Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

நீதிமொழிகள் 16:3—“உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி”

நீதிமொழிகள் 16:3—“உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி”

 “நீ எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடு. அப்போது, உன் திட்டங்கள் வெற்றி பெறும்.”—நீதிமொழிகள் 16:3, புதிய உலக மொழிபெயர்ப்பு.

 “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.”—நீதிமொழிகள் 16:3, தமிழ் O.V.Bible.

நீதிமொழிகள் 16:3-ன் அர்த்தம்

 உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் அவர்மேல் நம்பிக்கை வைத்து அவர் சொல்வதைக் கேட்டு நடந்தால், அவர்களுடைய திட்டங்கள் வெற்றி பெறும் என்று இந்த நீதிமொழி சொல்கிறது.

 “நீ எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடு.” யெகோவாவை a வணங்குகிறவர்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, அதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று மனத்தாழ்மையோடு யோசிக்கிறார்கள். (யாக்கோபு 1:5) ஏனென்றால், நம்முடைய வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. (பிரசங்கி 9:11; யாக்கோபு 4:13-15) அதுமட்டுமல்ல, நாம் போடுகிற திட்டங்களை அப்படியே செய்யும் அளவுக்கு நமக்கு ஞானமும் இல்லை. அதனால்தான், நிறைய பேர் ஞானமாக தங்களுடைய திட்டங்களை கடவுளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். எப்படியென்றால், ‘எனக்கு வழிகாட்டுங்கள்’ என்று கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்கிறார்கள், பைபிளில் சொல்லியிருக்கிற அவருடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி நடக்கிறார்கள்.—நீதிமொழிகள் 3:5, 6; 2 தீமோத்தேயு 3:16, 17.

 “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி” என்பதன் நேரடி அர்த்தம், “உன் செயல்களை கர்த்தர்மேல் போட்டுவிடு” என்பதாகும். இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, “ஒருவர் தன்னுடைய முதுகின்மேல் இருக்கும் பாரத்தை தன்னைவிட பலசாலியாகவும் அதைத் தாங்குகிற அளவுக்கு சக்தி உள்ளவரிடம் முழுமையாக கொடுத்துவிடுகிற” ஒரு படம் நம் மனதில் தோன்றுகிறது என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு சொல்கிறது. மனத்தாழ்மையாக கடவுளை சார்ந்திருக்கிறவர்கள், அவர் தங்களுக்கு உதவுவார், தங்களை ஆதரிப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்.—சங்கீதம் 37:5; 55:22.

 “எதைச் செய்தாலும்” என்ற வார்த்தைகள் மனிதர்கள் எதைச் செய்தாலும் கடவுள் அதை ஏற்றுக்கொள்வார் அல்லது ஆசீர்வதிப்பார் என்று அர்த்தப்படுத்துவதில்லை. யெகோவாவுடைய சட்டங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற மாதிரி திட்டங்கள் போட்டால் மட்டும்தான் அவர் அதை ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 127:1; 1 யோவான் 5:14) “பொல்லாதவர்களின் திட்டங்களை முறியடிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 146:9) அதனால், அவர் பேச்சை கேட்டு நடக்காதவர்களை அவர் ஆசீர்வதிக்க மாட்டார். அதே சமயத்தில், பைபிளில் சொல்லியிருக்கிற அவருடைய சட்டங்களை மதித்து அதன்படி நடக்கிறவர்களுக்கு அவர் உதவி செய்வார்.—சங்கீதம் 37:23.

 “அப்போது, உன் திட்டங்கள் வெற்றி பெறும்.” இந்த வார்த்தைகள் சில மொழிபெயர்ப்புகளில், “உன் யோசனைகள் உறுதிப்படும்” என்று சொல்லப்பட்டிருக்கின்றன. பழைய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படுகிற எபிரெய வேதாகமத்தில், “உறுதிப்படும்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தைக்கு அஸ்திவாரம் போடுதல் என்ற அர்த்தம் இருக்கிறது. கடவுள் தன்னுடைய படைப்புகளை ‘உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்’ என்பதைக் காட்டுவதற்காக இது அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 3:19; எரேமியா 10:12) அது போலவே, கடவுள் எதை சரி என்று சொல்கிறாரோ அதன்படி செய்கிறவர்களின் திட்டங்களையும் அவர் உறுதிப்படுத்துவார். சந்தோஷமான... நிலையான... ரொம்ப பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்களுக்கு உதவி செய்வார்.—சங்கீதம் 20:4; நீதிமொழிகள் 12:3.

நீதிமொழிகள் 16:3-ன் பின்னணி

 இந்த நீதிமொழியை சாலொமோன் ராஜா எழுதினார். நீதிமொழிகள் புத்தகத்தின் முக்கால்வாசி பாகத்தை அவர்தான் எழுதினார். கடவுள் தந்த ஞானத்தால்தான் இந்த மாதிரி ஆயிரக்கணக்கான நீதிமொழிகளை அவரால் சொல்ல முடிந்தது.—1 ராஜாக்கள் 4:29, 32; 10:23, 24.

 16-ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில், சாலொமோன் கடவுளுடைய ஞானத்தைப் புகழ்கிறார், பெருமையாக இருக்கிறவர்களை கடவுள் அருவருக்கிறார் என்று சொல்கிறார். (நீதிமொழிகள் 16:1-5) மனத்தாழ்மையாக, கடவுள் சொல்கிறபடி கேட்டு நடக்கிற மக்கள்தான் உண்மையிலேயே ஞானமாக இருப்பார்கள், வெற்றியும் பெறுவார்கள். (நீதிமொழிகள் 16:3, 6-8, 18-23) இந்த அதிகாரம் முழுக்க இந்த முக்கியமான விஷயத்தைத்தான் சாலொமோன் சொல்கிறார். நீதிமொழிகள் புத்தகத்தில் அடிக்கடி வருகிற முக்கிய பொருளும் இதுதான். நீதிமொழிகள் புத்தகத்தில் மட்டுமல்ல, முழு பைபிளிலும் இந்த முக்கியமான உண்மை அடிக்கடி வருகிறது.—சங்கீதம் 1:1-3; ஏசாயா 26:3; எரேமியா 17:7, 8; 1 யோவான் 3:22.

 நீதிமொழிகள் புத்தகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர். (சங்கீதம் 83:18) “யெகோவா யார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.