Skip to content

2014-வருடாந்தர-கூட்டத்தின்-அறிக்கை

நூறாண்டு ஆட்சி!

2014-வருடாந்தர-கூட்டத்தின்-அறிக்கை

உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் 130-வது வருடாந்தரக் கூட்டம், அக்டோபர் 4, 2014 அன்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு சுமார் 19,000 பேர் வந்திருந்தார்கள். அமெரிக்காவில், நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த ஜெர்ஸி நகரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மற்ற இடங்களில் கூடியிருந்தவர்கள் வீடியோ இணைப்பு மூலம் நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான மார்க் சான்டர்சன், அந்தக் கூட்டத்துக்கு சேர்மனாக இருந்தார். அவர் தன்னுடைய பேச்சை ஆரம்பித்த போது, இந்தக் கூட்டம் சரித்திரத்தில் ஒரு மைல் கல் என்பதாகக் குறிப்பிட்டார். ஏனென்றால், மேசியானிய அரசாங்கத்தின் ஆட்சி ஆரம்பமாகி 100 வருடங்கள் முடிவடைந்ததை நினைவுகூரும் விஷயங்கள் அதில் இடம்பெற்றன.

இந்த அரசாங்கம் கடந்த 100 வருடங்களாக சாதித்த மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றி சகோதரர் சான்டர்சன் சொன்னார்.

  • உலகளாவிய பிரசங்க வேலை. யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு, இந்த அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை எல்லா இடங்களுக்கும் போய்ச் சொல்வதற்கு அவருடைய மக்கள் அயராமல் உழைத்திருக்கிறார்கள். 1914-ல் சில ஆயிரங்களே இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 2014 ஊழிய ஆண்டில் 80 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. போதும் என்று யெகோவா சொல்லும்வரை நாம் தொடர்ந்து இந்த வேலையைச் செய்வோம்.

  • ஒரு தொகுதியாக இந்த அரசாங்கத்தின் குடிமக்களுக்குக் கிடைத்த பாதுகாப்பு. மதங்களும் அரசியல் அதிகாரிகளும் நம்மைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கும் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும், யெகோவா தன்னை வணங்குகிற மக்களை ஒரு தொகுதியாகப் பாதுகாத்திருக்கிறார். யெகோவா இன்றுவரையாக நம்மைக் கவனித்து வருகிறார் என்பதை அமெரிக்க உச்ச நீதி மன்றத்திலும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திலும் மற்ற நீதிமன்றங்களிலும் கிடைத்த சட்டப்பூர்வமான வெற்றிகள் உறுதிபடுத்துகின்றன.

  • எல்லா விதமான மக்களையும் ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடவுளுடைய அரசாங்கம், வேறு வேறு பின்னணிகளையும் நாடுகளையும் மொழிகளையும் சேர்ந்தவர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது… வித்தியாச வித்தியாசமான சவால்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவியிருக்கிறது... கடவுளை ஒன்றுபட்டு வணங்கும் ஒரு தொகுதியாக அவர்களை இணைத்திருக்கிறது. “இது ஓர் அற்புதம்! கடவுளாகிய யெகோவாவினால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்” என்று சகோதரர் சான்டர்சன் சொன்னார். சரித்திரத்தில் முத்திரை பதித்த இந்த வருடாந்தரக் கூட்டத்திற்கு வருவதைப் பற்றி இங்கே கூடிவந்திருக்கிற எல்லாரும் எவ்வளவு பெருமையாக நினைத்திருப்பீர்கள் என்று அவர் திரும்பவும் எடுத்துச் சொன்னார்.

யெகோவாவின் நண்பனாகு!—தொடர் வீடியோக்கள்

. பிள்ளைகளுக்கான இந்தத் தொடர் வீடியோக்களை இரண்டு வருடங்களாக நாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். இதுதான், வருடாந்தர கூட்டத்தின் நிகழ்ச்சியில் இடம்பெற்ற மற்றொரு விஷயம். முதலில் சகோதரர் சான்டர்சன், பல நாடுகளைச் சேர்ந்த பிள்ளைகளுடைய பேட்டிகள் அடங்கிய ஒரு வீடியோவை அறிமுகப்படுத்தினார். இந்த வீடியோக்களிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களுக்காக அந்தப் பிள்ளைகளின் பிஞ்சு மனசிலிருந்து வந்த பாராட்டுகள் கூடிவந்திருந்தவர்களின் நெஞ்சைத் தொட்டன.

பிறகு, இந்தத் தொடர் வீடியோக்களின் பாகமான ஒரு புதிய வீடியோ காட்டப்பட்டது. “தைரியமா பேச யெகோவா உதவி செய்வார்” என்பதே அதன் தலைப்பு. இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு சிறுமி, நாகமானின் மனைவியிடம் யெகோவாவைப் பற்றி தைரியமாகப் பேசிய பைபிள் சம்பவத்தை இந்த 12 நிமிட வீடியோ அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறது. (2 இராஜாக்கள் 5:1-14) அக்டோபர் 6, 2014, திங்கள்கிழமை, இந்த வீடியோ jw.org-ல் போடப்பட்டது, இது 20-க்கும் அதிகமான மொழிகளில் உள்ளது.

JW Language.

எல்க்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்காக இந்தப் புதிய அப்ளிக்கேஷனை சகோதரர் சான்டர்சன் அறிமுகப்படுத்தினார். வேறொரு மொழியைக் கற்றுக்கொண்டு ஊழியத்தை விரிவுபடுத்த விரும்புகிற யெகோவாவின் சாட்சிகளுக்கு இது உதவும். 18 மொழிகளில் 4,000-க்கும் அதிகமான வார்த்தைகளும் சொற்றொடர்களும் இதில் உள்ளன. இதுபோக, இன்னும் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களையும், ஊழியத்தில் பேசுவதற்கான விஷயங்களையும் வேறு பல அம்சங்களையும் இதில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

JW பிராட்காஸ்டிங்.

யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய இன்டர்நெட் டிவி ஸ்டேஷன் பற்றி சொல்லப்பட்டபோது எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் களைக்கட்டியது. ஒரு சோதனை அடிப்படையில், ஆங்கிலத்தில் மட்டுமே இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில், நியு யார்கைச் சேர்ந்த புருக்லின் தலைமை அலுவலகத்திலுள்ள இந்த ஸ்டேஷன் நம்முடைய வீடியோக்களையும் பாட்டுகளையும், உயிரோட்டமுள்ள பைபிள் வாசிப்பு பகுதிகளையும் ஒலிபரப்பும். அதுபோக, ஒவ்வொரு மாதமும் ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினராலோ அந்தக் குழுவின் கமிட்டிகள் ஒன்றில் உதவியாளராக இருப்பவராலோ நடத்தப்படும் நிகழ்ச்சியும் இருக்கும்.

சகோதரர் சான்டர்சன், இந்த ஒலிபரப்பு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக முதல் ஒலிபரப்பில் இடம்பெறும் சில விஷயங்களைப் போட்டுக் காட்டினார். ஆளும் குழுவின் அங்கத்தினரான ஸ்டீஃபன் லெட் நடத்திய அந்த நிகழ்ச்சியில், புதிய டிவி ஸ்டேஷனைத் தயார் செய்வதற்காக திரைக்குப் பின்னால் நடந்த பல வேலைகளைப் பற்றி சொன்னார். அக்டோபர் 6, 2014-ல் இந்த JW பிராட்காஸ்டிங் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது, tv.jw.org-ல் இதைப் பார்க்கலாம்.

“100 வருடங்களைத் தாண்டிய ஆட்சி.

பிரசங்க வேலையை அதிகளவில் செய்வதற்கும் திறமையாகச் செய்வதற்கும் கடவுளுடைய அரசாங்கம் எப்படிப் படிப்படியாக நமக்கு உதவியிருக்கிறது என்பதைப் பற்றி ஒரு வீடியோவில் ஆளும் குழுவைச் சேர்ந்த சாம்யெல் ஹெர்ட் விளக்கினார். சரித்திரத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் சில படக் காட்சிகள், நிஜ சம்பவ நடிப்புகள், பல வருடங்களாக சேவை செய்கிறவர்களின் அனுபவங்கள் ஆகியவை அதில் இடம் பெற்றன. நம் ஊழியத்தைச் சிறப்பாகச் செய்வதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றியும் அதில் சொன்னார். உதாரணத்திற்கு, “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்,” ஃபோனோகிராஃப்கள், பிரசங்க அட்டைகள், சவுண்டு கார்கள், ஊர்வலமாகப் போனது (இன்ஃபர்மேஷன் மார்ச்சஸ்) போன்றவற்றைப் பற்றி சொன்னார்.

கடவுளுடைய அரசாங்கம் அதன் முதல் நூறாண்டு ஆட்சியில் சாதித்தவற்றைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை? கடவுளுடைய அரசாங்கம் நமக்கு இன்னும் நிஜமானதாக ஆகிறது, எதிர்காலத்தில் வேறு எதையெல்லாம் அது சாதிக்கப் போகிறது என்ற நம் எதிர்பார்ப்பை அது அதிகமாக்குகிறது.

வணக்கத்திற்கான பாடல்கள்

. யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள் என்ற நம் பாட்டு புத்தகத்தில் சில மாற்றங்கள் செய்யத் திட்டம் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆளும் குழுவைச் சேர்ந்த டேவிட் ஸ்ப்லேன் சொன்னபோது கூடிவந்திருந்தவர்கள் எல்லாரும் பூரித்துப் போனார்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் அட்டையைப் போன்ற சாம்பல் நிற அட்டை இதற்குப் பயன்படுத்தப்படும். புத்தகத்தின் ஓரங்களில் ஸில்வர் நிறம் பூசப்படும். நம் வணக்கத்தில், இசைக்கு முக்கிய இடம் இருப்பதை இவை காட்டும்.

பாட்டுப் புத்தகத்தில் இருக்கிற பாடல்களோடு இன்னும் சில பாடல்கள் சேர்க்கப்படும் என்றும் சகோதரர் ஸ்ப்லேன் சொன்னார். புதிய பாடல்களைக் கற்றுக்கொள்வதற்காக இந்தப் புதிய பாட்டுப் புத்தம் கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. பாடல்கள் ஒவ்வொன்றும் தயாரானதுமே அவை jw.org-ல் போடப்படும்.

அந்த வாரத்தின் ஆரம்பத்தில் பெத்தேல் குடும்பத்தினர் பாடிப் பழகிய மூன்று புதிய பாடல்கள் அந்த வருடாந்தர கூட்டத்தில் பாடப்பட்டன. “கடவுளுடைய ஆட்சி வருக” என்ற தலைப்பிலான புதிய பாட்டை சகோதரர் ஸ்ப்லேன் தலைமையில் பாடல் குழுவினர் பாடினார்கள். கடவுளுடைய ஆட்சி பிறந்து நூறாண்டு முடிவடைந்ததைக் குறிப்பதற்காகவே இந்தப் பாட்டு இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த நிகழ்ச்சிக்கு இடையில் பாடல் குழுவினரும் கூடிவந்திருப்போரும் சேர்ந்து “தைரியத்தைத் தாருங்கள்” என்ற இன்னொரு புதிய பாட்டைப் பாடினார்கள்.

பேட்டி.

ஆளும் குழுவைச் சேர்ந்த கெரட் லாஷ், பெத்தேலில் பல வருட அனுபவமுள்ள மூன்று தம்பதிகள் கொடுத்த பேட்டியை பதிவு செய்து போட்டுக் காட்டினார். இத்தனை வருடங்களில் அவர்கள் பார்த்த பல மாற்றங்களைப் பற்றி அவர்கள் சொன்னார்கள். கடவுளுடைய மக்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்கள். நம்முடைய அமைப்பில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பற்றி பைபிள் ஏற்கெனவே சொல்லியிருப்பதை சகோதரர் லாஷ் குறிப்பிட்டார். மேலும், யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து தொடர்ந்து முன்னேறும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தினார்.—ஏசாயா 60:17.

“நிழலும் நிஜமும்.”

இந்தப் பேச்சை சகோதரர் ஸ்ப்லேன் கொடுத்தார். இப்போதெல்லாம் நம் பிரசுரங்களில், பைபிள் சம்பவங்களின் நிழல்-நிஜம் பற்றி முன்புபோல அதிகமாக விளக்கப்படாததற்கான காரணத்தை அவர் சொன்னார்.

முன்பெல்லாம், பைபிளில் சொல்லப்பட்டுள்ள உண்மையுள்ள நிறைய ஆண்களும் பெண்களும் இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களின் தொகுதிக்கு முன்நிழலாக இருக்கிறார்கள் என்பதாக விளக்கப்பட்டது. அதுபோல, பல பைபிள் பதிவுகளும், இன்றுள்ள கடவுளின் ஊழியர்களோடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசன சம்பவங்களாகக் கருதப்பட்டன. இப்படிப்பட்ட ஒப்புமைகளைப் படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும், இப்போது வருகிற பிரசுரங்களில் நிழல்-நிஜம் பற்றி ஏன் விவரிப்பதே இல்லை?

சில ஆட்களை பேர்பெற்ற ஒருவருக்கும் சில சம்பவங்களை முக்கியமான சம்பவத்துக்கும் முன்நிழலாக இருப்பதாக பைபிள் குப்பிடுகிறது. இப்படி நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள தொடர்பைத் தெளிவாகக் காட்டும்போது நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். “அப்படி எதையும் பைபிள் சொல்லாதபோது நாமும் எதையும் சொல்லக் கூடாது” என்று சகோதரர் ஸ்ப்லேன் சொன்னார். ஒரு பைபிள் சம்பவத்தை ரொம்பவே துருவி ஆராயக் கூடாது. ஒரு சம்பவத்தின் நிழல்-நிஜம், நிறைவேற்றம் இதையெல்லாம் கண்டுபிடிக்கும் எண்ணத்தோடு துருவி ஆராய்ந்தால், நம்முடைய வாழ்க்கைக்கு பிரயோஜனமான பாடங்கள் அதில் இருப்பதைப் பார்க்கத் தவறிவிடுவோம். நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, இதை மனதில் வைக்க வேண்டும்.—ரோமர் 15:4. *

“நீங்கள் ‘விழிப்புடன் இருப்பீர்களா?’”

இந்தப் பேச்சை சகோதரர் லெட் கொடுத்தார். இது பத்துக் கன்னிப்பெண்களைப் பற்றி இயேசு சொன்ன உவமையின் புதுவிளக்கமாக இருந்தது. (மத்தேயு 25:1-13) இந்தப் புது விளக்கத்தின்படி, மணமகன் இயேசுவையும், கன்னிப்பெண்கள் இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களையும் குறிக்கிறார்கள். (லூக்கா 5:34, 35; 2 கொரிந்தியர் 11:2) இந்த உவமை, கடைசி நாட்களின் உச்சக்கட்டமான மிகுந்த உபத்திரவத்தின்போது நடக்கப்போகும் சம்பவத்துக்குப் பொருந்துகிறது. இந்த உவமையில் வருகிற புத்தியில்லாத ஐந்து கன்னிப்பெண்களைப் பற்றி இயேசு விளக்கியபோது, அபிஷேகம் செய்யப்பட்ட தன்னுடைய ஊழியர்களில் நிறைய பேர் உண்மையில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்றும் அவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, முக்கியமான எச்சரிப்பைக் கொடுப்பதற்காகவே அதைச் சொன்னார். ஐந்து கன்னிப்பெண்கள் புத்தியுள்ளவர்களும் மற்ற ஐந்து கன்னிப்பெண்கள் புத்தியில்லாதவர்களுமாக இருந்ததுபோல, அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொருவராலும் தயாராகவும் விழிப்பாகவும் இருக்க முடியும்; அல்லது உண்மையில்லாதவர்களாக ஆகிவிடவும் முடியும்.

ஒரு பைபிள் பதிவை ரொம்பவே துருவி ஆராயக்கூடாது என்ற நியமத்தை மனதில் வைத்து பைபிளைப் படித்தால், இந்த உவமைக்கும் நம்முடைய காலத்துக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் நுணுக்கமாக ஆலசி ஆராய வேண்டிய அவசிமில்லை என்று தெரிகிறது. அதற்குப் பதிலாக, நமக்குப் பிரயோஜனமான பாடங்களையே இந்த உவமையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, ‘வேறே ஆடுகளாக’ இருந்தாலும் சரி, நம்முடைய ஒளி மற்றவர்கள்முன் பிரகாசிக்கும்படி நடந்துகொள்வதும் ‘விழிப்புடன் இருப்பதும்’தான் நம்முடைய கடமை. (யோவான் 10:16; மாற்கு 13:37; மத்தேயு 5:16) நமக்காக இன்னொருவர் உண்மையுள்ளவராக இருக்க முடியாது. ஆன்மீக விஷயங்களில் கவனமாகவும் ஊழியத்தில் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் ‘ஜீவனைத் தெரிந்துகொள்ள’ வேண்டும்.—உபாகமம் 30:19.

“தாலந்துகளைப் பற்றிய உவமை.”

அடுத்ததாக, ஆளும் குழுவைச் சேர்ந்த ஆன்டனி மாரிஸ் பேசினார். தாலந்து பற்றிய உவமையின் புது விளக்கத்தை கூடிவந்திருந்தவர்களுக்குப் புரிய வைத்தார். (மத்தேயு 25:14-30) இந்த உவமையில் சொல்லப்பட்டுள்ள எஜமான் (இயேசு), தன்னுடைய அடிமைகளுக்கு (பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட உண்மை ஊழியர்கள்) பலன் அளிப்பதற்காக வரப்போவது எதிர்காலத்தில்தான் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அந்த சமயத்தில்தான் அவர் தன்னுடைய அடிமைகளைப் பரலோகத்துக்கு அழைத்துக்கொண்டு போவார். ‘பொல்லாத சோம்பேறி அடிமைக்கு’ என்ன நடக்கும் என்பதைப் பற்றி இயேசு சொன்னபோது, அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களில் நிறைய பேர் எதிர்காலத்தில் உண்மையில்லாதவர்களாக ஆகிவிடுவார்கள் என்று அவர் முன்னறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் விழிப்புடன் இருப்பதும், பொல்லாத அடிமையின் மனப்பான்மையையும் செயல்களையும் விட்டுவிடுவதும் அவசியம் என்றுதான் எச்சரித்தார்.

இந்த உவமையிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இதில் சொல்லப்பட்டுள்ள எஜமான் மதிப்புள்ள ஒன்றை தன்னுடைய அடிமைகளிடம் ஒப்படைத்திருந்தார். அதேபோல், இயேசுவும் தான் மதிப்பாக நினைக்கிற ஒன்றை தன்னுடைய ஊழியர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அதுதான் பிரசங்கித்து சீஷராக்கும் வேலை. நாம் எல்லாருமே நம்முடைய சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி இந்தப் பிரசங்க வேலையை மும்முரமாகச் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இதை ஆர்வத்தோடு செய்து வருவதற்காகக் கூடிவந்திருப்போரை சகோதரர் மாரிஸ் பாராட்டினார்.

“சீக்கிரத்தில் கடவுளுடைய மக்களைத் தாக்கப்போவது யார்?”

ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பைக் கொண்ட இந்த பேச்சுதான், நிகழ்ச்சியின் கடைசி பேச்சாக இருந்தது. இதை ஆளும் குழுவைச் சேர்ந்த ஜெஃப்ரி ஜாக்சன் கொடுத்தார். எதிர்காலத்தில், கடவுளுடைய மக்கள்மேல் வரப்போகும் தாக்குதலைப் பற்றி சகோதரர் ஜாக்சன் பேசியபோது, மாகோகு தேசத்தானான கோகுதான் அந்தத் தாக்குதலை நடத்தும் என்று சொன்னார்.—எசேக்கியேல் 38:14-23.

பிசாசாகிய சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்ட பிறகு, அவன் கோகு என்ற இன்னொரு பெயரிலும் அழைக்கப்படுவான் என்று நாம் முன்பு புரிந்துவைத்திருந்தோம். ஆனால், அந்த விளக்கத்தின் பேரில் எழும்பிய முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை சகோதரர் ஜாக்சன் விளக்கினார். உதாரணமாக, கோகு முறியடிக்கப்படும்போது அவனை ‘சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுக்கப்போவதாக’ யெகோவா முன்னறிவித்தார் (எசேக்கியேல் 39:4) கோகுவும் அவனுடைய எல்லா சேனையையும் பூமியில் புதைக்க ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் யெகோவா முன்னறிவித்தார். (எசேக்கியேல் 39:11) காண முடியாத உருவத்தில் இருக்கிற ஒருவனுக்கு இதெல்லாம் எப்படி நடக்கும்? சொல்லப்போனால், சாத்தான் அபிசுக்குள் தள்ளப்பட்டு அங்கே 1,000 வருஷங்கள் அடைக்கப்பட்டிருப்பான். அவன் யாருக்கும் இரையாவதும் இல்லை, புதைக்கப்படுவதும் இல்லை. (வெளிப்படுத்துதல் 20:1, 2) அதுமட்டுமல்ல, 1,000 வருஷங்கள் முடிந்ததும், அவன் அபிசிலிருந்து விடுதலை செய்யப்படுவான். “பூமியின் நான்கு திசைகளிலும் உள்ள தேசங்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றுவதற்காக புறப்பட்டுப் போவான்” (வெளிப்படுத்துதல் 20:7, 8) சாத்தானே கோகுவாக இருக்கும்போது, அவன் எப்படி கோகுவை ஏமாற்ற முடியும்?

அப்படியானால், எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள மாகோகு தேசத்தானான கோகு, சாத்தானைக் குறிக்கவில்லை. எதிர்காலத்தில் கடவுளுடைய மக்களுக்கு எதிராகத் திரும்பப்போகிற பல தேசங்களின் தொகுதியையே அது குறிக்கிறது என்று சகோதரர் ஜாக்சன் விளக்கினார். கோகுவின் இந்தத் தாக்குதலும், ‘வடதிசை ராஜாவின்’ தாக்குதல் மற்றும் ‘பூமியின் ராஜாக்களுடைய’ தாக்குதலும் ஒன்றையே அர்த்தப்படுத்தலாம்.—தானியேல் 11:40, 44, 45; வெளிப்படுத்துதல் 17:12-14; 19:19.

“வடதிசை ராஜா” யாரைக் குறிக்கிறார்? அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முடிவு நெருங்க நெருங்க, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வது நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. கடவுளுடைய மக்கள்மேல் வரப்போகும் இந்தத் தாக்குதலை நினைத்து நாம் பயப்படுவதில்லை. ஏனென்றால், மாகோகு தேசத்தானாகிய கோகு தாக்கும்போது அவன் முறியடிக்கப்பட்டு அடியோடு அழிக்கப்படுவான் என்றும், அதன் பிறகு கடவுளுடைய மக்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் நமக்குத் தெரியும். *

முடிவுரை.

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இப்போது பாக்கெட் சைஸில் கிடைப்பதாக சகோதரர் சான்டர்சன் சொன்னார். பைபிளின் ஆடியோ பதிப்பும் தயாரிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார். அதில், பைபிள் கதாபாத்திரங்கள் பேசுவதைப் போல பலர் தங்களுடைய குரலில் வசனங்களை வாசித்திருப்பார்கள். இந்த ஆடியோ பதிவுகள் jw.org-ல் போடப்படும்; முதலில், மத்தேயு புத்தகத்தின் பதிவு போடப்படும்.

சங்கீதம் 106:1-லுள்ள (NW) “யெகோவா நல்லவர், அவருக்கு நன்றி சொல்லுங்கள்” என்பதே 2015-க்கான நம்முடைய வருடாந்தர வசனம் என்று சகோதரர் சான்டர்சன் அறிவித்தார். ஒவ்வொரு நாளும் என்னென்ன காரணங்களுக்காக நாம் நன்றியோடு இருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கும்படி அவர் எல்லாரையும் உற்சாகப்படுத்தினார்.

புதிய பாட்டுகளில் மூன்றாவது பாட்டு கூட்டத்தின் முடிவில் பாடப்பட்டது. அதன் தலைப்பு, “யெகோவா என்பதே உங்கள் பெயர்.” மேடையில் பாடல் குழுவினரோடு ஆளும் குழு அங்கத்தினர்கள் ஏழு பேரும் நின்றுகொண்டு இந்த அருமையான பாட்டைப் பாடியபோது, கூடிவந்திருந்தவர்கள் எல்லாரும் அவர்களோடு சேர்ந்து பாடினார்கள். சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாக இருந்த கூட்டத்தை நிறைவு செய்த பொருத்தமான பாட்டு அது!

^ பாரா. 22 இந்தப் பேச்சும் இதற்குப் பின் கொடுக்கப்பட்ட இரண்டு பேச்சுகளும் மார்ச் 15, 2015, காவற்கோபுரத்தில் வெளியாகப்போகும் கட்டுரைகளின் அடிப்படையில் அமைந்தது.

^ பாரா. 30 இந்தப் பேச்சு மே 15, 2015, காவற்கோபுரத்தில் வெளியாகப்போகும் கட்டுரையின் அடிப்படையில் அமைந்தது