வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் முக்கியமான பொறுப்பு பிள்ளைகளுக்கு இருக்கிறது. அவர்கள் “தங்கள் சொந்தக் குடும்பத்தாரைக் கவனித்துக்கொள்ளவும், தங்கள் பெற்றோருக்கு நன்றிக்கடன் செலுத்தவும் [வேண்டும்]. இப்படி, தங்கள் மத நம்பிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். . . . இதுவே கடவுளுக்குப் பிரியமானது” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:4, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன் ) வயதான பெற்றோரை நாம் கவனித்துக்கொள்ளும்போது, “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்று பைபிள் சொல்லும் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம்.—எபேசியர் 6:2, 3.
வயதான பெற்றோரை என்ன விதங்களில் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று பைபிள் விலாவாரியாகச் சொல்வதில்லை. ஆனால், வயதான பெற்றோரைக் கவனித்துக்கொண்ட கடவுள்பக்தியுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி அது சொல்கிறது. அதோடு, அப்படிக் கவனித்துக்கொள்கிறவர்களுக்குத் தேவையான நல்லநல்ல ஆலோசனைகளையும் அது தருகிறது.
பைபிள் காலங்களில், வயதான பெற்றோரைச் சிலர் எப்படிக் கவனித்துக்கொண்டார்கள்?
சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் வெவ்வேறு விதங்களில் கவனித்துக்கொண்டார்கள்.
யோசேப்பு, தன்னுடைய வயதான அப்பா யாக்கோபு வாழ்ந்த இடத்திலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தார். சூழ்நிலை சரியாக அமைந்தபோது, தன் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து தனக்குப் பக்கத்திலேயே குடிவைக்க ஏற்பாடு செய்தார். தன் அப்பாவுக்கு உணவும் கொடுத்து அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.—ஆதியாகமம் 45:9-11; 47:11, 12.
ரூத், தன்னுடைய மாமியாரின் தேசத்துக்கே குடிமாறிப்போனாள். அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்து தன்னுடைய மாமியாரைக் கவனித்துக்கொண்டாள்.—ரூத் 1:16; 2:2, 17, 18, 23.
இயேசு, தான் இறப்பதற்குக் கொஞ்சம் முன்னால், தன் அம்மா மரியாளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஒருவருக்குக் கொடுத்தார். அந்தச் சமயத்தில், மரியாள் அநேகமாக ஒரு விதவையாக இருந்தார்.—யோவான் 19:26, 27. a
வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு பைபிள் என்ன ஆலோசனைகளைத் தருகிறது?
வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறவர்களின் உடலும் மனதும் சிலசமயம் சோர்ந்துவிடலாம். இந்தச் சவாலைச் சமாளிக்க பைபிளின் ஆலோசனைகள் ரொம்ப உதவியாக இருக்கும்.
பெற்றோருக்கு மதிப்புக் கொடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.”—யாத்திராகமம் 20:12.
இதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்? முடிந்தளவு சுதந்திரம் கொடுப்பதன் மூலம் உங்கள் பெற்றோருக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் முடிந்தவரை அவர்களே முடிவுகளை எடுக்க விட்டுவிடுங்கள். அதேசமயத்தில், உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலம் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்.
புரிந்து நடந்துகொள்ளுங்கள், மன்னியுங்கள்.
பைபிள் ஆலோசனை: “விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும். தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பது அவனுக்கு அழகு.”—நீதிமொழிகள் 19:11.
இதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்? வயதான அம்மாவோ அப்பாவோ உங்களிடம் கடுகடுப்பாகப் பேசினால் அல்லது நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி இல்லாமல் நடந்துகொண்டால் என்ன செய்வது? ‘இவங்களோட நிலைமையில நான் இருந்தா எனக்கு எப்படி இருக்கும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரை நீங்கள் புரிந்து நடந்துகொள்ளும்போதும் அவர்களை மன்னிக்கும்போதும் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
பைபிள் ஆலோசனை: “கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும். ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.”—நீதிமொழிகள் 15:22.
இதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்? உங்கள் பெற்றோருக்கு இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். அவர்களைக் கவனித்துக்கொள்ள என்ன அரசாங்க உதவிகள் கிடைக்கும் என்று கண்டுபிடியுங்கள். வயதான பெற்றோரைக் கவனித்துக்கொண்ட மற்றவர்களிடம் பேசிப் பாருங்கள். கூடப் பிறந்தவர்கள் யாராவது இருந்தால், உங்கள் பெற்றோரை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்ளலாம் என்று கலந்துபேசி முடிவெடுங்கள்.
உங்கள் வரம்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
பைபிள் ஆலோசனை: “அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.”—நீதிமொழிகள் 11:2.
இதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்? உங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்றெல்லாம் புரிந்துகொள்ளுங்கள். உதாரணத்துக்கு, எல்லாருக்குமே ஓரளவுக்குத்தான் நேரமும் சக்தியும் இருக்கிறது. அதனால், பெற்றோருக்கு நாம் செய்ய நினைக்கிற எல்லாவற்றையுமே நம்மால் செய்ய முடியாது. வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ள நீங்கள் திணறுகிறீர்கள் என்றால், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். அல்லது, நர்சையோ வேறு ஒருவரையோ வைத்துக் கவனித்துக்கொள்ளுங்கள்.
உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
பைபிள் ஆலோசனை: “ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான்.”—எபேசியர் 5:29.
இதை எப்படிக் கடைப்பிடிக்கலாம்? பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு இருந்தாலும், உங்களுடைய தேவைகளைக்கூட நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் திருமணம் ஆகியிருந்தால், மனைவி பிள்ளைகளின் தேவைகளையும் நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால், நன்றாகச் சாப்பிடுங்கள், நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள். (பிரசங்கி 4:6) முடியும்போதெல்லாம் உங்களுக்கென்று நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். இதையெல்லாம் செய்யும்போது, உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதற்கு உங்கள் உடலிலும் சக்தி இருக்கும், மனதிலும் தெம்பு இருக்கும்.
வயதான பெற்றோரை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று பைபிள் குறிப்பாகச் சொல்கிறதா?
இல்லை, இதைப் பற்றி பைபிள் குறிப்பாகச் சொல்வதில்லை. சில குடும்பங்களில், எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பிள்ளைகளே தங்கள் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறார்கள். சிலசமயம், சூழ்நிலையைப் பொறுத்து நர்சையோ வேறு ஒருவரையோ வைத்துப் பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறார்கள். பொதுவாக, குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் கலந்துபேசி, எல்லாருக்குமே ஒத்துவரும் ஒரு முடிவை எடுக்கிறார்கள்.—கலாத்தியர் 6:4, 5.
a இந்தப் பதிவைப் பற்றி ஒரு பைபிள் உரை இப்படிச் சொல்கிறது: “[மரியாளின் கணவர்] யோசேப்பு ரொம்ப நாளுக்குமுன் இறந்திருக்கலாம். அதனால், இயேசு தன் தாய் மரியாளைக் கவனித்துவந்திருக்கலாம். இப்போது இயேசுவும் சாகும் நிலையில் இருந்ததால் மரியாளை யார் கவனித்துக்கொள்வார்கள்? . . . வயதான பெற்றோரைப் பிள்ளைகள் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற பாடத்தை இயேசு இங்கே கற்றுக்கொடுக்கிறார்.”—த என்.ஐ.வி மாத்யூ ஹென்றி கமென்டரி இன் ஒன் வால்யூம், பக்கங்கள் 428-429.