Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8

நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?

நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?

உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? இந்த சந்தேகம் பலருக்கு இருக்கிறது. தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி நிறைய பேர் கடவுளிடம் ஜெபத்தில் சொல்கிறார்கள். ஆனாலும், அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை. அப்படியென்றால், நம் ஜெபங்களைக் கடவுள் கேட்பதே இல்லை என்று அர்த்தமா? அப்படியில்லை. சரியான விதத்தில் ஜெபம் செய்யும்போது கடவுள் அதைக் கவனித்துக் கேட்கிறார் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார்.

“ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.” —சங்கீதம் 65:2.

ஜெபத்தைக் கேட்கிற ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையே சிலருக்கு இல்லாவிட்டாலும், அவர்கள் ஜெபம் செய்கிறார்கள். ஏனென்றால், அப்படிச் செய்யும்போது மன அமைதி கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஜெபம் என்பது வெறுமனே மன அமைதி கிடைப்பதற்காகவும், அதன் மூலம் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காகவும் செய்யப்படுகிற ஒன்று கிடையாது. ‘யெகோவா a தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். உண்மையோடு தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். . . . உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்கிறார்.’—சங்கீதம் 145:18, 19.

அப்படியானால், தன்னை வணங்குகிறவர்கள் செய்கிற ஜெபங்களைக் கடவுளாகிய யெகோவா கேட்கிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம். “நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்” என்று கரிசனையோடு அவர் சொல்கிறார்.—எரேமியா 29:12.

தன்னிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.

“விடாமல் ஜெபம் செய்யுங்கள்.”—ரோமர் 12:12.

“தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்,” ‘எல்லா சந்தர்ப்பங்களிலும் ஜெபம் செய்யுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. தன்னிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.—மத்தேயு 26:41; எபேசியர் 6:18.

தன்னிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று கடவுள் ஏன் விரும்புகிறார்? இதை யோசித்துப்பாருங்கள்: ஒரு அப்பா, தன் பிள்ளை தன்னிடம் உதவி கேட்க வேண்டுமென்று விரும்புவார், இல்லையா? தன் பிள்ளைக்கு என்ன தேவை, அவன் என்ன நினைக்கிறான் என்றெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கும். ஆனாலும், தன் பிள்ளை சொல்வதை அவர் கேட்கிறார். இது, பிள்ளைக்கு அவர்மேல் நம்பிக்கையும் அவரோடு நெருங்கிய பந்தமும் இருப்பதைக் காட்டுகிறது. அதேபோல், யெகோவாவிடம் ஜெபம் செய்வது, அவர்மேல் நமக்கு நம்பிக்கை இருப்பதையும் அவரோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ள நாம் விரும்புவதையும் காட்டுகிறது.—நீதிமொழிகள் 15:8; யாக்கோபு 4:8.

கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.

“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

கடவுளுக்கு நம்மேல் அன்பும் அக்கறையும் இருக்கிறது. அதனால்தான், நாம் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நம் பிரச்சினைகள், கவலைகள் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். நமக்கு உதவ அவர் ஆசைப்படுகிறார்.

தாவீது ராஜா உதவி கேட்டு அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்திருக்கிறார். தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவரிடம் கொட்டியிருக்கிறார். (சங்கீதம் 23:1-6) தாவீதைப் பற்றி கடவுள் என்ன நினைத்தார்? தாவீதைக் கடவுள் நேசித்தார். அவர் செய்த நிறைய ஜெபங்களைக் கேட்டார். (அப்போஸ்தலர் 13:22) நம்மேல் கடவுளுக்கு அக்கறை இருப்பதால் நம் ஜெபங்களையும் அவர் கேட்கிறார்.

“நான் யெகோவாமேல் அன்பு வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர் என் குரலைக் கேட்கிறார்”

பைபிளில் சங்கீதப் புத்தகத்தை எழுதிய ஒருவர் சொன்ன வார்த்தைகள் இவை. தன் ஜெபங்களைக் கடவுள் கேட்டார் என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. கடவுளோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ள அது அவருக்கு உதவியது. அதோடு, துன்ப துயரத்திலிருந்து மீள அவருக்குப் பலத்தைக் கொடுத்தது.—சங்கீதம் 116:1-9.

நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், அவரிடம் நாம் தொடர்ந்து ஜெபம் செய்வோம். வடக்கு ஸ்பெயினில் வாழும் பெத்ரோ என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். சாலை விபத்தில் அவருடைய 19 வயது மகன் இறந்துவிட்டான். இழப்பைத் தாங்க முடியாமல் அவர் தன் வேதனையையெல்லாம் கடவுளிடம் கொட்டினார். ஆறுதலையும் உதவியையும் கேட்டு அடிக்கடி ஜெபம் செய்தார். அதனால், என்ன பலன் கிடைத்தது? “சபையிலிருந்த சகோதர சகோதரிகள் எனக்கும் என் மனைவிக்கும் ஆறுதல் சொன்னாங்க, எங்களுக்கு உதவி செஞ்சாங்க. இதெல்லாம் எங்களோட ஜெபங்களுக்கு யெகோவா கொடுத்த பதிலா இருந்துச்சு” என்கிறார் பெத்ரோ.

பெரும்பாலும், அன்பான நண்பர்கள் தரும் ஆறுதல் மற்றும் ஆதரவு மூலமாகக் கடவுள் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார்

அவருடைய மகன் திரும்பவும் உயிரோடு வரவில்லை என்றாலும், ஜெபம் செய்தது பெத்ரோவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ரொம்ப உதவியாக இருந்தது. அவருடைய மனைவி மரியா கார்மன் இப்படிச் சொன்னார்: “ஜெபம் செஞ்சதுனால என்னோட வேதனைய தாங்கிக்க முடிஞ்சுது. யெகோவா என்னை புரிஞ்சுக்கிட்டத உணர்ந்தேன். ஏன்னா, ஜெபம் செஞ்சப்போ, என் மனசெல்லாம் அமைதியா ஆயிடுச்சு.”

ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார் என்பதை பைபிள் வசனங்களும், நிறைய பேருடைய அனுபவங்களும் தெளிவாகக் காட்டுகின்றன. அதேசமயத்தில், எல்லா ஜெபங்களுக்கும் கடவுள் பதிலளிக்க மாட்டார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. கடவுள் ஏன் சில ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார், ஏன் சில ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில்லை?

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.