தோரா என்பது என்ன?
பைபிள் தரும் பதில்
“தோரா” என்ற ஆங்கில வார்த்தை தோஹ்ராஹ் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வருகிறது; இந்த வார்த்தை “அறிவுரை,” “போதனை,” அல்லது ‘சட்டம்’ என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படலாம். a (நீதிமொழிகள் 1:8; 3:1; 28:4) பைபிளில் இந்த எபிரெய வார்த்தை எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.
தோஹ்ராஹ் பெரும்பாலும் பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை, அதாவது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய புத்தகங்களைக் குறிக்கிறது. இவை ‘பென்ட்டாடெக்’ என்றும் அழைக்கப்படுகின்றன; அதற்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “ஐந்து மடங்கு பாகம்” என்பதாகும். தோராவை எழுதியது மோசே; அதனால் அது, ‘மோசேயின் திருச்சட்ட புத்தகம்’ என்று அழைக்கப்படுகிறது. (யோசுவா 8:31; நெகேமியா 8:1) ஆரம்பத்தில் அந்த ஐந்துமே ஒரே புத்தகமாக எழுதப்பட்டது, ஆனால் எடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக அது பிற்பாடு வெவ்வேறு புத்தகங்களாகப் பிரிக்கப்பட்டதெனத் தெரிகிறது.
குறிப்பிட்ட விஷயங்களின்பேரில் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களைக் குறிப்பதற்கும் தோஹ்ராஹ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது; உதாரணத்திற்கு, “பாவப் பரிகார பலியின் சட்டம் [தோஹ்ராஹ்],” ‘தொழுநோயைப் பற்றிய சட்டம்,’ “நசரேயருக்கான சட்டம்.”—லேவியராகமம் 6:25; 14:57; எண்ணாகமம் 6:13.
சிலசமயம், தோஹ்ராஹ் என்பது பெற்றோரிடமிருந்தோ, ஞானிகளிடமிருந்தோ, கடவுளிடமிருந்தோ வரக்கூடிய அறிவுரையையும் போதனையையும் குறிக்கிறது.—நீதிமொழிகள் 1:8; 3:1; 13:14; ஏசாயா 2:3, அடிக்குறிப்பு.
தோராவில், அதாவது பென்ட்டாடெக்கில், என்ன விஷயங்கள் இருக்கின்றன?
படைப்பு தொடங்கி மோசேயின் மரணம்வரை, மனிதர்களைக் கடவுள் எப்படியெல்லாம் வழிநடத்தினார், என்பது பற்றிய சரித்திரம் இருக்கிறது.—ஆதியாகமம் 1:27, 28; உபாகமம் 34:5.
திருச்சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. (யாத்திராகமம் 24:3) திருச்சட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஷீமா, அதாவது யூதர்களுடைய விசுவாச அறிக்கை, பிரபலமானது. ஷீமாவின் ஒரு பகுதி இப்படிச் சொல்கிறது: ‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.’ (உபாகமம் 6:4-9) இந்தக் கட்டளையைத்தான் இயேசு “மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை” என்று விவரித்தார்.—மத்தேயு 22:36-38.
சுமார் 1,800 இடங்களில் யெகோவா என்ற கடவுளுடைய பெயர் இருக்கிறது. கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டளை தோராவில் இல்லை, மாறாக கடவுளுடைய மக்கள் அந்தப் பெயரைப் உச்சரிக்க வேண்டும் என்று சொல்கிற பல கட்டளைகள் அதில் இருக்கின்றன.—எண்ணாகமம் 6:22-27; உபாகமம் 6:13; 10:8; 21:5.
தோராவைப் பற்றிய தவறான கருத்துகள்
தவறான கருத்து: தோராவில் உள்ள சட்டங்கள் என்றென்றும் நிலைத்திருப்பவை, அவற்றை ஒருபோதும் ஒதுக்கிவிடக் கூடாது.
உண்மை: சில மொழிபெயர்ப்புகள் தோராவில் உள்ள சில சட்டங்களை—ஓய்வுநாள், குருத்துவம், பாவப் பரிகார நாள் போன்றவை சம்பந்தப்பட்ட சட்டங்களை—“நிரந்தர” அல்லது “நித்திய” சட்டங்கள் என்பதாகக் குறிப்பிடுவது உண்மைதான். (யாத்திராகமம் 31:16; 40:15; லேவியராகமம் 16:33, 34, தமிழ் O.V.) ஆனால், இந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, திட்டவட்டமாகச் சொல்ல முடியாத ஓர் எதிர்காலத்தையும் அர்த்தப்படுத்தலாம்; என்றென்றும் நிலைத்திருப்பது என்ற அர்த்தத்தை மட்டுமே அது தருவதில்லை. b திருச்சட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்து சுமார் 900 வருஷங்களுக்குப் பிறகு, அந்த ஒப்பந்தத்தை “ஒரு புதிய ஒப்பந்தம்” மாற்றீடு செய்யுமென்று கடவுள் முன்னறிவித்தார். (எரேமியா 31:31-33) இங்கே ‘“புதிய ஒப்பந்தம்” என்று கடவுள் சொல்லும்போது, முந்தின ஒப்பந்தத்தை நீக்கிவிட்டார் என்று அர்த்தமாகிறது.’ (எபிரெயர் 8:7-13) இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அடிப்படையில், சுமார் 2,000 வருஷங்களுக்குமுன் அது மாற்றீடு செய்யப்பட்டது.—எபேசியர் 2:15.
தவறான கருத்து: எழுதப்பட்ட தோராவுக்கு இருக்கிற அதே அதிகாரம் யூதர்களின் வாய்மொழி சட்டங்களுக்கும் தால்முட்டுக்கும் இருக்கிறது.
உண்மை: எழுதப்பட்ட தோராவுடன் சேர்த்து வாய்மொழி சட்டத்தையும் மோசேக்குக் கடவுள் கொடுத்ததாக பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை. அதற்குப் பதிலாக, “யெகோவா மோசேயிடம், ‘இந்த வார்த்தைகளை நீ எழுதி வை’” என்று சொன்னதாகத்தான் பைபிள் குறிப்பிடுகிறது. (யாத்திராகமம் 34:27) பிற்காலத்தில் எழுதப்பட்ட (மிஷ்னா என்று அழைக்கப்பட்ட) வாய்மொழி சட்டம், கடைசியில் தால்முட்டாக உருவெடுத்தது; பரிசேயர்கள் ஆரம்பித்து வைத்த யூத பாரம்பரியங்கள் அதில் பதிவுசெய்யப்பட்டன. இந்தப் பாரம்பரியங்கள் பெரும்பாலும் தோரோவுக்கு நேரெதிராக இருந்தன. அதனால்தான் பரிசேயர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “உங்களுடைய பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்.”—மத்தேயு 15:1-9.
தவறான கருத்து: பெண்களுக்கு தோராவைச் சொல்லிக் கொடுக்கக் கூடாது.
உண்மை: பெண்கள், பிள்ளைகள் உட்பட இஸ்ரவேல் மக்கள் எல்லாருக்குமே திருச்சட்டம் முழுவதுமாக வாசித்துக் காட்டப்பட வேண்டுமென்ற ஒரு கட்டளை திருச்சட்டத்தில் இருந்தது. ஏன்? ‘அப்போதுதான், அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.’—உபாகமம் 31:10-12. c
தவறான கருத்து: தோராவில் ரகசிய விஷயங்கள் இருக்கின்றன.
உண்மை: தோராவில் உள்ள விஷயங்கள் தெளிவாக இருப்பதாகவும், கண்டுபிடிக்க முடியாதபடி இல்லாமல் எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதாகவும் அதை எழுதிய மோசே குறிப்பிட்டார். (உபாகமம் 30:11-14) தோராவில் ரகசிய விஷயங்கள் இருக்கின்றன என்ற கோட்பாடு, வேதவசனங்களின் அர்த்தத்தை விளக்குவதற்கு “தந்திரமாக உருவாக்கப்பட்ட” கபாலாவில், அதாவது பாரம்பரிய யூத இறைமைக் கொள்கையில், வேரூன்றியதாக இருக்கிறது. d—2 பேதுரு 1:16.
a த ஸ்ட்ராங்கஸ்ட் ஸ்ட்ராங்க்ஸ் எக்ஸாஸ்டிவ் கன்கார்டன்ஸ் ஆஃப் த பைபிள் என்ற புத்தகத்தின் திருத்திய பதிப்பில், “பழைய ஏற்பாட்டின் எபிரெய-அரமேயிக் அகராதி-அட்டவணை” என்ற பகுதியிலுள்ள 8451-வது பதிவைப் பாருங்கள்.
b தியோலஜிக்கல் வர்ட்புக் ஆஃப் த ஓல்டு டெஸ்ட்டெமென்ட், தொகுப்பு 2, பக்கங்கள் 672-673-ஐப் பாருங்கள்.
c தோராவின் போதனைக்கு நேர்மாறாக, யூதர்களின் வாய்மொழி சட்டம், தோராவைப் படிக்கக் கூடாதென்று பெண்களுக்குத் தடைவிதித்தது. உதாரணத்திற்கு, ரபீ எலியேசர் பென் ஹிர்கேனஸ் என்பவருடைய வார்த்தைகளை மிஷ்னா இப்படி மேற்கோள் காட்டுகிறது: “தோராவை யார் தன் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாரோ, அவர் அவளுக்கு ஆபாசமான விஷயத்தைத்தான் சொல்லிக் கொடுக்கிறார்.” (ஸோட்டாஹ் 3:4) அவர் சொன்ன மற்றொரு வாக்கியம் ‘எருசலேம் தால்முட்டில்’ சேர்க்கப்பட்டுள்ளது: “தோராவில் உள்ள வார்த்தைகளைப் பெண்களுக்குச் சொல்லித் தருவதற்குப் பதிலாக அதை நெருப்பில் போட்டு எரித்துவிடுங்கள்.”—ஸோட்டாஹ் 3:19அ.
d உதாரணத்திற்கு, தோராவை கபாலா எந்தளவு மட்டம்தட்டிப் பேசுகிறது என்பதை என்ஸைக்ளோப்பீடியா ஜுடைக்கா இப்படி விளக்குகிறது: “குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி தோராவில் முக்கியமான விஷயம் எதுவும் இல்லை. ஆளாளுக்கு அதை எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம்.”—இரண்டாம் பதிப்பு, தொகுப்பு 11, பக்கம் 659.