Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | கடவுள் தந்த மிகச்சிறந்த பரிசு உங்களுக்காக!

கடவுள் கொடுத்த பரிசு—ஒரு பொக்கிஷம் என்று ஏன் சொல்லலாம்?

கடவுள் கொடுத்த பரிசு—ஒரு பொக்கிஷம் என்று ஏன் சொல்லலாம்?

ஒரு பரிசு எப்போது உண்மையிலேயே ஒரு பொக்கிஷமாக இருக்கும்? (1) அந்தப் பரிசை யார் கொடுத்தார்கள், (2) ஏன் கொடுத்தார்கள், (3) அதைக் கொடுக்க எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்கள், (4) அந்தப் பரிசு நமக்கு எந்தளவுக்கு தேவை போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டால் அந்தப் பரிசை பொக்கிஷமாக நினைப்போம். இந்த நான்கு விஷயங்களை யோசித்துப் பார்த்தால் மீட்புவிலை என்ற மிகப்பெரிய பரிசைக் கொடுத்த கடவுளுக்கு வாழ்நாள் முழுக்க நன்றியோடு இருப்போம்.

யார் கொடுத்தது?

நாம் உயர்வாக மதிக்கும் ஒருவர் அல்லது ஒரு உயர் அதிகாரி நமக்கு பரிசு கொடுத்தால் அதை நாம் உயர்வாக நினைப்போம். சில பரிசுகள் அவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்காது. ஆனால், அதை நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் அல்லது நெருக்கமான நண்பர் ஒருவர் கொடுத்திருப்பார். அதனால், அந்தப் பரிசை நாம் உயர்வாக மதிப்போம். நாம் ஏற்கெனவே பார்த்த ஜார்டன் விஷயத்தில் இதுதான் நடந்தது. ரஸல் கொடுத்த பரிசை அவர் ரொம்ப உயர்வாக மதித்தார். கடவுள் கொடுத்த மீட்புவிலை என்ற பரிசுக்கு இந்த உதாரணங்களை எப்படி ஒப்பிடலாம்?

“தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:9) கடவுளைவிட அதிகாரமுள்ள நபர் வேறு யார் இருக்க முடியும்? உண்மை கடவுளான யெகோவாவைப் பற்றி எபிரெய எழுத்தாளர் ஒருவர் இப்படிச் சொன்னார்: “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.” (சங்கீதம் 83:18) உன்னதமான கடவுளே நமக்கு பரிசு கொடுத்திருக்கிறார். இதைவிட பெரிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்!

அடுத்ததாக, கடவுள்தான் நம்முடைய “தகப்பன்.” (ஏசாயா 63:16) ஏனென்றால், அவர்தான் நமக்கு உயிர் கொடுத்தவர். அதுமட்டுமல்ல, ஒரு பொறுப்புள்ள அப்பா தன் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் பார்த்துப்பார்த்து செய்வதுபோல் யெகோவா நம்மை கவனித்துக்கொள்கிறார். தன்னுடைய மக்களைப் பற்றி பேசும்போது கடவுள் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: ‘இஸ்ரவேல் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே? . . . அவனுக்காக என் உள்ளம் உருகுகிறது. அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.’ (எரேமியா 31:20) இன்று தன்னை உண்மையாக வணங்கும் ஒவ்வொருவரையும் கடவுள் இப்படித்தான் நினைக்கிறார். அவர் நம்மை படைத்தவர் மட்டும் கிடையாது, நம்முடைய அன்பான அப்பா, நெருங்கிய நண்பரும்கூட. இப்படிப்பட்ட கடவுள் கொடுத்த பரிசு நிச்சயம் ஒரு பொக்கிஷமாகத்தானே இருக்கும்!

ஏன் கொடுத்தார்?

சிலர் ஏதோ கடமைக்காக அல்ல, நம்மீது உண்மையான அன்பு இருப்பதால் பரிசு கொடுப்பார்கள். அப்படிப்பட்ட பரிசை நாம் பொக்கிஷம்போல் நினைப்போம். சுயநலமில்லாத அன்பைக் காட்டும் ஒரு நபர் எந்தக் கைமாறும் எதிர்பார்த்து பரிசு கொடுக்க மாட்டார்.

கடவுள் நம்மீது உயிரையே வைத்திருக்கிறார். அதனால்தான் அவருடைய மகனை நமக்கு பலியாக கொடுத்தார். “தன்னுடைய ஒரே மகன் மூலம் நமக்கு வாழ்வு கிடைப்பதற்காகக் கடவுள் அவரை இந்த உலகத்துக்கு அனுப்பினார்; இதன் மூலம் கடவுள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு தெரியவந்தது” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:9) இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் கடவுளுக்கு இருக்கிறதா? கண்டிப்பாக இல்லை. ‘கடவுளுடைய அளவற்ற கருணையால்தான்’ நமக்கு “கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலை” கிடைத்திருக்கிறது.—ரோமர் 3:24.

ஏன் அப்படிச் சொல்லலாம்? “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்; இதன் மூலம், கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:8) இந்தப் பரிசை பெற்றுக்கொள்ள நமக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏனென்றால், நாம் பாவிகளாகவும் பலவீனமானவர்களாகவும் இருக்கிறோம். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு அளவற்ற கருணையைக் காட்ட எது கடவுளை தூண்டியது? நம்மீது அவர் வைத்திருக்கும் சுயநலமில்லாத அன்புதான். இந்த அன்புக்கு கைமாறாக நம்மால் எதையுமே கொடுக்க முடியாது. சரித்திரத்திலேயே இப்படிப்பட்ட அன்பை யாருமே காட்டியிருக்க முடியாது.

எப்படிப்பட்ட தியாகத்தை கடவுள் செய்திருக்கிறார்?

சிலர் நிறைய தியாகம் செய்து நமக்கு ஒரு பரிசை கொடுத்திருப்பார்கள். அதனால், அவர்கள் கொடுத்த பரிசை நாம் மிக உயர்வாக நினைப்போம். ஒருவர், உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒரு பொருளையே உங்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவர் செய்த தியாகத்தை நினைத்துப் பார்த்தால் அந்தப் பரிசை ஒரு பொக்கிஷம்போல் பார்ப்பீர்கள்.

‘கடவுள் தன்னுடைய ஒரே மகனையே’ கொடுத்திருக்கிறார். (யோவான் 3:16) அவர் உயிருக்கு உயிராக நேசித்த மகனையே நமக்காக கொடுத்திருக்கிறார். யுகம் யுகமாக இயேசு கடவுளோடு இருந்திருக்கிறார். கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்தபோது இயேசுவும் அவரோடு சேர்ந்து வேலை செய்தார். அவர் கடவுளுடைய ‘செல்லப்பிள்ளையாக இருந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 8:30) இயேசு கடவுளுடைய ‘அன்பான மகன்.’ அவர் ‘கடவுளுடைய சாயலில் இருக்கிறார்.’ (கொலோசெயர் 1:13-15) கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையில் இருந்த பாசப்பிணைப்பை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது!

அப்படியிருந்தும், ‘தன்னுடைய சொந்த மகனென்றும் பார்க்காமல் நம் எல்லாருக்காகவும் அவரைக் கொடுத்தார்.’ (ரோமர் 8:32) எப்படிப்பட்ட தியாகத்தை கடவுள் நமக்காக செய்திருக்கிறார் பாருங்கள்!

அந்தப் பரிசு நமக்கு தேவையான ஒன்று

நமக்கு மிகவும் தேவையான ஒன்றை யாராவது நமக்கு பரிசாக கொடுக்கும்போது அதை நாம் உயர்வாக மதிப்போம். இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள். சிகிச்சை எடுத்துக்கொள்ள உங்களிடம் பணம் இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் உங்களுக்கு பண உதவி செய்கிறார். நீங்களும் உயிர் பிழைக்கிறீர்கள். அவர் செய்த பண உதவியை எவ்வளவு பெரிதாக நினைப்பீர்கள்!

“ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:22) ஆதாமுடைய சந்ததியில் வந்ததால் நாம் எல்லாருமே ‘சாகிறோம்.’ வியாதியில் இருந்தும் மரணத்தில் இருந்தும் தப்பிக்க நமக்கு வழியே இல்லை. அதுமட்டுமல்ல, நாம் நிறைய தவறுகளை செய்கிறோம். அதனால், கடவுளுடைய நண்பர்களாக இருப்பதற்கான தகுதியை நாம் இழந்துவிட்டோம். நாம் வெறும் சாதாரண மனிதர்கள்தான். நம்மால் நம் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது, மற்றவர்களையும் “உயிரோடு எழுப்ப” முடியாது. “யாராக இருந்தாலும், இன்னொருவனின் உயிரை மீட்கவே முடியாது. அவனுக்காகக் கடவுளுக்கு மீட்புவிலையைக் கொடுக்கவும் முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 49:7, 8) அதனால், நமக்கு நிச்சயம் கடவுளுடைய உதவி தேவை. அவருடைய உதவி இல்லாமல் நம்மால் வாழவே முடியாது.

யெகோவா நம்மீது நிறைய அன்பு வைத்திருப்பதால்தான் நாம் உயிர் பிழைப்பதற்கு அவரே ஏற்பாடு செய்திருக்கிறார். அதாவது, இயேசுவின் மூலம் ‘எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவதற்கான’ ஏற்பாட்டை செய்திருக்கிறார். இயேசுவின் மீட்புவிலையால் நமக்கு என்ன நன்மை? கடவுளுடைய மகனான “இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்.” இயேசு சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைத்தால் நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும், எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்க்கையும் கிடைக்கும். (1 யோவான் 1:7; 5:13) இறந்துபோனவர்களுக்கு மீட்புவிலையால் என்ன நன்மை? “ஒரே மனிதனால் மரணம் வந்தது, அதேபோல் ஒரே மனிதனால் [இயேசுவால்] உயிர்த்தெழுதலும் வருகிறது.”—1 கொரிந்தியர் 15:21. *

எவ்வளவு பெரிய அதிகாரி கொடுத்த பரிசாக இருந்தாலும் சரி, அதை கடவுள் கொடுத்த பரிசோடு ஒப்பிடவே முடியாது. கடவுள் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவர் கொடுத்த பரிசில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. யெகோவா செய்த தியாகத்தைப் போல் வேறு யாருமே செய்ததில்லை. நமக்கு ரொம்ப தேவையான ஒரு பரிசை அவர் கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலையே கிடைக்காது. மீட்புவிலை, உண்மையிலேயே வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்!

 

^ பாரா. 19 இறந்தவர்களை கடவுள் உயிரோடு கொண்டுவரப்போகிறார். இதைப் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 7-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது. இது www.jw.org வெப்சைட்டில் கிடைக்கும்.