வெளிப்படுத்துதல் புத்தகம்—அதை எப்படிப் புரிந்துகொள்வது?
பைபிள் தரும் பதில்
வெளிப்படுத்துதல் என்ற பைபிள் புத்தகத்தின் கிரேக்கப் பெயர் அப்போகலிப்ஸிஸ்; இதன் அர்த்தம் “வெளியரங்கமாக்குவது” அல்லது “திரையை விலக்குவது” என்பதாகும். இந்தப் பெயர் வெளிப்படுத்துதல் என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் குறிக்கிறது, அதாவது மறைத்து வைக்கப்பட்ட விஷயங்களை வெளியரங்கமாக்குவதையும், பல காலத்திற்குப் பிறகு நடக்கப்போகிற சம்பவங்களை முன்கூட்டியே திரை விலக்கிக் காட்டுவதையும் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற பல தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நிறைவேறப்போகின்றன.
வெளிப்படுத்துதல் புத்தகம்—ஒரு கண்ணோட்டம்
அறிமுக வார்த்தைகள்.—வெளிப்படுத்துதல் 1:1-9.
ஏழு சபைகளுக்கு இயேசு சொன்ன செய்திகள்.—வெளிப்படுத்துதல் 1:10–3:22.
பரலோகத்திலுள்ள சிம்மாசனத்தில் கடவுள் உட்கார்ந்திருக்கிற தரிசனக் காட்சி.—வெளிப்படுத்துதல் 4:1-11.
அடுத்தடுத்து வரும் தரிசனங்கள்; ஒரு தரிசனம் மற்றொரு தரிசனத்துக்கு வழிநடத்துகிறது:
ஏழு முத்திரைகள்.—வெளிப்படுத்துதல் 5:1–8:6.
ஏழு எக்காளங்கள்; இவற்றில் கடைசி மூன்று எக்காளங்கள் மூன்று கேடுகளை முன்னறிவிக்கின்றன.—வெளிப்படுத்துதல் 8:7–14:20.
ஏழு கிண்ணங்கள்; அவை ஒவ்வொன்றிலும் ஒரு தண்டனை இருந்தது; பூமியின்மேல் கொட்டப்படவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பை அது குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 15:1–16:21.
கடவுளுடைய எதிரிகள் அழிக்கப்படுவதைப் பற்றிய தரிசனங்கள்.—வெளிப்படுத்துதல் 17:1–20:10.
பரலோகத்துக்கும் பூமிக்குமான கடவுளுடைய ஆசீர்வாதங்களைப் பற்றிய தரிசனங்கள்.—வெளிப்படுத்துதல் 20:11–22:5.
முடிவான வார்த்தைகள்.—வெளிப்படுத்துதல் 22:6-21.
வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிற குறிப்புகள்
கடவுளை வணங்குகிற ஆட்களுக்கு அதிலுள்ள செய்தி நம்பிக்கை அளிக்கிறது, அவர்களைப் பயப்படுத்துவதோ நடுங்க வைப்பதோ கிடையாது. “அப்போகலிப்ஸ்” என்ற வார்த்தை மாபெரும் அழிவைக் குறிக்கிறதென பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த வெளிப்படுத்துதல் புத்தகத்தை வாசிப்பவர்களும், புரிந்துகொள்பவர்களும், அதிலுள்ள விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களும் சந்தோஷமானவர்கள் என்றே அதன் ஆரம்ப வார்த்தைகளும் முடிவான வார்த்தைகளும் சொல்கின்றன.—வெளிப்படுத்துதல் 1:3; 22:7.
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நிறைய ‘அடையாளங்களை’ சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.—வெளிப்படுத்துதல் 1:1.
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள முக்கியமான பல விஷயங்களும் அடையாளங்களும் பைபிளின் முந்தைய புத்தகங்களில் ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளன:
யெகோவா—பரலோகத்தில் இருக்கிற “உண்மைக் கடவுள்,” எல்லாவற்றையும் படைத்தவர்.—உபாகமம் 4:39; சங்கீதம் 103:19; வெளிப்படுத்துதல் 4:11; 15:3.
இயேசு கிறிஸ்து—“கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி.”—யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 5:6; 14:1.
பிசாசாகிய சாத்தான்—கடவுளுடைய எதிரி.—ஆதியாகமம் 3:14, 15; யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9.
மகா பாபிலோன்—பண்டைய பாபிலோன் (பாபேல்) போலவே யெகோவா தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிரி; மத சம்பந்தப்பட்ட பொய்களின் ஊற்றுமூலம்.—ஆதியாகமம் 11:2-9; ஏசாயா 13:1, 11; வெளிப்படுத்துதல் 17:4-6; 18:4, 20.
கடல்—கடவுளுக்கு எதிராகச் செயல்படுகிற கெட்டவர்கள்.—ஏசாயா 57:20; வெளிப்படுத்துதல் 13:1; 21:1.
கடவுளுடைய வணக்கத்துக்காக அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்தின் முக்கிய அம்சங்கள்—ஒப்பந்தப் பெட்டி, கண்ணாடிக் கடல் (கைகால் கழுவ பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த் தொட்டி), விளக்குகள், தூபப் பொருள்கள், பலிபீடம் போன்றவை.—யாத்திராகமம் 25:10, 17, 18; 40:24-32; வெளிப்படுத்துதல் 4:5, 6; 5:8; 8:3; 11:19.
மூர்க்க மிருகங்கள்—மனித அரசாங்கங்களை அடையாளப்படுத்துகின்றன.—தானியேல் 7:1-8, 17-26; வெளிப்படுத்துதல் 13:2, 11; 17:3.
அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எண்கள்.—வெளிப்படுத்துதல் 1:20; 8:13; 13:18; 21:16.
வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தரிசனங்கள் “எஜமானுடைய நாளுக்கு” பொருந்துகின்றன. அந்த நாள், கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டு, இயேசு அதன் ராஜாவாக ஆட்சியைத் தொடங்கியபோது ஆரம்பமானது. (வெளிப்படுத்துதல் 1:10) அதனால், வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முக்கிய நிறைவேற்றம் நம்முடைய நாளில் நடக்குமென நாம் எதிர்பார்க்கலாம்.
மற்ற பைபிள் புத்தகங்களைப் புரிந்துகொள்வதற்கு தேவைப்படுகிற விஷயங்கள், வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்துகொள்வதற்கும் தேவைப்படுகின்றன; அதாவது, கடவுள் தருகிற ஞானம், பைபிள் விஷயங்களைத் புரிந்து வைத்திருப்பவர்களின் உதவி போன்றவை தேவைப்படுகின்றன.—அப்போஸ்தலர் 8:26-39; யாக்கோபு 1:5.