Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

கெட்ட ஆசைகளை அடக்குவது எப்படி?

கெட்ட ஆசைகளை அடக்குவது எப்படி?

 “நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோமர் 7:21) நீங்களும் எப்போதாவது அப்படி யோசித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், கெட்ட ஆசைகளை அடக்குவதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும்.

 நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

 அழுத்தம் வந்தால் ஆசையும் வந்துவிடும். “கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கநெறிகளை கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33, அடிக்குறிப்பு) மற்றவர்களாலோ மீடியாவினாலோ அழுத்தம் வரும்போது கெட்டது செய்ய வேண்டுமென்ற ஆசை உங்கள் மனதில் வந்துவிடலாம். அதோடு, “ஊர் உலகத்தோடு ஒத்துப்போவதற்காக” நீங்களும் தப்பு செய்ய ஆரம்பித்துவிடலாம்.—யாத்திராகமம் 23:2.

 “மற்றவர்களுக்கு நம்மை பிடிக்க வேண்டும், அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுவோம். அந்த ஆசை அதிகமாகும்போது, அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்கிற விஷயங்களையெல்லாம் நாமும் செய்ய ஆரம்பித்துவிடுவோம்.”—ஜெரமி.

 யோசித்துப் பார்க்க: மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அளவுக்கு அதிகமாக கவலைப்பட்டோம் என்றால் கெட்ட ஆசைகளை அடக்குவது கஷ்டமாகிவிடலாம். ஏன்?—நீதிமொழிகள் 29:25.

 மனதில் வைக்க: உங்கள் நண்பர்களிடமிருந்து அழுத்தம் வருகிறது என்பதற்காக உங்களுடைய ஒழுக்க நெறிகளை விட்டுக்கொடுத்துவிடாதீர்கள்.

 நீங்கள் செய்ய வேண்டியவை

 உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விஷயத்தை ஏன் நீங்கள் நம்புகிறீர்கள் என்று உங்களுக்கே சரியாக தெரியவில்லை என்றால், மற்றவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மை மாதிரிதான் இருப்பீர்கள். அதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எது என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்” என பைபிள் சொல்கிற மாதிரி செய்வது எவ்வளவோ நல்லது! (1 தெசலோனிக்கேயர் 5:21) உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்தளவுக்கு அதன்படி செய்வது உங்களுக்கு ஈஸியாக இருக்கும்; அதற்கு எதிரான விஷயங்களைச் செய்ய வேண்டுமென்ற ஆசையை உங்களால் அடக்கவும் முடியும்.

 யோசித்துப் பார்க்க: ஒழுக்க விஷயத்தில் கடவுள் சொல்கிற மாதிரி செய்வது உங்கள் நல்லதுக்குத்தான் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

 “எப்போதெல்லாம் நான் என்னுடைய ஆசைகளை அடக்கிக்கொண்டு என்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் மற்றவர்கள் என்னை இன்னும் அதிகமாக மதிப்பதை நான் கவனித்திருக்கிறேன்.”—கிம்பர்லி.

பைபிள் உதாரணம்: தானியேல். அநேகமாக அவர் டீனேஜ் வயதில் இருக்கும்போதே, கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று “தன் இதயத்தில் தீர்மானமாக இருந்தார்.”—தானியேல் 1:8.

ஒரு விஷயத்தை ஏன் நீங்கள் நம்புகிறீர்கள் என்று உங்களுக்கே சரியாக தெரியவில்லை என்றால், மற்றவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மை மாதிரிதான் இருப்பீர்கள்

 உங்கள் பலவீனங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருங்கள். “இளமைப் பருவத்தில் வருகிற ஆசைகளை” பற்றி பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 2:22) அந்த ஆசைகள் குறிப்பாக இளம் வயதில் ரொம்ப தீவிரமாக இருக்கும். அவை வெறுமனே பாலியல் ஆசைகள் மட்டுமல்ல. மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும்... சொந்தக் காலில் நிற்க வேண்டும்... போதுமான வயது வருவதற்கு முன்பே சொந்தமாக தீர்மானங்கள் எடுக்க வேண்டும்... என்ற ஆசைகளும்தான்.

 யோசித்துப் பார்க்க: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:14) எந்த ஆசையை அடக்குவது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது?

 “எந்த ஆசைகளை அடக்குவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று நீங்களே நேர்மையாக யோசித்துப் பாருங்கள். அந்த ஆசைகளை எப்படி அடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீங்கள் என்னென்ன செய்யலாம் என்று எழுதி வையுங்கள். அப்போதுதான், அடுத்த தடவை அந்த மாதிரி ஆசை வரும்போது அதை எப்படி அடக்கலாம் என்று நீங்கள் ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பீர்கள்.”​—சில்வியா.

 பைபிள் உதாரணம்: தாவீது. சில சமயங்களில் தாவீது மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு தப்பு செய்துவிட்டார். தன்னுடைய சொந்த ஆசைக்கும் அடிபணிந்துவிட்டார். ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்ள முயற்சி செய்தார். “சுத்தமான இதயத்தை எனக்குள் உருவாக்குங்கள். அலைபாயாத புதிய மனதை எனக்குள் வையுங்கள்” என்று அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.—சங்கீதம் 51:10.

 உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். ‘தீமை உங்களை வெல்ல விடாதீர்கள் ’என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:21) அப்படியென்றால், கெட்ட ஆசை உங்களை வெல்ல விடாமல் பார்த்துக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. சரியானதை செய்ய வேண்டுமென்ற முடிவு எடுப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

 யோசித்துப் பார்க்க: கெட்ட ஆசைகளைத் தூண்டும் ஒரு சூழ்நிலையில் நீங்கள் எப்படி உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரியானதைச் செய்யலாம்?

 “கெட்ட ஆசைக்கு அடிபணிந்துவிட்டால் எனக்கு எப்படி இருக்கும் என்று நான் யோசித்துப் பார்ப்பேன். நான் சந்தோஷமாக இருப்பேனே? ஒருவேளை கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் நான் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்குமா? இல்லை, சொல்லப்போனால் நான் நிம்மதி இல்லாமல்தான் தவிப்பேன். இது எனக்கு தேவையா? கண்டிப்பாக இல்லை!”​—சோஃபியா.

 பைபிள் உதாரணம்: பவுல். கெட்டது செய்ய வேண்டுமென்ற ஆசை தனக்கு இருந்ததை பவுல் ஒத்துக்கொண்டார். ஆனால் தன்னுடைய உணர்ச்சிகளை அவர் கட்டுப்படுத்தினார். “என்னுடைய உடலை அடக்கியொடுக்கி அடிமைபோல் நடத்தி வருகிறேன்” என்று அவர் எழுதினார்.—1 கொரிந்தியர் 9:27.

 மனதில் வைக்க: கெட்ட ஆசை வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

 ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: இப்போது நமக்கு வரும் ஆசை எப்போதுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. “நான் ஸ்கூல் படிக்கும்போது தப்பு செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. ஆனால், இப்போது எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே இல்லை” என்று 20 வயது மெலிசா சொல்கிறாள். “இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது இன்று இருக்கிற ஆசைகளும் என்றைக்குமே இருக்காது என்பதை என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருநாள் என்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது கெட்ட ஆசைகளை நான் அடக்கியதால்தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதைக் கண்டிப்பாக புரிந்துகொள்வேன் என்று தெரிகிறது” என்றும் அவள் சொல்கிறாள்.