குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
நன்றியோடு இருக்க பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்
நன்றியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்கிறார்கள், பிரச்சினைகளை நன்றாக சமாளிக்கிறார்கள், நெருக்கமான உறுதியான நண்பர்களை வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. நன்றியோடு இருப்பவர்கள் “கேடு உண்டாக்குகிற பேராசை, மனக்கசப்பு, பொறாமை கோபம் இதுபோன்ற குணங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர் ராபர்ட் எ. ஈமொன்ஸ் சொல்கிறார்.” a
பிள்ளைகள் நன்றியோடு இருப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை? நான்கு வருஷங்கள் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 700 இளைஞர்களைக் கவனித்தார்கள். அதில், பரீட்சையில் காப்பி அடித்து ஏமாற்றுவது... போதை பொருள்களையும் மதுபானங்களையும் தவறாக பயன்படுத்துவது... தங்களுக்கும் மற்றவர்களுக்கு கெடுதல் உண்டாக்குகிற மாதிரியான முரட்டுத்தனமான குணங்களைக் காட்டுவது... போன்ற கெட்ட பழக்கங்களை மற்ற இளைஞர்களைவிட நன்றியுணர்வோடு இருந்த இளைஞர்கள் ரொம்ப குறைவாக செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
நமக்கு கொடுக்க வேண்டியதைத்தான் கொடுக்கிறார்கள் என்ற எண்ணம் ஆபத்தானது. இன்றைக்கு நிறைய பிள்ளைகள், அவர்களுக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கும்போது, எனக்கு தகுதி இருக்கிறது, எனக்கு கொடுக்க வேண்டியதைத்தான் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஒருவர் நமக்கு பரிசு கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும். நமக்கு சேர வேண்டியதைத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணமே வராது.
இதுபோல் இன்று நிறைய பேர் யோசிக்கிறார்கள். கேத்ரின் என்ற அம்மா இப்படிச் சொல்கிறார், ”நாம் ஆசைப்பட்டதெல்லாம் நமக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்ற விஷயத்தைத்தான் இந்த உலகம் சொல்லிக் கொடுக்கிறது. பத்திரிகையில், டிவியில், இன்டர்நெட்டில் நிறைய விளம்பரங்கள் வலம் வருகின்றன. அதில் பார்க்கும் எல்லாவற்றையும் வாங்க நமக்கு தகுதியிருக்கிறது, அதையெல்லாம் வாங்க நாம்தான் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்று இந்த உலகம் சொல்லிக் கொடுக்கிறது.“
நன்றியோடு இருப்பது எப்படி என்று சின்ன வயதிலேயே பிள்ளைகளால் கற்றுக்கொள்ள முடியும். “பிள்ளைகள் எல்லாவற்றையும் சீக்கிரமாகவே கற்றுக்கொள்வார்கள். அதனால் நல்ல பழக்கங்களை சின்ன வயதிலேயே அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட வேண்டும். ஒரு குச்சியை ஒரு செடியோடு சேர்த்து கட்டும்போது அந்தச் செடி நேராக வளரும். அதேபோல், சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்களும் நல்ல பிள்ளைகளாக வளருவார்கள்“ என்று கெய் என்ற அம்மா சொல்கிறார்.
நன்றியோடு இருக்க எப்படிச் சொல்லிக் கொடுக்கலாம்?
என்ன சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். ஒருவர் ஒரு பரிசு கொடுக்கும்போது, இல்லையென்றால் உதவி செய்யும்போது தேங்க் யூ சொல்லவேண்டும் என்று பிள்ளைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு மற்றவர்கள் செய்கிற உதவியைப் பெரிதாக நினைத்து நன்றியோடு இருக்க கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்வார்கள்.
பைபிள் உண்மை: “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்.”—கொலோசெயர் 3:15.
“எங்களுடைய பேரப்பிள்ளைக்கு மூன்று வயதாகிறது. அவன் எப்போதுமே ‘தேங்க் யூ’ என்று சொல்லுவான். ஏதாவது கேட்க வேண்டும் என்றால் ‘ஃபிலீஸ்’ என்று சொல்லித்தான் கேட்பான். இப்படிச் சொல்ல வேண்டும் என்று அவனுடைய அப்பா- அம்மா அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நன்றியோடு இருக்க அவர்கள் செய்கிற விஷயங்களைப் பார்த்து இவனும் கற்றுக்கொள்கிறான்.”—ஜெப்ரி.
என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். அடுத்த தடவை உங்கள் பிள்ளைக்கு யாராவது பரிசு கொடுக்கும்போது ஒரு தேங்க் யூ கார்ட் எழுதி கொடுக்க நீங்கள் உற்சாகப்படுத்தலாம். அதோடு, வீட்டில் சில வேலைகளை அவர்களுக்கென்று பிரித்து கொடுங்கள். அப்போதுதான், வீட்டை ஒரு சந்தோஷமான இடமாக வைத்துக்கொள்வதற்கு எவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள்.
பைபிள் உண்மை: “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35.
“எங்களுக்கு இரண்டு டீனேஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள். என்ன சமைப்பது என்று பிலான் பண்ணுவது, சமையல் செய்வது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று எல்லாவற்றிலும் அவர்களும் எங்களுக்கு உதவி செய்வார்கள். இப்படிச் செய்வதால், அப்பா அம்மாவுக்கு வீட்டில் எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்காக நாங்கள் செய்கிற விஷயங்களுக்கு நன்றியோடு இருக்கவும் அவர்களால் முடிகிறது.”—பிவர்லி.
எப்படி யோசிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். மனத்தாழ்மை என்ற நல்ல நிலத்தில்தான் நன்றியோடு இருக்க வேண்டும் என்ற செடி வளரும். எல்லா விஷயங்களைச் செய்வதற்குமே மற்றவர்களுடைய உதவி நமக்கு தேவை என்று மனத்தாழ்மையாக இருக்கிறவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களுக்கு நன்றியோடு இருக்கிறார்கள்.
பைபிள் உண்மை: “மனத்தாழ்மையினால்... மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள். உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:3, 4.
“நாங்கள் ராத்திரி சாப்பிடும்போது, சிலசமயம் ஒரு விளையாட்டை விளையாடுவோம். வீட்டில் இருக்கிற எல்லாரும் ஒவ்வொருவரைப் பற்றி நல்ல விஷயத்தைச் சொல்லி அவர்களைப் பாராட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் மற்றவர்களுடைய குறைகளைப் பார்க்காமல், சுயநலமாக யோசிக்காமல், மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்க்க முடிகிறது, நன்றியோடு இருக்கவும் முடிகிறது.”— தம்மாரா.
டிப்ஸ்: மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்யும்போதும்... உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவி செய்யும்போதும்... நன்றி சொல்வதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நன்றியோடு இருப்பதில் நீங்கள் நல்ல முன்மாதிரியாக இருந்தீர்கள் என்றால், உங்கள் பிள்ளைகளும் உங்களைப் பார்த்து ஈசியாக கற்றுக்கொள்வார்கள்.
a தேங்க்ஸ்! ஹவ் ப்ராக்டிசிங் கிராட்டிடுயுட் கேன் மெக் யு ஹப்பியர் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.