யெகோவாவின் சாட்சிகள் ஏன் அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருக்கிறார்கள்?
யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள், எங்களுடைய மத நம்பிக்கைகள் காரணமாக அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருக்கிறோம். எந்த ஒரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ நாங்கள் ஓட்டு போடுவது இல்லை. அரசியல் பதவிகளை வகிப்பதும் இல்லை. அரசியல் தலைவர்கள் எங்களுக்கு சாதகமாக செயல்பட அவர்களை தூண்டுவதும் இல்லை. அரசாங்கங்களுக்கு எதிராக நடக்கும் எந்தவொரு போராட்டத்திலும் நாங்கள் கலந்துகொள்வதில்லை. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களை அடிப்படையாக வைத்து நாங்கள் இப்படி செய்கிறோம்.
நாங்கள் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுகிறோம். அவர் எந்த அரசியல் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 6:15) “இந்த உலகத்தின் பாகமாக” இருக்க கூடாது என்று தன்னுடைய சீஷர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். அரசியல் விஷயங்களில் எந்த பக்கமும் சாய கூடாது என்றும் தெளிவாக புரிய வைத்தார்.—யோவான் 17:14, 16; 18:36; மாற்கு 12:13-17.
நாங்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த “அரசாங்கத்தைப் பற்றிய . . . நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) அவர் கொடுத்த அந்த வேலையை நாங்கள் செய்கிறோம். கடவுளுடைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக, நாங்கள் எந்த நாட்டின் அரசியல் விஷயத்திலும் தலையிடுவதில்லை. நாங்கள் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் அரசியல் விஷயத்திலும் நடுநிலையோடு இருக்கிறோம்.—2 கொரிந்தியர் 5:20; எபேசியர் 6:20.
நாங்கள் நடுநிலையோடு இருப்பதால், எல்லாரிடமும் யதார்த்தமாக கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நல்ல செய்தியை சொல்ல முடிகிறது. அவர்கள் எந்த அரசியல் அமைப்பை ஆதரிக்கிறவர்களாக இருந்தாலும் சரி, எங்களால் தயக்கமில்லாமல் பேச முடிகிறது. உலகத்தில் இருக்கிற பிரச்சினைகள் எல்லாவற்றையும் கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் சரி செய்யும் என்பதை நாங்கள் எங்களுடைய சொல்லாலும் செயலாலும் காட்டுகிறோம்.—சங்கீதம் 56:11.
நாங்கள் எந்த அரசியல் தரப்பையும் ஆதரிக்காததால் உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கிறோம். (கொலோசெயர் 3:14; 1 பேதுரு 2:17) ஆனால், சில மதங்கள் அரசியல் விஷயங்களில் தலையிடுவதால் அதன் அங்கத்தினர்கள் மத்தியிலும் ஒற்றுமை இல்லாததை பார்க்க முடிகிறது.—1 கொரிந்தியர் 1:10.
அரசாங்கங்களுக்கு மதிப்பு கொடுக்கிறோம். அரசியல் விஷயங்களில் நாங்கள் தலையிடுவதில்லை என்றாலும் அரசாங்கத்துக்கு இருக்கிற அதிகாரத்தை மதிக்கிறோம். “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்ற பைபிளின் கட்டளையை கடைப்பிடிக்கிறோம். (ரோமர் 13:1) அதனால் அரசாங்க சட்டங்களுக்கு கீழ்ப்படிகிறோம், வரி கட்டுகிறோம், மக்களுடைய நல்லதுக்காக அரசாங்கங்கள் எடுக்கிற எல்லா விஷயத்துக்கும் முழு ஆதரவு காட்டுகிறோம். அரசாங்கங்களுக்கு எதிராக நாங்கள் ரகசியமாக செயல்படுவதில்லை. அதற்கு பதிலாக, “ராஜாக்களுக்காகவும் உயர் பதவியில் இருக்கிறவர்களுக்காகவும்” கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்ற பைபிளின் ஆலோசனைப்படி நடக்கிறோம். (1 தீமோத்தேயு 2:1, 2, அடிக்குறிப்பு) முக்கியமாக, எங்களுடைய வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் முடிவு எடுக்கும்போது நாங்கள் அப்படி செய்கிறோம்.
அரசியல் விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முடிவு எடுக்கிற உரிமை இருக்கிறது என்பதை நாங்கள் மனதில் வைத்திருக்கிறோம். அதனால் தேர்தல் நடக்கும்போது அமைதியை கெடுக்கிற மாதிரி நாங்கள் எதையும் செய்வதில்லை. ஓட்டு போட நினைப்பவர்களையும் நாங்கள் தடுப்பதில்லை.
கிறிஸ்தவ நடுநிலை புதிதாக முளைத்த ஒன்றா? இல்லை! அப்போஸ்தலர்களும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் அரசியல் விஷயங்களில் இதே மாதிரிதான் இருந்தார்கள். பியாண்ட் குட் இன்டென்ஷன்ஸ் என்ற புத்தகம் இப்படி சொல்கிறது: “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் அரசியல் விவகாரங்களில் அவர்கள் தலையிடவில்லை.” அதேபோல், ஆன் தி ரோட் டு சிவிலைசேஷன் என்ற புத்தகம், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் “எந்த அரசியல் பதவிகளையும் வகிக்கவில்லை” என்று சொல்கிறது.
எங்களுடைய அரசியல் நடுநிலை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா? இல்லை! நாங்கள் சமாதானத்தை விரும்புகிற குடிமக்கள். அதனால், அரசாங்க அதிகாரிகள் எங்களை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நேஷ்னல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ் ஆஃப் உக்ரைன் 2001-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலையை பற்றி இப்படி சொல்லியிருந்தது: “யெகோவாவின் சாட்சிகள் இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதால், இன்று நிறைய பேர் அவர்களை வெறுக்கலாம். அன்றைக்கு இருந்த நாசி மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த சாட்சிகளும் இதே காரணத்துக்காகத்தான் குற்றம்சாட்டப்பட்டார்கள்.” இருந்தாலும், சோவியத் அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்த சாட்சிகள் “சட்டத்தை மதித்து நடக்கிற குடிமக்களாக இருந்தார்கள். அவர்கள் கூட்டுப் பண்ணைகளிலும் தொழிற்சாலைகளையும் நேர்மையாகவும் கடினமாகவும் உழைத்தார்கள். அவர்களால் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரவில்லை.” அதேமாதிரி இன்றைக்கும், சாட்சிகளுடைய நம்பிக்கைகள் “தேசிய பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக இல்லை” என்று சொல்லி அந்த அறிக்கை முடிந்தது.