசா. 6:8) கென்னி நிறைய கட்டுமான வேலைகளைச் செய்தார். அவருடைய மொழியில் நம்முடைய பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கும் வேலையையும் செய்தார். “எனக்கு கிடைச்ச பயிற்சியில இருந்து, என்னோட நியமிப்புகள நல்லா செய்றதுக்கு தேவையான திறமைகள கத்துகிட்டேன்” என்று அவர் சொல்கிறார். ஆனால், இன்னும் சில விஷயங்களையும் அவர் கற்றுக்கொண்டார். “என்னோட வரம்புகள நான் புரிஞ்சுகிட்டேன். யெகோவாவுக்கு இன்னும் நல்லா சேவை செய்றதுக்கு என்னென்ன குணங்களை வளர்த்துக்கணுங்கறதயும் புரிஞ்சுகிட்டேன்” என்று அவர் சொல்கிறார். (1 பேதுரு 5:10-ஐ வாசியுங்கள்.) யெகோவா உங்களுக்கு நிறைய பயிற்சி கொடுப்பதற்காக நீங்களும் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய முடியுமா?
11. ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்கு தென் கொரியாவில் இருக்கிற சகோதரிகள் என்ன முயற்சி செய்தார்கள், என்ன பலன் கிடைத்தது? (அட்டைப் படத்தையும் பாருங்கள்.)
11 ரொம்ப வருஷங்களாக யெகோவாவின் சாட்சிகளாக இருப்பவர்களுக்கும்கூட புதுப் புது வழிகளில் ஊழியம் செய்வதற்குப் பயிற்சி கிடைக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் ஒருதடவை நடந்த சம்பவத்தைப் பற்றி தென் கொரியாவில் உள்ள மூப்பர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “உடம்பு சரியில்லாததால அவ்வளவா ஊழியம் செய்ய முடியாதுன்னு நினைச்சவங்ககூட இப்போ வீடியோ கான்ஃபிரன்சிங் வழியா ஊழியம் செய்றாங்க. 80 வயச தாண்டின மூணு சகோதரிகள் இந்த தொழில்நுட்பத்த எல்லாம் கத்துகிட்டு முடிஞ்சளவுக்கு எல்லா நாளும் ஊழியம் செய்றாங்க.” (சங். 92:14, 15) ஊழியத்தை அதிகமாகச் செய்து யெகோவா நல்லவர் என்று ருசித்துப் பார்க்க நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? உங்களுடைய குறிக்கோளை அடைவதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
குறிக்கோளை எட்டிப் பிடிக்க என்ன செய்யலாம்?
12. தன்னை நம்பியிருப்பவர்களுக்கு யெகோவா என்ன வாக்குறுதி கொடுக்கிறார்?
12யெகோவாவை நம்பியிருக்க கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவை நம்பி அவருக்கு நன்றாகச் சேவை செய்வதற்கு நம்மால் முடிந்ததை எல்லாம் செய்யும்போது மல். 3:10) கொலம்பியாவில் இருக்கிற ஃபேபியோலா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஞானஸ்நானம் எடுத்தவுடனேயே ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால், அவருடைய கணவரும் மூன்று பிள்ளைகளும் அவருடைய வருமானத்தை நம்பிதான் இருந்தார்கள். அதனால், ஒழுங்கான பயனியர் சேவையை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால், ரிட்டையர்ட் ஆன பின்பு பயனியர் சேவை செய்ய உதவச் சொல்லி யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “பொதுவா, பென்ஷன் தொகை வர்றதுக்கு ரொம்ப நாள் ஆகும். ஆனா, நான் அதுக்காக விண்ணப்பிச்ச ஒரு மாசத்திலயே எனக்கு கிடைக்க ஆரம்பிச்சது. உண்மையிலேயே அது ஒரு அற்புதம்தான்!” இரண்டு மாதத்துக்குப் பின்பு அவர் பயனியர் சேவையை ஆரம்பித்தார். இப்போது, அவருக்கு 70 வயதுக்குமேல் ஆகிறது. கிட்டத்தட்ட 20 வருஷத்துக்குமேல் ஒழுங்கான பயனியர் சேவையைச் செய்துகொண்டிருக்கிறார். எட்டு பேர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு உதவியிருக்கிறார். “சில சமயங்கள்ல நான் சோர்ந்து போயிடுவேன். ஆனா, ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்றதுக்கு யெகோவா எனக்கு பலம் கொடுக்கறார்” என்று அவர் சொல்கிறார்.
அவர் ஆசீர்வாதங்களைப் பொழிவார். (13-14. யெகோவாவை நம்பியிருக்கவும் உங்களுடைய குறிக்கோள்களை எட்டிப் பிடிக்கவும் எந்தெந்த அனுபவங்கள் உங்களுக்கு உதவும்?
13யெகோவாவை நம்பியிருந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவின் சேவையில் கடினமாக உழைத்த நிறைய பேருடைய அனுபவங்கள் பைபிளில் இருக்கின்றன. பெரும்பாலான சமயங்களில், இந்த ஊழியர்கள் முதல்படி எடுத்து வைத்த பின்புதான் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். உதாரணத்துக்கு, ஆபிரகாம் அவருடைய ஊரைவிட்டுப் போன பின்புதான் யெகோவா அவரை ஆசீர்வதித்தார். அதுவும், போகும் “இடம் எங்கே இருக்கிறதென்று தெரியாவிட்டாலும்” அவர் போனார். (எபி. 11:8) யாக்கோபு தேவதூதரோடு விடாமல் போராடிய பின்புதான் அவருக்கு விசேஷமான ஓர் ஆசீர்வாதம் கிடைத்தது. (ஆதி. 32:24-30) இஸ்ரவேல் மக்கள், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழையப்போகும் சமயத்தில் கரைபுரண்டோடிய யோர்தான் நதியில் குருமார்கள் காலடி எடுத்துவைத்த பின்புதான் அந்த மக்களால் ஆற்றைக் கடக்க முடிந்தது.—யோசு. 3:14-16.
14 யெகோவாவை நம்பி குறிக்கோள்களை அடைந்த சகோதர சகோதரிகளுடைய அனுபவங்களைப் படிப்பதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். சகோதரர் பேட்டனையும் அவருடைய மனைவி டயானாவையும் பற்றிப் பார்க்கலாம். ஊழியத்தை அதிகமாகச் செய்து கொண்டிருக்கிறவர்களுடைய அனுபவங்களைப் படிப்பது அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்துக்கு, “தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்” * என்ற தொடர் கட்டுரைகளில் வருகிற அனுபவங்களையும் இதுபோன்ற மற்ற கட்டுரைகளையும் படிப்பார்கள். “அதில இருக்கிற அனுபவங்கள எல்லாம் படிக்கிறப்ப, ருசியான சாப்பாடு சாப்பிடற ஒருத்தர பாத்துகிட்டு இருக்கிற மாதிரி இருந்துச்சு. அதையெல்லாம் எந்தளவுக்கு படிச்சோமோ அந்தளவுக்கு ‘யெகோவா எவ்வளவு நல்லவருங்கறத ருசிச்சு பாக்கணுங்கற’ ஆசை எங்களுக்கு வந்துச்சு” என்று பேட்டன் சொல்கிறார். காலப்போக்கில், அவரும் அவருடைய மனைவி டயானாவும் தேவை அதிகமுள்ள இடத்துக்கு மாறிப்போனார்கள். நீங்களும் இந்தத் தொடர் கட்டுரைகளைப் படித்திருக்கிறீர்களா? jw.org வெப்சைட்டில் இருக்கிற ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஊழியம்—ஆஸ்திரேலியா என்ற வீடியோவையும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஊழியம்—அயர்லாந்து என்ற வீடியோவையும் பார்த்திருக்கிறீர்களா? இப்படிச் செய்தால், ஊழியத்தில் எப்படி அதிகமாக ஈடுபடலாம் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.
15. யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பவர்களோடு பழகுவது நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?
15யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பவர்களோடு பழகுங்கள். புது வகையான ஒரு உணவை நன்றாக ருசித்துச் சாப்பிடுவது எப்போது உங்களுக்குச் சுலபமாக இருக்கும்? அதை ஏற்கெனவே சாப்பிட்டிருப்பவர்களோடு சேர்ந்து சாப்பிடும்போதுதான். அதேமாதிரி யெகோவாவுக்கு நிறைய சேவை செய்வதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே நிறைய செய்துகொண்டிருப்பவர்களோடு பழக வேண்டும். கென்ட்டும் அவருடைய மனைவி வெரோனிக்காவும் அதைத்தான் செய்தார்கள். “எங்களோட நண்பர்களும் சொந்தக்காரங்களும் புது புது வழிகள்ல ஊழியம் செய்றதுக்கு எங்கள உற்சாகப்படுத்தினாங்க. கடவுளோட அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கிறவங்களோட பழகினப்ப புது புது வழிகள்ல ஊழியம் செய்யலாங்கற நம்பிக்க எங்களுக்கு அதிகமாச்சு” என்று கென்ட் சொல்கிறார். அவர்கள் இரண்டு பேரும் இப்போது செர்பியாவில் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள்.
16. லூக்கா 12:16-21-ல் இயேசு சொன்ன உவமையின்படி, தியாகங்கள் செய்வதற்கு நாம் ஏன் தயாராக இருக்க வேண்டும்?
16யெகோவாவுக்காகத் தியாகங்கள் செய்யுங்கள். யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நம்மிடம் இருக்கிற எல்லாவற்றையுமே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. (பிர. 5:19, 20) அதே சமயத்தில், சில வசதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமே என நினைத்து யெகோவாவுக்கு நிறைய சேவை செய்யாமல் இருந்துவிட்டால், இயேசு உவமையில் சொன்ன அந்த நபர் மாதிரிதான் நாம் இருப்போம். அவன் கடவுளை ஒதுக்கித்தள்ளிவிட்டு அவனுடைய சௌகரியங்களைப் பிடித்துக்கொண்டிருந்தான். (லூக்கா 12:16-21-ஐ வாசியுங்கள்.) பிரான்சில் இருக்கும் கிறிஸ்டியன் என்ற சகோதரர், “யெகோவாவுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் என்னோட நேரத்தயும் சக்தியயும் கொடுக்காம போயிட்டேன்” என்று சொல்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரும் அவருடைய மனைவியும் பயனியர் ஊழியம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் இரண்டு பேரும் வேலையை விட்டுவிட்டார்கள். வருமானத்துக்காக வீடுகளையும் அலுவலகங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தை வைத்து திருப்தியாக வாழக் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் செய்த தியாகங்களுக்குப் பலன் கிடைத்ததா? “இப்ப ஊழியத்த நாங்க சந்தோஷமா அனுபவிக்கறோம். பைபிள் படிப்புகளும் மறுசந்திப்புகளும் யெகோவாவ பத்தி கத்துக்கறத பாக்கறது சந்தோஷமா இருக்கு” என்று கிறிஸ்டியன் சொல்கிறார்.
17. புது முறையில் சாட்சி கொடுப்பதற்கு ஒரு சகோதரிக்கு எது உதவியது?
17புதுப் புது வழிகளில் ஊழியம் செய்துபாருங்கள். (அப். 17:16, 17; 20:20, 21) அமெரிக்காவில் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருக்கிற ஷெர்லி என்ற சகோதரியைப் பற்றி இப்போது பார்க்கலாம். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் அவருடைய ஊழியத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. போன் வழியாகச் சாட்சி கொடுப்பதற்கு ஆரம்பத்தில் அவர் ரொம்பவே தயங்கினார். ஆனால், வட்டாரக் கண்காணியின் சந்திப்பில் அதைச் செய்வதற்கான பயிற்சி கிடைத்தது. அதற்குப் பின்பு அதைச் செய்ய ஆரம்பித்தார். இப்போது தவறாமல் செய்துகொண்டு வருகிறார். “ஆரம்பத்துல எனக்கு பயமா இருந்துச்சு. ஆனா, இப்ப எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வீட்டுக்கு வீடு ஊழியத்துல சாட்சி கொடுக்கறதவிட போன் வழியா நிறைய பேருக்கு சாட்சி கொடுக்க முடியுது” என்று அவர் சொல்கிறார்.
18. பிரச்சினைகள் இருந்தாலும் ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்கு எது உதவும்?
18திட்டம் போட்டு அதைச் செயல்படுத்துங்கள். பிரச்சினைகள் வரும்போது நன்றாக யோசித்து திட்டம் போடுவதற்கும், அதைச் செயல்படுத்துவதற்கும் உதவச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். (நீதி. 3:21) ஐரோப்பாவில் இருக்கிற சோனியா என்ற சகோதரி பயனியர் சேவை செய்துகொண்டிருக்கிறார். இப்போது ரோமானிய மொழி பேசும் ஒரு தொகுதியில் அவர் சேவை செய்கிறார். “என்னோட திட்டங்கள ஒரு பேப்பர்ல எழுதி கண்ணுல படற இடத்துல ஒட்டி வெச்சுக்குவேன். இன்னொரு பேப்பர்ல, ஒரு ரோடு ரெண்டு திசைல பிரிஞ்சு போற மாதிரி வரைஞ்சு அத என்னோட மேஜைல வெச்சுக்குவேன். நான் ஒவ்வொரு தடவ முடிவு எடுக்கறப்பவும் அந்த பேப்பர பாத்து எந்த திசைல போனா சரியா இருக்கும்னு யோசிப்பேன்” என்று அவர் சொல்கிறார். பிரச்சினைகள் வரும்போது அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல் அதை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசிப்பார். “ஒவ்வொரு சூழ்நிலையும் என்னை தடுக்கிற சுவரா இருக்கா, இல்ல எனக்கு உதவற பாலமா இருக்கா அப்படீங்கறது நான் அத பாக்கற விதத்த பொறுத்துதான் இருக்கு” என்று அவர் சொல்கிறார்.
19. யெகோவாவுக்கு நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
19 நிறைய வழிகளில் யெகோவா நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் என்ன செய்தாலும் அவருக்குப் புகழ் சேர்க்கிற விதத்தில் செய்தால் அவர் நமக்குக் கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டலாம். (எபி. 13:15) அதற்கு ஒரு வழிதான், புதுப் புது முறைகளில் ஊழியம் செய்வது. அப்படிச் செய்யும்போது இன்னும் நிறைய ஆசீர்வாதங்களை அவர் நமக்குக் கொடுப்பார். ஒவ்வொரு நாளும், ‘யெகோவா நல்லவர் என்பதை எப்படியெல்லாம் ருசித்துப் பார்க்கலாம்’ என்று யோசியுங்கள். அப்போது, “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது” என்று இயேசு சொன்ன மாதிரி நாமும் சொல்ல முடியும்.—யோவா. 4:34.
பாட்டு 80 “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்”
^ பாரா. 5 நல்லது எல்லாமே யெகோவாவிடமிருந்துதான் வருகிறது. மோசமான ஜனங்களுக்கும்கூட அவர் நல்லது செய்கிறார். முக்கியமாக, அவரை வணங்கும் ஜனங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதை அவர் எப்படிச் செய்கிறார்? ஊழியத்தை அதிகமாகச் செய்வதன் மூலம் அவர் நல்லவர் என்பதை நாம் எப்படி ருசித்துப் பார்க்கலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
^ பாரா. 7 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
^ பாரா. 14 இந்தத் தொடர் கட்டுரைகள் முன்பு காவற்கோபுரத்தில் வந்துகொண்டிருந்தன, இப்போது jw.org வெப்சைட்டில் வருகின்றன. அதற்கு, எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் > உயர்ந்த சேவையில் உயரங்கள் தொட்டவர்கள் என்ற தலைப்பைப் பாருங்கள்.