கடவுள் உங்களைக் கவனிக்கிறாரா?
படைப்பு என்ன சொல்லித்தருகிறது?
தாயின் கருப்பையிலிருந்து வெளியே வருகிற ஒரு குழந்தையின் முதல் 60 நிமிடங்கள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. ஏனென்றால், முக்கியமான அந்தச் சமயத்தில், ஒரு தாய் தன் குழந்தையோடு பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படுகிறது. a
தன் பச்சிளம் குழந்தையைக் கனிவாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற உணர்வு ஒரு தாய்க்கு எப்படி வருகிறது? அதிகளவில் சுரக்கும் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன், “ஒரு தாய் தன் குழந்தையைத் தொடுகிறபோதும், பார்க்கிறபோதும், தாய்ப்பால் கொடுக்கிறபோதும் தாய்மை உணர்ச்சியைத் தூண்டுகிறது” என்று பேராசிரியர் ஜேனெட் க்ரென்ஷா, தி ஜர்னல் ஆஃப் பெரினாட்டல் எஜுகேஷன் என்ற பத்திரிகையில் விளக்குகிறார். பிரசவத்துக்குப்பின் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் “குழந்தையின் தேவையைப் புரிந்துகொண்டு செயல்பட ஒரு தாய்க்கு உதவுகிறது.” தன் குழந்தையோடு நெருக்கமாக இருப்பதற்கும் அது தூண்டுகிறது. இதை அருமையான விஷயம் என்று ஏன் சொல்லலாம்?
தாய்க்கும் சேய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை உண்டாக்கியவர் நம் அன்புப் படைப்பாளரான யெகோவா தேவன்தான். b ‘தாயின் வயிற்றிலிருந்து தன்னை வெளியே கொண்டுவந்ததற்காகவும்,’ தாயின் அரவணைப்பில் பாதுகாப்பாக உணர வைத்ததற்காகவும் தாவீது ராஜா கடவுளைப் புகழ்ந்தார். “பிறந்ததிலிருந்தே நான் உங்களுடைய கவனிப்பில்தான் இருந்து வருகிறேன். என் தாயின் கர்ப்பத்திலிருந்த சமயத்திலிருந்தே நீங்கள்தான் என் கடவுள்” என்று அவர் ஜெபம் செய்தார்.—சங்கீதம் 22:9, 10.
சிந்தியுங்கள்: ஒரு தாய் தன் குழந்தையைக் கனிவாகக் கவனித்துக்கொள்வதற்கும், அதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுகிற இந்தப் பிரமிப்பூட்டும் அமைப்பைக் கடவுள் உண்டாக்கியிருக்கிறார் என்றால், “கடவுளுடைய பிள்ளைகளாக” இருக்கிற நம்மேலும் அவர் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்ற முடிவுக்கு வருவது நியாயம்தானே?—அப்போஸ்தலர் 17:29.
கடவுளுடைய அன்பான கவனிப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்லித்தருகிறது?
படைப்பாளரைப் பற்றி வேறு யாரையும்விட மிக நன்றாகத் தெரிந்துவைத்திருக்கும் இயேசு கிறிஸ்து இப்படிச் சொன்னார்: “குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை. உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. அதனால், பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.”—மத்தேயு 10:29-31.
நம்முடைய கண்ணில் படுகிற ஒவ்வொரு பறவையையும் நாம் கவனிப்பதில்லை, பிறகு எப்படித் தரையில் விழுகிற பறவையை நாம் கவனிப்போம்? நம் பரலோகத் தகப்பனோ அப்படியில்லை; அவர் அவை ஒவ்வொன்றையும் கவனிக்கிறார்! ஆனாலும், அவருடைய பார்வையில் ஏராளமான பறவைகளைவிட மனிதன் அதிக மதிப்புள்ளவனாக இருக்கிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுள் உங்களைக் கவனிப்பதில்லை என்ற ‘பயம்’ உங்களுக்கு இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, கடவுளுக்கு உங்கள்மேல் ஆழ்ந்த அக்கறை இருக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் மனதில் வைக்க வேண்டும்.
கடவுள் நம்முடைய நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராக இருக்கிறார், நம்மை அன்போடும் கரிசனையோடும் கவனிக்கிறார்
பைபிள் வசனங்கள் இப்படி உறுதியளிக்கின்றன:
-
“யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன. நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.”—நீதிமொழிகள் 15:3.
-
“யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.”—சங்கீதம் 34:15.
-
“நீங்கள் காட்டும் மாறாத அன்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.”—சங்கீதம் 31:7.
‘யெகோவாவுக்கு என்மேல அன்பே இல்லன்னு தோணுச்சு’
கடவுள் நம்முடைய நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராக இருக்கிறார், நம்மை அன்போடும் கரிசனையோடும் கவனிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, நம் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படும்! இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேனா c என்பவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்:
“யெகோவாவுக்கு என்மேல அன்பே இல்லன்னும், என் ஜெபங்களுக்கு பதிலே கொடுக்குறதில்லன்னும் நிறைய தடவை நினைச்சேன். எனக்கு விசுவாசம் இல்லாததுதான் அதுக்கு காரணம்னு நினைச்சேன். நான் ஒண்ணும் அவ்ளோ முக்கியமானவ இல்லங்கறதுனாலதான் கடவுள் என்னை ஒதுக்குறார், என்னை தண்டிக்குறார்னு தோணுச்சு. அவருக்கு என்மேல அக்கறையே இல்லாதது போல உணர்ந்தேன்.”
ஆனால், ஹேனாவுக்கு இப்போது அதுபோன்ற எந்தச் சந்தேகமும் இல்லை. தன்மேல் கடவுளுக்கு அன்பு இருக்கிறது என்பதையும், அவர் தன்னை அன்பாகக் கவனிக்கிறார் என்பதையும் ஹேனா இப்போது உறுதியாக நம்புகிறார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? அவரே பதில் சொல்கிறார்: “இந்த மாற்றம் படிப்படியா ஏற்பட்டுச்சு. பல வருஷத்துக்கு முன்னால, இயேசு கிறிஸ்துவோட மீட்புப் பலிய பத்தி ஒரு பைபிள் பேச்ச கேட்டேன்; அது என் மனச ரொம்ப ஆழமா தொட்டுச்சு, யெகோவாவுக்கு என்மேல அன்பு இருக்குங்குற நம்பிக்கைய அது கொடுத்துச்சு. என் ஜெபங்களுக்கு அவர் பதில் கொடுத்த ஒவ்வொரு சமயமும், யெகோவாவுக்கு என்மேல எவ்ளோ அன்பு இருக்குன்னு நினைச்சு எனக்கு அழுகயே வந்துடும். பைபிள் படிக்குறதுனால... சபைக் கூட்டங்கள்ல கலந்துக்குறதுனால... யெகோவாவ பத்தியும், அவரோட குணங்கள பத்தியும் நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன்; நம்மள பத்தி அவர் எப்படி உணர்றாருங்குறதயும் புரிஞ்சுக்கிட்டேன். யெகோவா நமக்கு ஆதரவா இருக்கார்... நம்ம எல்லாரையும் அவர் நேசிக்குறார்... நம்ம ஒவ்வொருத்தரயும் அன்பா கவனிச்சுக்குறார்னு இப்போ முழுசா நம்புறேன்.”
ஹேனாவின் வார்த்தைகள் நமக்கு ஆறுதலாக இருக்கின்றன. ஆனால், கடவுள் உங்களைப் புரிந்துகொள்கிறார் என்றும், உங்கள் உணர்ச்சிகளை ஞாபகத்தில் வைத்திருக்கிறார் என்றும் நீங்கள் எப்படி நிச்சயமாக இருக்கலாம்? அடுத்த கட்டுரை இதற்குப் பதிலளிக்கும்.
a பிரசவத்துக்குப் பின் ஏற்படுகிற மனச்சோர்வால் (Postpartum Depression) பாதிக்கப்படும் சில தாய்மார்கள், தங்கள் குழந்தையோடு பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் தங்களையே குற்றப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. இந்த வகையான மனச்சோர்வு, “பெரும்பாலும் உடல் ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான காரணங்களால் ஏற்படுகிறது . . . ஒரு தாய் செய்கிற அல்லது செய்யத் தவறுகிற ஏதோவொன்றினால் அது ஏற்படுவது கிடையாது” என்று அமெரிக்க மனநல தேசிய நிறுவனம் சொல்கிறது. இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள செப்டம்பர் 8, 2002 விழித்தெழு! இதழில் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை சமாளித்தேன்” என்ற கட்டுரையையும், ஜூன் 8, 2003 ஆங்கில விழித்தெழு! இதழில் “போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனை புரிந்துகொள்ளுதல்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.
b பைபிளின்படி, கடவுளுடைய பெயர் யெகோவா.—சங்கீதம் 83:18.
c இந்தத் தொடர் கட்டுரைகளில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.