விழிப்புடன் இருங்கள்!
இளைஞர்கள்மீது சோஷியல் மீடியா ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி அரசாங்க உயர் அதிகாரி எச்சரிப்பு—பைபிள் என்ன சொல்கிறது?
மே 23, 2023 அன்று, அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரி பொது மக்களுக்கு ஒரு எச்சரிப்பை வெளியிட்டார். சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதால் இளம் பிள்ளைகளுக்கு நிறைய பாதிப்புகள் வருகின்றன என்று சொன்னார்.
“சோஷியல் மீடியாவால் பிள்ளைகளுக்கும் டீனேஜர்களுக்கும் சில நன்மைகள் இருப்பது உண்மைதான்! ஆனாலும், அதை பயன்படுத்துவதால் அவர்களுடைய மனநலத்துக்கும் உடல்நலத்துக்கும் ஆபத்து இருப்பதை நிறைய அத்தாட்சிகள் காட்டுகின்றன.”—சோஷியல் மீடியா அன்ட் யூத் மென்டல் ஹெல்த்: தி யூ.எஸ். சர்ஜென் ஜெனரல்ஸ் அட்வைசரி, 2023.
இந்த எச்சரிப்பு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி குறிப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது:
12-15 வயதில் இருக்கும் பிள்ளைகள் “ஒரு நாளைக்கு 3 மணி நேரத்துக்கு அதிகமாக சோஷியல் மீடியாவை பயன்படுத்தினால் அவர்களுக்கு மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனநல பிரச்சினைகள் வருவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.”
14 வயது பிள்ளைகள், “சோஷியல் மீடியாவை ரொம்ப அதிகமாக பயன்படுத்துவதால் அவர்களுடைய தூக்கம் கெட்டுப்போகிறது, ஆன்லைனில் மற்றவர்களால் வம்பிழுக்கப்படுகிறார்கள், தோற்றத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள், அவர்களுடைய சுயமரியாதை குறைந்துவிடுகிறது, மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் பையன்களைவிட பெண் பிள்ளைகளைத்தான் அதிகமாக பாதிக்கிறது.”
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எப்படி பாதுகாக்கலாம்? இதோ சில டிப்ஸ்:
பெற்றோர்கள் என்ன செய்யலாம்
கண்டுகொள்ளாமல் இருந்துவிடாதீர்கள். சோஷியல் மீடியாவில் இருக்கும் ஆபத்துகளை யோசித்துபார்த்து, பிள்ளைகள் அதை பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற முடிவை பெற்றோராக நீங்கள் எடுங்கள்.
பைபிள் நியமம்: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு.”—நீதிமொழிகள் 22:6.
அதிகம் தெரிந்துகொள்ள, “என்னுடைய பிள்ளை சோஷியல் மீடியாவை பயன்படுத்த வேண்டுமா?” என்ற கட்டுரையை படியுங்கள்.
சோஷியல் மீடியாவை பயன்படுத்த உங்கள் பிள்ளையை நீங்கள் அனுமதித்தால், என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆன்லைனில் உங்கள் பிள்ளை என்ன செய்கிறான் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாதீர்கள்.
ஆபத்தான விஷயங்களிலிருந்து பிள்ளையை பாதுகாத்திடுங்கள். ஆபத்தானவை எவை என்பதை அடையாளம் கண்டுகொள்ளவும் அவற்றை தவிர்க்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.
பைபிள் நியமம்: “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. . . . அதேபோல், வெட்கக்கேடான நடத்தை, முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான கேலிப் பேச்சு ஆகியவை உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.”—எபேசியர் 5:3, 4.
சில டிப்ஸை தெரிந்துகொள்ள, “சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்” என்ற கட்டுரையை படியுங்கள்.
சட்டங்களை போடுங்கள். உதாரணத்துக்கு, உங்கள் பிள்ளை எப்போதெல்லாம் சோஷியல் மீடியாவை பயன்படுத்தலாம்... எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்... என்பதற்கு சில சட்டங்களை போடுங்கள்.
பைபிள் நியமம்: “ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 5:15, 16.
வரம்புகள் ஏன் தேவை என்பதை உங்கள் பிள்ளைக்கு புரிய வைக்க, சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற வீடியோவை பயன்படுத்துங்கள்.