இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
எனக்கு மட்டும் ஏன் ஃப்ரெண்ட்ஸே இல்லை?
நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள், சில போட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அதெல்லாம் உங்கள் ஃப்ரெண்ட்ஸ் ஒரு பார்ட்டியில் எடுத்தது, அவர்கள் எல்லாரும் ஜாலியாக என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த போட்டோக்களில் யாரோ ஒருவர் மட்டும் இல்லை. அந்த யாரோ ஒருவர் நீங்கள்தான்!
‘என்னை மட்டும் அவர்கள் கூப்பிடவில்லையே?’ என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்.
இப்படி யோசிக்க யோசிக்க உங்களுக்கு ரொம்ப கோபம் வருகிறது. உங்கள் முதுகில் அவர்கள் குத்திவிட்டது போல் தோன்றுகிறது. அழகாக கட்டப்பட்ட சீட்டுக்கட்டு கோபுரம் ஒரே நிமிடத்தில் கலைந்து விழுந்த மாதிரி, நீங்கள் கட்டிய நட்பு என்ற கோட்டையும் இடிந்துவிட்டதாக நீங்கள் உணருகிறீர்கள். தனிமை என்ற சிறையில் மாட்டிக்கொண்டது போல உங்களுக்கு இருக்கிறது. ‘எனக்கு மட்டும் ஏன் ஃப்ரெண்ட்ஸே இல்லை?’ என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் எட்டிப் பார்க்கிறது.
என்ன சொல்வீர்கள்?
சரியா தவறா?
உங்களுக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருந்தால், தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது.
நீங்கள் சோஷியல் நெட்வொர்க்கில் இருந்தால், தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது.
நீங்கள் நிறைய மெசேஜ் பண்ணிக்கொண்டே இருந்தால், தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது.
நீங்கள் மற்றவர்களுக்காக ஏதாவது செய்தால் தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது.
இந்த நான்கு விஷயங்களுக்குமே பதில் தவறு.
ஏன் அப்படிச் சொல்கிறோம்?
நட்பு மற்றும் தனிமையைப் பற்றிய உண்மைகள்
உங்களுக்கு எக்கச்சக்கமான நண்பர்கள் இருந்தால் தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது என்று சொல்ல முடியாது.
“என்னுடைய நண்பர்கள் மேல் எனக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறது. ஆனால், அதே அக்கறை அவர்களுக்கு என்மேல் இல்லை என்று சிலசமயம் எனக்குத் தோன்றும். உங்களைச் சுற்றி நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உங்கள்மேல் அன்பு இல்லை... அவர்களுக்கு நீங்கள் தேவையே இல்லை... என்று நீங்கள் உணர்ந்தால் அதுதான் இருப்பதிலேயே கொடுமையான தனிமை.”—ஆன்.
நீங்கள் சோஷியல் நெட்வொர்க்கில் சேர்ந்தால் தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது என்று சொல்ல முடியாது.
“சிலருக்கு பொம்மைகளை சேர்த்து வைக்க பிடிக்கும். அதே மாதிரி, ஒரு சிலருக்கு நிறைய பேரை நண்பர்களாக சேர்த்துக்கொள்ள ஆசை. உங்களுடைய ரூம் முழுக்க பொம்மைகள் நிறைந்திருந்தாலும் அந்த பொம்மைகளால், உங்கள்மேல் அன்பு காட்டவே முடியாது. அதே மாதிரி நேரில் பார்த்துப் பழகுவதற்கு உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லையென்றால், ஆன்லைன் நண்பர்களால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது, அவர்கள் உங்களுக்கு இந்த உயிரில்லாத பொம்மைகள் மாதிரிதான் இருப்பார்கள்.”—எலைன்.
நீங்கள் நிறைய மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தால் தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது என்று சொல்ல முடியாது.
“சில சமயத்தில் தனிமை உணர்வு உங்களை வாட்டும்போது, உங்களுடைய ஃப்ரெண்ட்ஸ் யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்களா என்று பார்ப்பதற்காக உங்கள் ஃபோனை நோண்டிக்கொண்டே இருப்பீர்கள். ஆனால், உங்களுடைய நண்பர்கள் யாருமே உங்களுக்கு மெசேஜ் பண்ணவில்லை. நீங்கள் ஏற்கெனவே தனிமை உணர்வில் இருப்பதால் நீங்கள் இன்னமும் நொந்து நூலாகிவிடுவீர்கள்.”—செரீனா.
நீங்கள் மற்றவர்களுக்காக ஏதாவது செய்தால் தனிமை உணர்வு உங்களுக்கு வரவே வராது என்று சொல்ல முடியாது.
“நான் என்னுடைய நண்பர்களுக்காக எப்போதுமே தாராளமாக செலவழிப்பேன். ஆனால் அதே மாதிரி அவர்கள் என்னிடம் எப்போதுமே நடந்துகொள்வதில்லை. அவர்களுக்காக செய்வதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. ஆனால் அவர்கள் எனக்கு எதுவுமே செய்தது இல்லை என்று நினைக்கும்போதுதான் மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.”—ரிச்சர்ட்.
சுருக்கமாக சொன்னால்: தனிமை உணர்வு என்பது உங்கள் மனதோடு சம்பந்தப்பட்டது. “அது நீங்களே உருவாக்கிக்கொள்கிற ஒரு பிரச்சினை. மற்றவர்களிடமிருந்து வருவது கிடையாது” என்று ஜெனட் என்ற ஒரு இளம் பெண் சொல்கிறாள்.
உங்களுக்கு நண்பர்களே இல்லை என்றும் நீங்கள் தனிமையில் வாடுகிறீர்கள் என்றும் உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் என்ன செய்யலாம்?
இந்தப் போராட்டத்தில் நீங்கள் எப்படி வெற்றி பெறலாம்?
வளர்ப்போம் தன்னம்பிக்கை.
“பாதுகாப்பு இல்லாத ஒரு உணர்வால்தான் தனிமை உணர்வு வருகிறது. ஒருவருடைய அன்பைப் பெறுவதற்கு நமக்கு தகுதியே இல்லை என்று நாம் உணர்ந்தால், புது நண்பர்களைக் கண்டுபிடிப்பதும், அவர்களோடு நட்பைத் தொடர்வதும் நமக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.”—ஜெனட்.
பைபிள் சொல்வது: “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்.” (கலாத்தியர் 5:14) நல்ல நண்பர்கள் வேண்டுமென்றால் முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். ஆனால், அது ‘நான் என்னும் அகங்காரத்தில்’ போய் முடிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.—கலாத்தியர் 6:3, 4.
பரிதாபம் வேண்டாம்.
“தனிமை உணர்வு என்பது ஒரு புதைகுழி மாதிரி. எந்தளவுக்கு நீங்கள் அதற்குள்ளே போகிறீர்களோ அந்தளவுக்கு அதை விட்டு வெளியே வருவது ரொம்ப கஷ்டமாகிவிடும். உங்களையே நினைத்து நீங்கள் ரொம்ப பரிதாபப்பட்டுக் கொண்டு இருந்தால் யாரும் உங்களிடம் பழக வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். அப்போது தனிமை உணர்வு என்ற ஒரு குழியில் போய் விழுந்துவிடுவீர்கள்.”—ஏரின்.
பைபிள் சொல்வது: “அன்பு . . . சுயநலமாக நடந்துகொள்ளாது.” (1 கொரிந்தியர் 13:4, 5) நம்மைப் பற்றியே நாம் ரொம்ப யோசித்துக்கொண்டே இருந்தால் மற்றவர்கள்மேல் கரிசனையே காட்ட மாட்டோம். அதனால், அவர்கள் நம்மிடம் நண்பர்கள் ஆக வேண்டுமென விரும்ப மாட்டார்கள். (2 கொரிந்தியர் 12:15) இப்படி யோசித்துப் பாருங்கள்: மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்து உங்களுடைய வெற்றியை நீங்கள் மதிப்பிட்டால், கண்டிப்பாக தோற்றுத்தான் போவீர்கள்! “யாருமே எனக்கு ஃபோன் பண்ணுவது கிடையாது,” “என்னை யாரும் எதற்குமே கூப்பிடுவது கிடையாது” என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுடைய சந்தோஷத்தை எடுத்து மற்றவர்கள் கையில் கொடுத்ததைப் போல் ஆகிவிடும். அது மற்றவர்கள் உங்களை ஆட்டிப்படைப்பது போல் இருக்காதா?
நண்பர்கள்—மிக கவனம்!
“தனிமை உணர்வில் வாடுகிறவர்கள், மற்றவர்கள் தங்களை விசேஷமாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அப்படி யாராவது அவர்களை நடத்தினால் அதை உடனே ஏற்றுக்கொள்வார்கள், அவர் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும்சரி. ‘நான் மற்றவர்களுக்கு ரொம்ப முக்கியம்’ என்ற உணர்வு அவருக்குக் கிடைத்தால் போதும். ஒரு சிலர், அப்படிப்பட்ட உணர்வை நமக்கு கொடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு நம்மை தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதற்குப் பிறகு வருகிற ஒரு தனிமை உணர்வு இருக்கிறதே, அதுதான் ரொம்ப கொடுமை.”—ப்ரையன்.
பைபிள் சொல்வது: “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான். ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) பசியில் வாடுகிற ஒருவர் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவார். அதேபோல் நண்பர்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறவரும் தவறான நபர்களை நண்பராக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ‘இவர்கள் தப்பான நண்பர்கள் கிடையாது, இதைவிட நல்ல நண்பர்களை எதிர்பார்க்கக் கூடாது’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டு ஏமாற்றுப்பேர்வழிகள் கையில் போய் வசமாக மாட்டிக்கொள்வார்கள்.
என்ன முடிவுக்கு வரலாம்: எல்லாருக்குமே அவ்வப்போது தனிமை உணர்வு வருகிறதுதான். ஆனால் ஒரு சிலரை அது அதிகமாகவே பாதிக்கிறது. தனிமை உணர்வு என்பது நம்மை அப்படியே இடிந்துபோக வைக்கிற ஒரு உணர்வுதான் என்றாலும், அது ஒரு உணர்வு மட்டும்தான். நம்முடைய யோசனைகள்தான் உணர்ச்சிகளாக வெளிப்படுகிறது. அதனால் நாம் யோசிக்கிற விதத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதில் எதார்த்தமாக இருங்கள். “எல்லாருமே உங்களுக்கு எப்போதும் பெஸ்ட் ஃபிரெண்டாக இருக்க முடியாது. ஆனால் உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிற நபர்களை உங்களால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும். அந்த அக்கறையே போதும் உங்களுடைய தனிமை உணர்வு போயே போய்விடும்” என்று நாம் முன்பு பார்த்த ஜெனட் சொல்கிறாள்.
உங்களுக்கு மேலும் உதவி தேவையா? “ நட்பைப் பற்றிய பயங்களை எப்படிச் சமாளிப்பது” என்ற பகுதியை வாசித்துப் பாருங்கள். அதோடு “தனிமையை விரட்ட. . .” என்ற ஒர்க் ஷீட்டையும் டவுன்லோட் செய்யுங்கள்.