அணு ஆயுதப் போரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை அதிகளவில் தயாரித்து அவற்றை கைவசம் வைத்திருப்பதால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயம் இந்த உலகத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நாடுகள் அணு ஆயுதங்களை எந்தளவுக்கு அதிகமாக தயாரிக்கிறதோ அந்தளவுக்கு இந்தப் பயமும் மக்களிடையே அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாடு சின்ன அணுகுண்டை போட்டால்கூட ‘அணு ஆயுத போர் வெடிக்குமோ, அது இந்த உலகத்தை அழித்துவிடுமோ’ என்று மக்கள் பயப்படுகிறார்கள். புல்லட்டின் ஆஃப் த அட்டாமிக் சயன்டிஸ்ட் சொல்கிறபடி, “அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தில்தான் நாம் எப்போதும்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: அணு ஆயுதப் போர் கண்டிப்பாக வருமா? அப்படி வந்தால், இந்தப் பூமி அழிந்துவிடுமா? அணு ஆயுதப் போர் வந்துவிடுமோ என்ற பயத்தை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? பைபிள் என்ன சொல்கிறது?
இந்தக் கட்டுரையில்
அணு ஆயுதப் போர் வந்துவிடுமோ என்ற பயத்தை நாம் எப்படிச் சமாளிக்கலாம்?
அர்மகெதோன் ஒரு அணு ஆயுதப் போராக இருக்கும் என்று பைபிள் சொல்கிறதா?
வெளிப்படுத்துதல் புத்தகம் அணு ஆயுதப் போரைப் பற்றி ஏதாவது சொல்கிறதா?
அணு ஆயுதப் போரைப் பற்றி பைபிள் முன்கூட்டியே சொன்னதா?
அணு ஆயுதப் போரைப் பற்றி பைபிள் குறிப்பிட்டு எதுவும் சொல்வதில்லை. ஆனால், சில சம்பவங்களையும் மக்களின் மனப்பான்மையையும் பற்றி பைபிள் முன்னறிவித்தது. இப்படிப்பட்ட சம்பவங்களும் மக்களுடைய மனப்பான்மையும்தான் அணு ஆயுதப் போர் வருமோ என்ற அபாயம் இருப்பதற்கான காரணம்.
கீழே சில பைபிள் வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு உலகத்தில் நடக்கும் சம்பவங்களுடன் இவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்:
பைபிள் வசனங்கள்: இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.“ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:3, 7.
உலக சம்பவங்கள்: அணு ஆயுதங்களை இப்போதே கைவசம் வைத்திருக்கிற நாடுகளும், எதிர்காலத்தில் அவற்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிற நாடுகளும்தான் ஆயுதங்களைப் பயன்படுத்தி அடிக்கடி சண்டை போடுகின்றன.
“சில வருஷங்களாகவே, உலகத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது: சண்டை சச்சரவுகள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.”—த ஆர்ம்ட் கான்ஃப்ளிக்ட் லொக்கேஷன் & ஈவன்ட் டேட்டா பிராஜக்ட்.
பைபிள் வசனம்: “முடிவு காலத்தில் தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு சண்டைக்கு நிற்பான்.”—தானியேல் 11:40.
உலக சம்பவங்கள்: பைபிள் முன்கூட்டியே சொன்னபடி, எதிரும்புதிருமாக நிற்கும் நாடுகளும் அவர்களோடு கூட்டணி போடும் நாடுகளும் தங்களுக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது என்று காட்டுவதற்காக போட்டிபோடுகின்றன. இன்றைக்கு அணு ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிற நாடுகள் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக்கொள்வதில்லை. ஆனால், இன்னும் அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களை தயாரித்துக்கொண்டே இருக்கின்றன.
“நேருக்குநேர் மோதிக்கொள்கிற நாடுகளுக்கு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவு கொடுக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக, இந்த மாதிரி நாடுகளிலும் இன்னும் மற்ற நாடுகளிலும் நடக்கிற சண்டை சச்சரவுகளுக்கு கணக்குவழக்கே இல்லை.”—தி உப்சலா கான்ஃப்ளிக்ட் டேட்டா புரோக்ராம்.
பைபிள் வசனங்கள்: ‘கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள். ஏனென்றால், மனிதர்கள் எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக இருப்பார்கள்.’—2 தீமோத்தேயு 3:1-3.
உலக சம்பவங்கள்: இன்றைக்கு பொதுவாகவே நிறைய விஷயங்களில் மக்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போவதில்லை. அதே மாதிரிதான் உலகத் தலைவர்களும். கருத்து வேறுபாடுகள் வரும்போது அமைதியான முறையில் அதைப் பேசி தீர்த்துக்கொள்வதற்கு பதிலாக பயமுறுத்தியோ ஆயுதங்களைக் காட்டியோ சரிசெய்ய அவர்கள் முயற்சி செய்யலாம். அதனால், அணு ஆயுதப் போர் வெடிக்குமோ என்ற பயம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
“நாடுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை வலுப்படுத்தவில்லை என்றால் மோதல்கள் கொடூரமான அழிவை ஏற்படுத்தும்.”—எஸ் சரண் அன்ட் ஜே ஹார்மன், வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம்.
அணு ஆயுத போர் வருவதற்கு கடவுள் அனுமதிப்பாரா?
அதை பற்றி பைபிள் எதுவும் சொல்லவில்லை. நாம் வாழ்கிற காலத்தில், “திகிலுண்டாக்கும் காட்சிகள்“ தோன்றும் என்றுதான் பைபிள் சொல்கிறது. (லூக்கா 21:11) இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுகள் வீசப்பட்டது இந்த மாதிரி சம்பவங்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. கடவுள் ஏன் போர்களை அனுமதிக்கிறார் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள, “கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்“ என்ற வீடியோவைப் பாருங்கள்.
இந்தப் பூமி அழிந்துவிடுமா?
இல்லை. ஒருவேளை மனிதர்கள் மறுபடியும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினாலும், உலகமே அழிந்துபோகிற அளவுக்கு நிலைமை மோசமாக கடவுள் விட்டுவிட மாட்டார். மனிதர்கள் என்னதான் பூமியை நாசமாக்க முயற்சி எடுத்தாலும் அவர்களால் அது முடியாது என்று பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, மனிதர்கள் என்றென்றைக்கும் அதில் வாழ்வார்கள் என்றும் சொல்கிறது.
அணு ஆயுதப் போரால் எதிர்காலத்தில் இந்தப் பூமியே ஒரு பொட்டல் காடாக மாறிவிடும்... விரல் விட்டு எண்ணுகிற அளவுக்குத்தான் மனிதர்கள் இருப்பார்கள்... அவர்கள் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். மனிதர்கள் செய்கிற போரால் இந்தப் பூமி எந்தளவுக்கு நாசமானாலும் அதை முழுமையாக சரி செய்ய கடவுளால் முடியும் என்று பைபிள் சொல்கிறது.
பூமி தன்னைத்தானே சரி செய்துகொள்கிற மாதிரி அற்புதமான விதத்தில் கடவுள் அதைப் படைத்திருக்கிறார். ஆனாலும் கடைசியில், கடவுள் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி இந்தப் பூமியை திரும்பவும் ஒரு அழகான இடமாக மாற்றுவார். அதில் மனிதர்கள் என்றென்றைக்கும் சந்தோஷமாக வாழ்வார்கள்.—சங்கீதம் 37:11, 29; வெளிப்படுத்துதல் 21:5.
அணு ஆயுதப் போர் வந்துவிடுமோ என்ற பயத்தை நாம் எப்படிச் சமாளிக்கலாம்?
‘அணு ஆயுதப் போர் நடக்குமோ, அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவோமோ’ என்றெல்லாம் நினைத்து இன்றைக்கு நிறைய பேர் பயத்திலேயே வாழ்கிறார்கள். ஆனால் அந்தப் பயத்தை குறைப்பதற்கும் அதை சமாளிப்பதற்கும் பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிற ஆலோசனைகளும் வாக்குறுதிகளும் உதவி செய்யும். எப்படி?
இந்தப் பூமிக்கும் அதில் வாழும் மக்களுக்கும் ஒரு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. அதை தெரிந்துகொள்வதால் நமக்கு நம்பிக்கை கிடைக்கிறது. இந்த நம்பிக்கை ‘நம் உயிருக்கு நங்கூரம் போல்’ இருப்பதால் நம் கவலைகளும் குறைகிறது. (எபிரெயர் 6:19) நாளைக்கு என்ன நடக்குமோ என்பதைப் பற்றியே நினைத்துக் கவலைப்படாமல் அந்தந்த நாளில் நடக்கிற விஷயத்தை பற்றி யோசித்தாலும் கவலைகளை நம்மால் குறைக்க முடியும். அதனால்தான், “அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 6:34.
நம்மைநாமே நன்றாக கவனித்துக்கொள்வது ரொம்ப முக்கியம். அப்போதுதான் நம்மால் தெளிவாக யோசிக்க முடியும், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவும் முடியும். இதை எப்படி செய்யலாம்? அணு ஆயுதம் சம்பந்தமாக புதிதாக வந்திருக்கிற செய்திகள், கணிப்புகள், கருத்துகள், உரையாடல்கள் இந்த மாதிரி கவலையை கொடுக்கிற விஷயங்களை வாசிப்பதை, கேட்பதை, கவனிப்பதை நாம் குறைக்கலாம். அதற்காக நாம் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தம் கிடையாது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை, ஒருவேளை நடக்கவே நடக்காத விஷயங்களை, நினைத்து அளவுக்கு மீறி கவலைப்படுவதை நிறுத்த, முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்.
கெட்ட செய்திகளுக்கு உங்கள் மனக் கதவை அடைத்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கிற நல்ல விஷயங்களை மட்டும் யோசியுங்கள்.
கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி படிக்க படிக்க உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கும், சந்தோஷம் இருக்கும், நிம்மதி இருக்கும்.
அர்மகெதோன் ஒரு அணு ஆயுதப் போராக இருக்கும் என்று பைபிள் சொல்கிறதா?
அர்மகெதோன் என்றாலே உலக அளவில் நடக்கிற ஒரு அணு ஆயுதப் போர் என்றுதான் நிறைய பேர் நினைக்கிறார்கள். அதனால் அதன் விளைவுகள் யோசிக்கவே முடியாத அளவுக்கு படுபயங்கரமாக இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
பைபிளில், “அர்மகெதோன்” என்ற வார்த்தை, ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்களுக்கும்,‘ அதாவது மனித அரசாங்கங்களுக்கும், கடவுளுக்கும் இடையே நடக்கிற போரை குறிக்கிறது. a (வெளிப்படுத்துதல் 16:14, 16) மனிதன் போடுகிற ஒரு அணுகுண்டு கண்மூடித்தனமாக மக்களையும் பூமியையும் அழித்துவிடும். ஆனால் அர்மகெதோன் அப்படி கிடையாது. பொல்லாதவர்களை மட்டும்தான் கடவுள் அர்மகெதோனில் அழிப்பார். அதற்குப் பின்பு உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் கண்டிப்பாக இருக்கும்.—சங்கீதம் 37:9, 10; ஏசாயா 32:17, 18; மத்தேயு 6:10.
போர் இல்லாத காலம் வரும் என்று பைபிள் சொல்கிறதா?
ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிற நாடுகளிடம் யெகோவா b தன்னுடைய சக்தியை காட்டி, அந்தப் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். அதோடு, அவை குவித்து வைத்திருக்கிற போர் ஆயுதங்களையும் அவர் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவார். தன்னுடைய பரலோக அரசாங்கத்தின் மூலம் அதை செய்வார். இந்த அரசாங்கம் ரொம்ப சீக்கிரத்தில் முழு பூமியையும் ஆட்சி செய்யும்.—தானியேல் 2:44.
மக்கள் எப்படி ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என்பதை கடவுளுடைய அரசாங்கம் கற்றுக்கொடுக்கும். ஏனென்றால், இந்த முழு பூமியையும் ஒரேவொரு அரசாங்கம்தான் ஆட்சி செய்யும். அதனால் வேறெந்த அரசாங்கமும் இருக்காது, கருத்து வேறுபாடுகளும் இருக்காது. போர் செய்ய இனி யாருமே கற்றுக்கொள்ள மாட்டார்கள். (மீகா 4:1-3) அதன் விளைவு என்ன? “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் சமாதானமாக வாழ்வார்கள், யாருமே அவர்களை பயமுறுத்த மாட்டார்கள்.”—மீகா 4:4, டுடேஸ் இங்கிலிஷ் வர்ஷன்.
a “அர்மகெதோன் போர் என்றால் என்ன?” என்ற கட்டுரையை பாருங்கள்.
b யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.