Skip to content

வாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி 133-வது பட்டமளிப்பு விழா

2012 செப்டம்பர் 8, சனிக்கிழமை.

வாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி 133-வது பட்டமளிப்பு விழா

நியு யார்க்கில் பேட்டர்ஸன் என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கல்வி மையம் இருக்கிறது. அங்கு நடந்த வாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் 48 மாணவர்கள் ஐந்து மாதம் தீவிரமாக படித்து பட்டங்கள் பெற்றார்கள். மாணவர்களின் குடும்பத்தை சேரந்தவர்கள், நண்பர்கள், மற்றவர்கள் என 9,694 பேர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்கள்.

1943 முதல், அனுபவம் வாய்ந்த 8,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு மிஷனரி சேவை செய்ய இந்த பள்ளி பயிற்சி கொடுத்திருக்கிறது. பைபிள்தான் இவர்களுடைய முக்கிய பாட புத்தகம். இந்த பள்ளி மாணவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்துகிறது, பல்வேறு வகையான மிஷனரி சேவையில் வரும் சவால்களை சமாளிப்பதற்கு தேவையான ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

‘விரும்பத்தக்கவை எவையோ அவற்றையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.’ ஆளும் குழு அங்கத்தினராகவும் இந்த நிகழ்ச்சிக்கு சேர்மனாகவும் இருக்கிற ஆன்டனி மாரிஸ், “விரும்பத்தக்கவை எவையோ . . . அவற்றையே யோசித்துக்கொண்டிருங்கள்” என்று பிலிப்பியர் 4:8-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தையின் அடிப்படையில் அறிமுக குறிப்புகளை சொன்னார்.

அன்பே இல்லாத இந்த உலகத்தில், நம்பிக்கையான மனநிலையோடு வாழ்வதற்கு விரும்பத்தக்க காரியங்களை சிந்தித்துக்கொண்டிருப்பது உதவியாக இருக்கும் என்று சகோதரர் மாரிஸ் குறிப்பிட்டார். “இந்த மோசமான உலகத்தில் விரும்பத்தக்க விஷயங்களை தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அதோடு, விரும்பத்தக்க ஆட்களாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

நம்முடைய பரலோக அப்பா நாம் செய்கிற தவறுகளையே பார்த்துக்கொண்டு இருப்பதில்லை. இந்த விதத்தில் அவர் நமக்கு அருமையான உதாரணமாக இருக்கிறார். (சங்கீதம் 130:3) “சகோதர சகோதரிகளுடைய தவறுகளையே பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள், அதற்குப் பதிலாக எப்போதும் விரும்பத்தக்கவர்களாக இருங்கள்” என்று சகோதரர் மாரிஸ் சொன்னார்.

“அறிவை சம்பாதியுங்கள்பெரிய ஞானி மாதிரி நடந்துகொள்ளாதீர்கள்.” அமெரிக்க கிளை அலுவலக குழுவின் அங்கத்தினரான ஹரல்ட் கார்கர்ன் பிரசங்கி 7:16-ன் அடிப்படையில் பேச்சு கொடுத்தார். நாம் அறிவை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். மற்றவர்களைவிட நமக்கு நிறைய அறிவு இருக்கிறது என்று நினைக்கக் கூடாது.

மற்றவர்களுக்கு ஆலோசனையோ புத்திமதியோ கொடுக்கும்போது, அன்போடு கொடுக்க வேண்டும் என்று சகோதரர் கார்கர்ன் சொன்னார். கடவுள் ஒருவரிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைவிட அதிகமாக நாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. “உங்களுடைய ஞானத்தையும் அறிவையும் புரிந்துகொள்ளும் திறனையும் நன்றாக பயன்படுத்துங்கள். அப்போது, உங்களுடைய சகோதரர்கள் உங்களோடு பழக விரும்புவார்கள்” என்று சகோதரர் கார்கர்ன் உற்சாகப்படுத்தினார்.

‘தேவனுடைய செயல்களை மறக்காதீர்கள்.’ (சங்கீதம் 78:7) ஒரு பிள்ளை நல்லவிதமாக நடந்தாலும் சரி, மோசமாக நடந்தாலும் சரி, அது அந்த பிள்ளையின் பெற்றோர் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுகிறது என்று சொல்லி ஆளும் குழு அங்கத்தினரான கை பியர்ஸ் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். (நீதிமொழிகள் 20:11) அதேபோல நாம் நடந்துகொள்ளும் விதமும் நம்முடைய பரலோக அப்பா எப்படிப்பட்டவர் என்பதை காட்டும். “நீதியான செயல்களைச் செய்துவராத எவனும் கடவுளின் பக்கம் இல்லை; அதேபோல், தன் சகோதரன்மீது அன்பு காட்டாத எவனும் கடவுளின் பக்கம் இல்லை; கடவுளுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.”—1 யோவான் 3:10.

மனத்தாழ்மை உட்பட நல்ல கிறிஸ்தவ குணங்களை காட்டியதால்தான் இந்த மாணவர்கள் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார்கள் என்று சகோதரர் பியர்ஸ் சொன்னார். தொடர்ந்து மனத்தாழ்மையைக் காட்டுங்கள் என்று அவர்களுக்கு நினைப்பூட்டினார். இந்த பள்ளியில் படித்ததால் மற்றவர்களைவிட அவர்கள் உயர்ந்தவர்களாக ஆகிவிடுவதில்லை. அதற்கு பதிலாக, மனத்தாழ்மைக்கு சிறந்த முன்மாதிரியாக இருப்பதற்கும், உலகளாவிய சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க உதவி செய்வதற்கும் இந்த பள்ளி இவர்களை தயார்படுத்தியிருக்கிறது. (சங்கீதம் 133:1) “இப்போது உங்களுக்கு நல்ல பைபிள் அறிவு இருக்கிறது. இந்த அறிவை பயன்படுத்தி யெகோவாவுடன் உங்களுக்கு இருக்கிற பந்தத்தை பலப்படுத்த முடியும்” என்று சகோதரர் பியர்ஸ் சொன்னார்.

“செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்.” “நமக்கு பிடிக்காத ஒரு நியமிப்பை யெகோவா கொடுத்தால் அதை எற்றுக்கொள்வோமா?” என்று தேவராஜ்ய பள்ளிகள் இலாகாவின் கண்காணியான வில்லியம் சாம்யல்சன் கேட்டார். லூக்கா 17:7-10-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளில் இருந்து ஒரு நல்ல பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். “கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்தபின், ‘நாங்கள் ஒன்றுக்கும் உதவாத அடிமைகள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்” என்று அந்த வசனம் சொல்கிறது. நம்முடைய எஜமானரான யெகோவாவுடன் ஒப்பிடும்போது ‘நாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள்தான்.’

மாணவர்கள் வகுப்பில் அமர்ந்து பல வாரங்களாக படித்தார்கள். அது சிலருக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம். “ஆனால், நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தீர்கள். அப்படி செய்ததால் உங்களுக்கு நிறைய நன்மை கிடைத்திருக்கிறது. உங்கள் விசுவாசம் அதிகமாகி இருக்கிறது” என்று சகோதரர் சாம்யல்சன் சொன்னார். “நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளாக இருக்கும் நீங்கள், பிரபஞ்சத்தின் எஜமானருக்கு சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தை நினைத்து எப்போதும் சந்தோஷப்படுங்கள்” என்று சொல்லி பேச்சை முடித்தார்.

“சவால்களை எதிர்ப்படும்போது யெகோவா சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்.” நம்பிக்கை இழந்துபோகும் சமயங்கள் நிச்சயம் வரும் என்று சொல்லி, தேவராஜ்ய பள்ளிகள் இலாகாவின் உதவி கண்காணியான சாம் ராபர்ஸன் மாணவர்களை எச்சரித்தார். அதனால், அப்படிப்பட்ட சமயங்களில் கடவுளிடமிருந்து உற்சாகத்தை பெற்ற பைபிள் உதாரணங்களை நினைத்து பார்க்கும்படி சொன்னார். உதாரணத்திற்கு, ‘யெகோவா . . . உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்று சொல்லி யோசுவாவை மோசே உற்சாகப்படுத்தினார். (உபாகமம் 31:8) அதனால்தான் தன்னுடைய மரணத்திற்கு முன்பு யோசுவாவினால் இப்படி சொல்ல முடிந்தது: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.”—யோசுவா 23:14.

‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். (எபிரெயர் 13:5) யெகோவா தன்னுடைய பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ற விதத்தில் (“நினைத்ததைச் செய்பவர்”) வாழ்வார் என்றும் தம் ஊழியர்களை கவனித்துக்கொள்வதற்காக என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்வார் என்றும் நமக்கு உறுதியளிக்கிறார். “யெகோவாவுக்கு நீங்கள் செய்யும் சேவையை எதுவும் நிறுத்திவிட அனுமாதிக்காதீர்கள். ஒருபோதும் அவருடைய சேவையை விட்டுவிடாதீர்கள். யெகோவா உங்களை ஒருபோதும்... ஒருபோதும்... ஒருபோதும்... கைவிட மாட்டார் என்பதை நினைவில் வையுங்கள்” என்று சொல்லி சகோதரர் ராபர்ஸன் உற்சாகப்படுத்தினார்.

‘அவர்களுடைய சத்தம் உலகெங்கும் ஒலித்தது.’ (ரோமர் 10:18) பேட்டர்ஸன் பகுதியில் ஊழியம் செய்தபோது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பல நாடுகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் சொன்னார்கள். சிலர் அதை நடித்தும் காட்டினார்கள். கிலியட் பள்ளியின் போதகரான மார்க் நூமேரின் உதவியுடன் இதை செய்தார்கள். உதாரணத்திற்கு, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அவர்களுடைய சொந்த நாட்டிலிருந்து வந்த மூன்று பெண்களை சந்தித்தார்கள். அவர்களிடம் ஜூலு மற்றும் ஸோஸா மொழிகளில் பேசியதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். இலங்கையிலிருந்து வந்த தம்பதியினர் ஒரு இந்தியரை சந்தித்தார்கள். அவருடைய மனைவியும் மகளும் இலங்கையில் இருப்பதாக அவர் சொன்னார். அந்த நபர் பைபிளை பார்த்ததே இல்லை என்றும் சொன்னார், அதனால் இந்த தம்பதியினர் அவர்களுடைய பைபிளை அவருக்கு கொடுத்தார்கள்.

“எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு தகுதி பெற்றவராக இருங்கள்.” பட்டம் பெறவிருந்த இரண்டு தம்பதிகளை எழுத்துக் குழு உதவியாளரான ஜென் ஸ்மலி பேட்டியெடுத்தார். சியர்ரா லியோனிலிருந்து வந்த தம்பதியினர் அவர்களுடைய அனுபவத்தை சொன்னார்கள். தங்களுடைய வீட்டில் குழாய் வசதி இல்லாததால் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு தேவையான தண்ணீரை சுமந்துகொண்டு வந்ததாக சொன்னார்கள். ஆனால் ஆர்வம் காட்டுகிற 50 பேருக்கு பைபிள் படிப்பை நடத்தும் சந்தோஷத்தோடு ஒப்பிடும்போது இந்த கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொன்னார்கள். எதிர்காலத்தில் கொடுக்கப்படும் நியமிப்புகளை நன்றாக செய்ய இந்த கிலியட் பள்ளி தங்களை தயார்படுத்தியதற்காக நன்றியுடன் இருப்பதாக பட்டம் பெறும் நான்கு பேரும் சொன்னார்கள். —2 தீமோத்தேயு 3:16, 17.

“கடைசிவரை... ஏன் அதற்கு பின்பும்... சகித்திருங்கள்.” ஆளும் குழு அங்கத்தினரான கெரட் லாஷ் முக்கிய பேச்சை கொடுத்தார். நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவர் கடைசிவரை ஓடி வெற்றிபெற தனக்கு போதுமான தெம்பு இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வார் என்று சொல்லி பேச்சை ஆரம்பித்தார். பொதுவாக ஓட்டப் பந்தயத்தில் ஒருவர்தான் வெற்றிபெறுவார், ஆனால் கிறிஸ்தவ ஓட்டப் பந்தயத்தில் கடைசிவரை சகித்திருக்கிற எல்லாரும் வெற்றிபெறுவார்கள் என்று சொன்னார்.

சகித்திருப்பது என்றால், துன்புறுத்தல்கள், சோதனைகள், ஏமாற்றங்கள் என எது வந்தாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து கடவுளுக்கு சேவை செய்வதை குறிக்கிறது. “முடிவுவரை சகித்திருப்பவனே மீட்புப் பெறுவான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:13) நாம் சகித்திருப்பதை யெகோவாவும் இயேசுவும் கவனிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கஷ்டங்களின் மத்தியிலும் சகித்திருப்பதற்கு உதவும் அநேக குறிப்புகளை சகோதரர் லாஷ் சொன்னார். இதோ சில குறிப்புகள்:

  • கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். அவர்தான் நமக்கு ‘சகிப்புத்தன்மையை’ கொடுக்கிறார். ‘ஒவ்வொரு நாளும் நம்முடைய பாரத்தைச் சுமக்கிறார்.’—ரோமர் 15:5; சங்கீதம் 68:19, NW.

  • விட்டுக்கொடுக்காமல் இருக்க உறுதியாக இருங்கள். “கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்” என்ற நம்பிக்கையோடு இருங்கள்.—1 கொரிந்தியர் 10:13.

  • எதிர்கால நம்பிக்கையை கண்முன்னால் வையுங்கள். இயேசு “தம்முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் கழுமர வாதனையைச் சகித்தார்.”—எபிரெயர் 12:2.

நாம் இப்போது எல்லை கோட்டுக்கு பக்கத்தில் வந்துவிட்டதால், ஓட்டத்தை நிறுத்திவிடுவதற்கு இது நேரம் அல்ல என்பதை சகோதரர் லாஷ் வலியுறுத்தினார். “நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுவோமாக.”—எபிரெயர் 12:1.

பட்டம் பெற்ற ஒரு சகோதரர் தங்களுக்கு கிடைத்த நடைமுறையான பயிற்சிக்காக மற்ற மாணவர்களின் சார்பாக நன்றிக் கடிதத்தை வாசித்து இந்த அருமையான நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். பைபிளை காலக்கிரமத்தின்படி ஆழமாக படித்தது கடவுளுடைய விருப்பத்தை நன்றாக புரிந்துகொள்ள உதவி செய்தது என்றும், தங்களுடைய விசுவாசம் பலமாக ஆனது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். “நாங்கள் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை கடைப்பிடிப்போம் என்பதே எங்களுடைய தீர்மானம்.”