இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | யோனத்தான்
“தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்”
போர் முடிந்துவிட்டது. ஏலா பள்ளத்தாக்கு அமைதியாக இருந்தது. மதிய வேளையில் ராணுவ முகாமில் காற்று வீசிக்கொண்டிருந்த சமயத்தில், சவுல் சில வீரர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய மூத்த மகன், யோனத்தானும் அங்கு இருந்தார். அப்போது இளம் மேய்ப்பர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களைக் கதையாக விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். தாவீதுதான் அந்த இளைஞர். அவர் ரொம்ப வைராக்கியத்தோடும் ஆர்வத்தோடும் இருந்தார். தாவீது சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் சவுல் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். யோனத்தான் இதைப் பற்றி எப்படி உணர்ந்தார்? பல வருஷங்களாக, யெகோவாவின் போர் வீரராக அவர் பல வெற்றிகள் பெற்றிருந்தார். ஆனால் இன்று கிடைத்த வெற்றி யோனத்தானால் அல்ல, இளம் தாவீதால்தான் கிடைத்தது. தாவீது ராட்சதனான கோலியாத்தைக் கொலை செய்திருந்தார்! தாவீதுக்குப் புகழாரம் சூட்டப்பட்டதால் யோனத்தான் பொறாமைப்பட்டாரா?
யோனத்தான் பிரதிபலித்த விதம் உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம். “சவுலிடம் தாவீது பேசியதைக் கேட்ட பிறகு, யோனத்தான் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்” என்று வாசிக்கிறோம். போர் செய்வதற்காகத் தான் வைத்திருந்த எல்லா ஆயுதங்களையும் யோனத்தான் தாவீதுக்குக் கொடுத்தார்; தன்னுடைய வில்லையும்கூட கொடுத்தார். அது மிகச்சிறந்த பரிசு, ஏனென்றால் யோனத்தான் மிகச்சிறந்த வில்வீரன் என்ற பெயர் எடுத்தவர். அதோடு, யோனத்தானும் தாவீதும் மாறாத ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார்கள். அந்த ஒப்பந்தம், அவர்களை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் நெருங்கிய நண்பர்களாக ஆக்கியது.—1 சாமுவேல் 18: 1-5.
இப்படித்தான் பைபிளில் இருக்கும் மிகச்சிறந்த நண்பர்களின் கதை ஆரம்பமானது. விசுவாசமுள்ளவர்களுடைய வாழ்க்கையில் நண்பர்களுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. அன்பே இல்லாத இந்த காலத்தில், நண்பர்களை நாம் ஞானமாக தேர்ந்தெடுத்து, ஆதரவு தரும், உண்மையுள்ள நபர்களாக நாம் நடந்துகொண்டால், நம்முடைய விசுவாசத்தையும் நம் நண்பர்களுடைய விசுவாசத்தையும் பலமாக வைத்துக்கொள்ளலாம். (நீதிமொழிகள் 27:17) இப்போது, நட்பைப் பற்றி யோனத்தானிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
நட்பின் அஸ்திவாரம்
அவர்களுக்கு இடையே இருந்த நட்பு எப்படி இவ்வளவு சீக்கிரம் பலமானது? அந்த நட்புக்கு எது அடிப்படையாக இருந்தது என்று தெரிந்துகொள்வது இந்த கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க உதவும். அதற்குமுன் அவர்களுடைய பின்னணியைப் பற்றி பார்க்கலாம். யோனத்தான் கஷ்டமான ஒரு காலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய அப்பாவான சவுல் ராஜா காலப்போக்கில் ரொம்ப ரொம்பக் கெட்டவராக மாறிவிட்டார். அவருடைய குணங்களும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் மனத்தாழ்மையுள்ளவராக, கீழ்ப்படிதலுள்ளவராக இருந்த சவுல் இப்போது கீழ்ப்படிதல் இல்லாத கொடூரமான ராஜாவாக மாறிவிட்டார்.—1 சாமுவேல் 15:17-19, 26.
யோனத்தான் தன் அப்பாவோடு நெருங்கிய பந்தம் வைத்திருந்ததால், தன் அப்பா இப்படி மாறியது அவரை ரொம்பவே வேதனைப்படுத்தியிருக்கும். (1 சாமுவேல் 20:2) யெகோவா தேர்ந்தெடுத்த மக்களுக்கு சவுல் ஏதாவது தீங்கு செய்துவிடுவாரோ என்றும் கவலைப்பட்டிருக்கலாம். ராஜா இப்படி கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனதால், மக்களும் வழிதவறிப்போய் யெகோவாவுடைய ஆதரவை இழந்துவிடுவார்களோ? இது விசுவாசமுள்ள மனிதரான யோனத்தானுக்குச் சமாளிக்க முடியாத கஷ்டமான காலமாகத்தான் இருந்திருக்கும்.
யோனத்தானைப் பற்றிய இந்தப் பின்னணியைத் தெரிந்துகொண்டது, அவர் ஏன் இளம் தாவீதிடம் நெருங்கி சென்றார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. தாவீதுக்கு பலமான விசுவாசம் இருந்ததை யோனத்தான் கவனித்தார். கோலியாத் ரொம்பக் கம்பீரமாக இருந்தாலும், சவுலுடைய படையில் இருந்த மற்றவர்களைப் போல தாவீது அவரைப் பார்த்து பயந்து நடுங்கவில்லை. கோலியாத் நிறைய போர்க்கருவிகளை வைத்திருந்தாலும், தாவீது யெகோவாவுடைய பெயரில் போய் எதிர்த்துப் போர் செய்வதால் கோலியாத்தைவிட பலமுள்ளவராக இருப்பதாகச் சொன்னார்.—1 சாமுவேல் 17:45-47.
பல வருஷங்களுக்கு முன்பு யோனத்தானும் அதைப்போலவே சொன்னார். தானும் தன்னுடைய ஆயுதங்களைச் சுமப்பவனும் சேர்ந்து, அதாவது இரண்டே பேர் மட்டும் சேர்ந்து, ஒரு முழு படையைத் தாக்கி அவர்களை வீழ்த்த முடியும் என்று யோனத்தான் நம்பினார். ஏன்? ஏனென்றால், ‘யெகோவாவை யாராலும் தடுக்க முடியாது’ என்று யோனத்தான் சொன்னார் (1 சாமுவேல் 14:6) யோனத்தானுக்கும் தாவீதுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருந்தது. அதாவது இருவருக்கும் யெகோவாமேல் பலமான விசுவாசமும் ஆழமான அன்பும் இருந்தது. இருவரும் நண்பர்கள் ஆகவும் தொடர்ந்து தங்களுடைய நட்பை காத்துகொள்ளவும் இந்த விஷயங்கள்தான் அடிப்படையாக இருந்தன. யோனத்தான், பலமுள்ள ஒரு படைத் தளபதி, கிட்டத்தட்ட ஐம்பது வயதை எட்டியவர்; தாவீது ஒரு தாழ்மையுள்ள மேய்ப்பர் இருபது வயதைக்கூட எட்டாதவர். ஆனாலும் இந்த வித்தியாசங்கள் அவர்களுடைய நட்புக்குத் தடைக்கல்லாக இருக்கவில்லை. *
அவர்கள் செய்திருந்த ஒப்பந்தம் அவர்களுடைய நட்பைப் பாதுகாத்தது. எப்படி? தான் என்னவாக ஆக வேண்டும் என்று யெகோவா நினைக்கிறார் என்பது தாவீதுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இஸ்ரவேலின் அடுத்த ராஜா அவர்தான்! இந்த விஷயத்தை தாவீது யோனத்தானிடம் சொல்லாமல் மறைத்திருப்பாரா? இல்லை! பொய்கள் சொல்லாமல், ஒளிமறைவு இல்லாமல் நல்ல பேச்சுதொடர்ப்பு இருந்தால்தான் பலமான நட்பு உருவாகி நிலைத்திருக்கும். தாவீதுதான் அடுத்த ராஜா என்று தெரிந்துகொண்டபோது யோனத்தானுக்கு எப்படி இருந்திருக்கும்? ஒருநாள் ராஜாவாக ஆகி, தன் அப்பா செய்த தப்பான விஷயங்களை எல்லாம் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை யோனத்தானுக்கு இருந்ததா? அவருடைய மனதுக்குள் இருந்த போராட்டத்தைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை; யோனத்தான் உண்மையாக இருந்ததைப் பற்றியும் அவருடைய விசுவாசத்தைப் பற்றியும்தான் பைபிள் சொல்கிறது. யெகோவாவுடைய சக்தி தாவீதோடு இருந்ததை யோனத்தானால் பார்க்க முடிந்தது. (1 சாமுவேல் 16:1, 11-13) அதனால் தான் எடுத்த உறுதிமொழியை யோனத்தான் நிறைவேற்றினார்; தாவீதை தன்னுடைய எதிரியாக அல்ல, எப்போதும் போல இப்போதும் தன்னுடைய நண்பனாக நினைத்தார். யெகோவாவுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதுதான் யோனத்தானின் குறிக்கோளாக இருந்தது.
யோனத்தானுக்கும் தாவீதுக்கும் யெகோவாமேல் பலமான விசுவாசமும் ஆழமான அன்பும் இருந்தது
அந்த நட்பு ஒரு பெரிய ஆசீர்வாதமாக மாறியது. யோனத்தான் காட்டிய விசுவாசத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளுடைய எந்தவொரு ஊழியரும் நட்பின் மதிப்பைப் புரிந்திருப்பார். ஒரே வயதை அல்லது பின்னணியைச் சேர்ந்தவர்கள் நம்முடைய நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் உண்மையான, விசுவாசமுள்ள நபர்களாக இருக்கும்போது அவர்களால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். பல சமயங்களில், யோனத்தானும் தாவீதும் ஒருவரை ஒருவரை உற்சாகப்படுத்தி, பலப்படுத்திக்கொண்டார்கள். இப்படிச் செய்தது, இன்னும் பெரியச் சோதனைகளைச் சந்திக்க அவர்களுக்கு உதவியது.
யாருக்கு உண்மையாக இருப்பது என்ற சவால்
ஆரம்பத்தில், சவுலுக்கு தாவீதை ரொம்பப் பிடித்திருந்தது, தன்னுடைய படைக்கு அவரைத் தலைவராக ஆக்கினார். ஆனால் கொஞ்ச நாளிலேயே, சவுல் கெட்ட குணமான பொறாமையை வளர்த்துக்கொண்டார். ஆனால் இந்தக் குணத்தை யோனத்தான் எதிர்த்து நின்றார். இஸ்ரவேலர்களின் எதிரிகளான பெலிஸ்தியர்களோடு நடந்த போரில் தாவீதுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி குவிந்தது. அதனால் தாவீதைப் பார்த்து மக்கள் பிரமித்துப்போய், அவரைப் புகழ்ந்தார்கள். “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பல்லாயிரம்” என்று இஸ்ரவேலைச் சேர்ந்த சில பெண்கள் பாடினார்கள். சவுலுக்கு இந்தப் பாடல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. “அந்த நாளிலிருந்து சவுல் எப்போதும் தாவீதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்” என்று வாசிக்கிறோம். (1 சாமுவேல் 18:7, 9) தன்னிடம் இருக்கும் ராஜ அதிகாரத்தை தாவீது பறிக்க முயற்சி செய்வாரோ என்று சவுல் பயந்தார். சவுல் இப்படி நினைத்தது உண்மையிலேயே ஒரு முட்டாள்தனமான விஷயம். சவுலுக்குப் பிறகு தான் ராஜாவாக ஆகபோவது தாவீதுக்குத் தெரிந்திருந்தாலும், யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா ஆட்சி செய்துகொண்டிருக்கும்போது, அவரை ஒதுக்கிதள்ளிவிட்டு தான் ராஜாவாக ஆவதை தாவீது நினைத்துகூட பார்க்கவில்லை.
போரில் தாவீதைக் கொன்றுவிடலாம் என்று சவுல் திட்டம் போட்டார்; ஆனால் அவருடைய திட்டங்கள் எதுவும் பலிக்கவில்லை. தாவீது அடுத்து அடுத்து போரில் வெற்றி பெற்று மக்களுடைய அன்பையும் மரியாதையும் அதிக அதிகமாகச் சம்பாதித்துக்கொண்டிருந்தார். அதனால், தன்னுடைய மூத்த மகனும், வீட்டிலுள்ள எல்லா ஊழியர்களும் ஒன்றாக சேர்ந்து தாவீதைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்று சவுல் சொன்னார். அவர்கள் எல்லாரும் தனக்கு உதவி செய்வார்கள் என்றும் அவர் நினைத்தார். தன்னுடைய நெருங்கிய நண்பனையே கொலை செய்ய தன்னுடைய அப்பா இப்படித் திட்டம் போடுவதைப் பார்த்து யோனத்தான் எந்தளவு மனம் உடைந்துபோயிருப்பார்! (1 சாமுவேல் 18:25-30; 19:1) யோனத்தான் தன்னுடைய அப்பாவுக்கு உண்மையுள்ள மகனாக இருந்தாலும் அவர் தாவீதுக்கு உண்மையுள்ள நண்பராகவும் இருந்தார். ஆனால் இப்போது அவர், இருவருக்கும் உண்மையுள்ளவராக இருக்க முடியாது. அப்படியென்றால் இப்போது அவர் யாருக்கு உண்மையாக இருப்பார்?
யோனத்தான் இப்படிச் சொல்கிறார்: “ராஜாவாக இருக்கிற நீங்கள் உங்களுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது. ஏனென்றால், அவன் உங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. சொல்லப்போனால், உங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறான். தன் உயிரையே பணயம் வைத்து அந்தப் பெலிஸ்தியனைக் கொன்றுபோட்டிருக்கிறான். அதனால், இஸ்ரவேலுக்கு யெகோவா மாபெரும் வெற்றி தந்தார். அதை உங்கள் கண்ணாலேயே பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டீர்கள். இப்போது மட்டும் ஏன் காரணமே இல்லாமல் தாவீதைக் கொன்று, ஒரு அப்பாவியின் சாவுக்குக் காரணமாக வேண்டும்?” என்றார். யோனத்தான் சொன்ன நியாயமான விஷயங்களை அப்போது சவுல் காதுக்கொடுத்து கேட்டார். அதிசயமான விஷயம்! தாவீதுக்கு எந்த கெடுதலும் செய்யபோவதில்லை என்றும் வாக்குக் கொடுத்தார். ஆனால் சவுல் தான் கொடுத்த வாக்கைப் காப்பாற்றவில்லை. தாவீதுக்குப் பல வெற்றிகள் கிடைத்ததால் சவுல் அவர்மீது ரொம்பப் பொறமைப்பட்டார். அதனால், தன்னிடம் இருந்த ஈட்டியை தாவீதை நோக்கி எறிந்தார்! (1 சாமுவேல் 19:4-6, 9, 10) ஆனால் தாவீது தப்பித்துவிட்டார்; சவுலுடைய அரண்மனையை விட்டு ஓடிப்போனார்.
யாருக்கு உண்மையாக இருப்பது என்ற சவாலை நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா? அது ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். அந்த மாதிரியான சமயங்களில் குடும்பத்தில் இருப்பவர்களுக்குத்தான் முதலில் உண்மையாக இருக்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். ஆனால் அப்படிச் செய்வது சரியானதல்ல என்பது யோனத்தானுக்குத் தெரிந்திருந்தது. தாவீது உண்மையுள்ளவராக, யெகோவாவுக்குக் கீழ்ப்படித்தலுள்ள ஊழியனாக இருக்கும்போது யோனத்தான் எப்படித் தன்னுடைய தகப்பனுக்கு ஆதரவாக இருக்க முடியும்? அதனால், யோனத்தான் யெகோவாவுடைய பார்வையில் உண்மையுள்ளவராக இருந்து நல்ல தீர்மானத்தை எடுத்தார்; தாவீதை முழுமையாக ஆதரித்தார். யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது யோனத்தானுக்கு முக்கியமாக இருந்தாலும், தன்னுடைய தகப்பனிடம் நேர்மையாக அவர் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டினார்; சவுலுடைய காதுக்கு இனிமையாக இருக்கும் விஷயங்களை அவர் சொல்லவில்லை. இதன்மூலம் யோனத்தான் தன் அப்பாவிடமும் உண்மையுள்ளவராக நடந்துகொண்டார். அவரைப்போல் நாமும் உண்மையுள்ளவர்களாக நடந்துக்கொள்ளும்போது நாம் ஒவ்வொருவருக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
கஷ்டமான சமயங்களிலும் உண்மையாக இருப்பது
சவுல் மற்றும் தாவீதுக்கு இடையில் சுமூகமான உறவு இருக்க வேண்டும் என்பதற்காக யோனத்தான் மறுபடியும் முயற்சி செய்கிறார். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. யாருக்கும் தெரியாமல் தாவீது யோனத்தானைப் பார்ப்பதற்காக வந்து, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதை நினைத்து பயப்படுவதாக அவரிடம் சொல்கிறார். “எனக்குச் சாவு நெருங்கிவிட்டது!” என்று தன்னுடைய நண்பரிடம் சொல்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தன்னுடைய அப்பாவின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதை தாவீதிடம் சொல்வதாக யோனத்தான் சொல்கிறார். தாவீது ஒளிந்திருக்கும் சமயத்தில், யோனத்தான் அம்புகளை எய்வதன் மூலம் அவருக்கு செய்தியைச் சொல்வார். “உன் எதிரிகளையெல்லாம் யெகோவா இந்தப் பூமியிலிருந்து ஒழித்துக்கட்டினால்கூட, நீ என் குடும்பத்துக்கு அன்பு காட்டுவதை ஒருநாளும் விட்டுவிடக் கூடாது” என்று யோனத்தான் தாவீதிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். யோனத்தானின் குடும்பத்தில் இருப்பவர்கள் மீது எப்போதுமே அன்பு காட்டுவதாக தாவீது ஒத்துக்கொண்டார். —1 சாமுவேல் 20:3, 13-27.
தாவீதைப் பற்றிய நல்ல விஷயங்களை சவுலிடம் பேச யோனத்தான் முயற்சி செய்தார். ஆனால் அதைக் கேட்டு ராஜாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது! அவர் யோனத்தானைப் பார்த்து “அடங்காதவனே” என்றும், தாவீதிடம் உண்மையாக நடந்துகொள்வது தன்னுடைய குடும்பத்துக்கு மானக்கேடு என்றும் சொன்னார். “ஈசாயின் மகன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நீ ராஜாவாக முடியாது, உன்னுடைய ஆட்சியும் நிலைக்காது” என்று சொல்வதன் மூலம் யோனத்தானுக்குச் சுயநல ஆசையைத் தூண்டிவிட முயற்சி செய்தார். ஆனால், அதையெல்லாம் கொஞ்சம்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் யோனத்தான் தன்னுடைய அப்பாவிடம், “அவன் எதற்காகச் சாக வேண்டும்? அப்படி என்ன தப்பு செய்துவிட்டான்?” என்று கேட்டார். உடனே சவுல் பயங்கர கோபத்தோடு வன்முறையில் இறங்கினார். வயதானாலும் சவுல் இன்னும் ஒரு மாவீரனாகத்தான் இருந்தார். தன்னுடைய மகன்மேல் ஈட்டியை எறிந்தார்! பயிற்சிப் பெற்றவராக இருந்தாலும் அவருடைய குறி தப்பியது. யோனத்தானுடைய மனம் சுக்குநூறாக உடைந்தது; அவர் அவமானத்தோடும் பயங்கர கோபத்தோடும் எழுந்து போனார்.—1 சாமுவேல் 20:24-34.
யோனத்தான் சுயநல ஆசை என்னும் சோதனையை வென்றார்
அடுத்த நாள் காலையில், ஊருக்கு வெளியே தாவீது ஒளிந்துகொண்டிருந்த இடத்திற்கு யோனத்தான் போனார். முன்பே பேசி வைத்திருந்ததைப் போல, யோனத்தான் ஒரு அம்பை எய்து, சவுல் இன்னும் தாவீதைக் கொலை செய்ய துடித்துகொண்டிருப்பதை தாவீதுக்குத் தெரியப்படுத்தினார். பின்பு யோனத்தான் தன்னுடைய வேலைக்காரப் பையனை ஊருக்குள் திருப்பி அனுப்பினார். இப்போது யோனத்தானும் தாவீதும் தனியாக இருப்பதால் மனம்விட்டு பேச அவர்களுக்குக் கொஞ்ச நேரம்தான் கிடைத்தது. இருவரும் அழுதார்கள்; நாடோடியாக ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க தன்னுடைய நண்பன் தாவீது போவதைப் பார்த்து யோனத்தான் ரொம்ப வேதனைப்பட்டார்.—1 சாமுவேல் 20:35-42.
யோனத்தானின் உண்மைத்தன்மை, சுயநல ஆசை என்னும் சோதனையை வென்றது. ஒருவேளை, யோனத்தான் தன்னுடைய அப்பாவின் பேச்சைக் கேட்டு அதிகாரமும் அல்லது பேர்புகழும்தான் முக்கியம் என்று நினைத்திருந்தால், விசுவாசமுள்ள மக்களின் எதிரியான சாத்தான் ரொம்பச் சந்தோஷப்பட்டிருப்பான். மனிதர்களுடைய சுயநல ஆசைகளைத் தூண்டிவிடுவது சாத்தானுக்கு ரொம்பப் பிடித்த விஷயம். இந்த விஷயத்தில் நம்முடைய முதல் பெற்றோரான ஆதாம் ஏவாளிடம் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். (ஆதியாகமம் 3:1-6) ஆனால் யோனத்தானின் விஷயத்தில் அது பலிக்கவில்லை. சாத்தானுக்கு எவ்வளவு வெறுப்பாக இருந்திருக்கும்! இதேபோன்ற சோதனைகளை நீங்களும் எதிர்த்து நிற்பீர்களா? சுயநலம் என்ற தொற்றுநோய் முழுவதுமாக பரவியிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) யோனத்தான் காட்டிய சுயநலமில்லாத குணத்தில் இருந்தும் உண்மைத்தன்மையில் இருந்தும் நாம் நிறைய விஷயங்களைக் காற்றுக்கொள்ளலாம் இல்லையா?
‘என் உயிருக்கு உயிரானவரே’
தாவீதின் மீது இருந்த வெறுப்பு சவுலை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. பித்துபிடித்தவர் போல, தன்னுடைய படையைத் திரட்டிகொண்டு, ஒரு அப்பாவியைக் கொலை செய்ய தேடி அலைவதை யோனத்தான் பார்த்தார்; ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. (1 சாமுவேல் 24:1, 2, 12-15; 26:20) அந்தக் கூட்டத்தில் யோனத்தானும் சேர்ந்துகொண்டாரா? தவறாக வழிநடத்தப்பட்ட இப்படிப்பட்ட கூட்டத்தில் யோனத்தான் சேர்ந்துகொண்டதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. யெகோவாவுக்கும், தாவீதுக்கும், நண்பரிடம் கொடுத்த வாக்குறுதிக்கும் யோனத்தான் உண்மையாக இருந்ததால்தான், இப்படி ஒரு விஷயத்தை செய்வதை அவரால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.
தன்னுடைய நண்பன்மேல் யோனத்தானுக்கு இருந்த பாசம் மாறவே இல்லை. கொஞ்ச நாளிலேயே, தாவீதை பார்க்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அது ஒரேசு என்றழைக்கப்பட்ட காட்டுப்பகுதியாக இருந்தது. ஒரேசு, மலைகள் நிறைந்த வனாந்திரப் பகுதியில் இருந்தது; எப்ரோனில் இருந்து தென்கிழக்குப் பகுதியில் சில மைல் தூரத்தில் இருந்தது. தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து யோனத்தான் ஏன் இந்த நாடோடியைப் போய்ப் பார்க்கிறார்? “யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க” தாவீதுக்கு உதவி செய்வதற்காக அவர் போனார் என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 23:16) யோனத்தான் அவரை எப்படி உற்சாகப்படுத்தினார்?
“பயப்படாதே” என்று யோனத்தான் தன்னுடைய நண்பனிடம் சொன்னார். அதோடு, “என் அப்பா உன்னை எதுவும் செய்ய முடியாது” என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். எதன் அடிப்படையில் யோனத்தான் இப்படி நம்பிக்கை கொடுத்தார்? யெகோவா வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என்ற உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் யோனத்தான் இப்படிச் சொன்னார். “நீதான் இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பாய்” என்றும் தாவீதிடம் சொன்னார். யெகோவாவின் வார்த்தைகள் எப்போதும் நம்பகமானவை என்பதைச் சொல்ல ரொம்ப வருஷங்களுக்கு முன்பே சாமுவேல் தூண்டப்பட்டார். அதே வார்த்தைகளை இப்போது யோனத்தானும் தாவீதுக்கு ஞாபகப்படுத்துகிறார். எதிர்காலத்தில் தான் என்ன செய்யப்போவதாக யோனத்தான் நினைத்தார்? “நான் உனக்கு அடுத்தபடியாகத்தான் இருப்பேன்” என்று சொன்னார். எவ்வளவு அருமையான குணத்தை, அதாவது மனத்தாழ்மையை, யோனத்தான் காட்டியிருக்கிறார்! தன்னைவிட முப்பது வயது சிறியவராக இருக்கும் ஒருவருக்குக் கீழ் வேலை செய்து, அவர் சொல்வதைக் கேட்டு நடக்கவும் அவரை ஆதரிக்கவும் தயாராக இருந்தார்! “இது என் அப்பாவுக்கும் தெரியும்” என்று சொல்லி தன்னுடைய பேச்சை முடித்தார். (1 சாமுவேல் 23:17, 18) யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த ராஜாவுக்கு எதிராக நின்று ஜெயிக்க முடியாது, அது நடக்காத ஒன்று என்பது சவுலுடைய இதயத்துக்குத் தெரிந்திருந்தது.
வருஷங்கள் போக போக, தங்களுடைய கடைசி சந்திப்பை தாவீது அடிக்கடி நினைத்து பார்த்திருப்பார்; அதை ரசித்திருப்பார். அவர்கள் இருவரும் பார்த்துகொண்டது அதுதான் கடைசிமுறை. வருத்தமான விஷயம் என்னவென்றால், தாவீதுக்கு அடுத்ததாக இருப்பேன் என்ற யோனத்தானின் நம்பிக்கை கடைசிவரை நிறைவேறாமலே போனது.
‘இஸ்ரவேலர்கள் எங்களுடைய எதிரிகள்’ என்று நேரடியாகவே சொன்ன பெலிஸ்தியர்களை எதிர்த்து, யோனத்தான் தன் அப்பாவோடு சேர்ந்து போர் செய்யப்போனார். தன் அப்பாவோடு சேர்ந்து, சுத்தமான மனசாட்சியோடு, எதிரிகளை எதிர்த்து சண்டைப் போட்டார். ஏனென்றால், தன்னுடைய அப்பா தவறுகள் செய்பவராக இருந்தாலும், யெகோவாவுக்குச் செய்யும் சேவைக்குத்தான் யோனத்தான் முதலிடம் கொடுத்தார். உண்மையுள்ளவராகவும் எப்போதும் போல தைரியமுள்ளவராகவும் சண்டைப் போட்டார். ஆனாலும் இஸ்ரவேர்களால் போரில் வெற்றிபெற முடியவில்லை. சவுல் மோசமான விஷயங்களைச் செய்திருந்தார். திருச்சட்டத்தில் இருக்கும் சட்டத்துக்கு எதிராக, ஆவியுல தொடர்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் அவர் ஈடுபட்டார். இது மரண தண்டனை கிடைக்கும் அளவுக்கும் மோசமான பாவமாக கருதப்பட்டது. அதனால் அவரை யெகோவா ஆசீர்வாதிக்கவில்லை. அதனால் சவுலுடைய மூன்று மகன்கள் இறந்துபோனார்கள்; அதில் யோனத்தானும் ஒருவர். சவுலுக்கும் பயங்கரமான காயங்கள் ஏற்பட்டன; அதனால் அவர் தன்னுடைய வாளால் தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். —1 சாமுவேல் 28:6-14; 31:2-6.
“நீதான் இஸ்ரவேலின் ராஜாவாக இருப்பாய், நான் உனக்கு அடுத்தபடியாகத்தான் இருப்பேன்” என்று யோனத்தான் சொன்னார்.—1 சாமுவேல் 23:17
இது தாவீதுக்கு தாங்க முடியாத வேதனையைத் தந்தது. தனக்குப் பல பிரச்சினைகளை உண்டாக்கின, பல கஷ்டங்களைக் கொடுத்த சவுலை நினைத்தும் தாவீது ரொம்பக் கவலைப்பட்டார். எப்பேர்ப்பட்ட இரக்கமும் மன்னிக்கும் குணமும் உள்ள அருமையான மனிதர் இவர்! சவுலையும் யோனத்தானையும் நினைத்து தாவீது ஒரு புலம்பல் பாடலை எழுதினார். “யோனத்தானே, என் சகோதரரே, உயிருக்கு உயிரானவரே, உங்களை நினைத்து என் மனம் துடியாய்த் துடிக்கிறது. பெண்களின் அன்பைவிட உங்கள் அன்பு மிக அருமையானது” என்று தன்னைச் செதுக்கிச் சீராக்க உதவியவரும், நண்பருமான யோனத்தானைப் பற்றி சொன்னார்; இந்த வார்த்தைகள் நம்முடைய இதயத்தைத் தொடுகின்றன.—2 சாமுவேல் 1:26.
யோனத்தானுக்குக் கொடுத்த வாக்கை தாவீது மறக்கவே இல்லை. பல வருஷங்களுக்குப் பிறகு தாவீது யோனத்தானின் உடல் ஊனமான மகன் மேவிபோசேத்தை தேடி கண்டுபிடித்து அவரைக் கவனித்துக்கொண்டார். (2 சாமுவேல் 9:1-13) உண்மையாக இருப்பதையும், நிறைய கஷ்டங்களை எதிர்ப்பட வேண்டியிருந்தாலும் ஒரு நண்பனுக்கு உண்மையாக இருக்க தயாராக இருப்பதையும் யோனத்தானிடம் இருந்து தாவீது கற்றுக்கொண்டார். நாமும் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் இல்லையா? யோனத்தானைப் போன்ற நல்ல நண்பர்களை நாமும் தேடுவோமா? நாமும் ஒரு நல்ல நண்பராக நடந்துக்கொள்வோமா? யெகோவாமீது விசுவாசத்தை வைக்கவும் அதைப் பலப்படுத்தவும் நாம் நம்முடைய நண்பர்களுக்கு உதவும்போதும்... யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கு முதலிடம் கொடுக்கும்போதும்... நம்முடைய சொந்த ஆசைகளைத் தேடாமல் தொடர்ந்து உண்மையாக நிலைத்திருக்கும்போதும்... யோனத்தானைப் போலவே நாமும் ஒரு நல்ல நண்பராக இருக்க முடியும். அவருடைய விசுவாசத்தையும் பின்பற்ற முடியும்.
^ பாரா. 7 பைபிள் பதிவுகளில் யோனத்தானைப் பற்றி முதன்முதலில் குறிப்பிட்டபோது, அவர் சவுலின் ஆட்சி காலத்தின் ஆரம்பத்தில் ஒரு படைத் தளபதியாக இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அதனால் அவருக்கு குறைந்தபட்சம் இருபது வயதாவது இருந்திருக்க வேண்டும். (எண்ணாகமம் 1:3; 1 சாமுவேல் 13:2) சவுல் நாற்பது வருஷங்கள் ஆட்சி செய்தார்; அப்படிப் பார்க்கும்போது, சவுல் சாகும்போது யோனத்தானுக்குக் கிட்டத்தட்ட அறுபது வயது, தாவீதுக்கு முப்பது வயது. (1 சாமுவேல் 31:2; 2 சாமுவேல் 5:4) அதனால் யோனத்தான் தாவீதைவிட முப்பது வயது பெரியவராக இருந்தார்.