கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 6:1-20

  • சகோதரர்கள் மத்தியில் வழக்குகள் (1-8)

  • கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படாதவர்கள் (9-11)

  • உங்கள் உடலால் கடவுளை மகிமைப்படுத்துங்கள் (12-20)

    • “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” (18)

6  உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்கு இருந்தால்,+ அதைத் தீர்த்துக்கொள்ள அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல் நீதிமன்றத்துக்குப் போய் அநீதிமான்கள் முன்னால் நிற்கத் துணிவது ஏன்?  பரிசுத்தவான்கள் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ உலகத்தையே நியாயந்தீர்க்கப்போகிற உங்களுக்கு, சின்னச் சின்ன வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதி இல்லையா?  நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா?+ அப்படியிருக்கும்போது, இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகளை ஏன் தீர்த்துக்கொள்ள முடியாது?  அவற்றைத் தீர்த்துக்கொள்ள+ சபைக்கு வெளியே இருக்கிறவர்களைப்போய் நீதிபதிகளாக வைக்கிறீர்களே!  நீங்கள் வெட்கப்படுவதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களுக்குள் இருக்கிற வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஞானமுள்ளவர் ஒருவர்கூட உங்கள் மத்தியில் இல்லையா?  சகோதரனுக்கு எதிராகச் சகோதரன் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறானாமே, அதுவும் உலக மக்களுக்கு முன்னால் அப்படிச் செய்கிறானாமே!  உண்மையில், நீங்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் வழக்கு போடுவதே நீங்கள் படுதோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது. அதனால், உங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை ஏன் பொறுத்துக்கொள்ளக் கூடாது?+ உங்களுக்குச் செய்யப்பட்ட மோசடியை ஏன் சகித்துக்கொள்ளக் கூடாது?  அதற்குப் பதிலாக நீங்களே அநியாயமும் மோசடியும் செய்கிறீர்கள், அதுவும் உங்கள் சகோதரர்களுக்கு அப்படிச் செய்கிறீர்கள்.  அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ சிலையை வணங்குகிறவர்கள்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள்,+ ஆண் விபச்சாரக்காரர்கள்,*+ ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள்,+ 10  திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+ 11  உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள். ஆனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் கடவுளுடைய சக்தியாலும் சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள்,+ பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.+ 12  எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம்* இருக்கிறது; ஆனால், எல்லா காரியங்களும் பிரயோஜனமானவை கிடையாது.+ எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எந்தக் காரியத்துக்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன். 13  வயிற்றுக்காகவே உணவு, உணவுக்காகவே வயிறு. ஆனால், இவை இரண்டையும் கடவுள் அழித்துவிடுவார்.+ உடலானது பாலியல் முறைகேட்டுக்காக* அல்ல, நம் எஜமானுக்காக இருக்கிறது;+ நம் எஜமானும் உடலுக்காக இருக்கிறார். 14  கடவுள் தன்னுடைய வல்லமையால்+ நம் எஜமானை உயிரோடு எழுப்பினார்,+ அதேபோல் நம்மையும் உயிரோடு எழுப்புவார்.+ 15  உங்களுடைய உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பது உங்களுக்குத் தெரியாதா?+ அப்படியிருக்கும்போது, கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விபச்சாரியின் உறுப்புகளோடு நான் சேர்க்கலாமா? கூடவே கூடாது! 16  விபச்சாரியோடு சேர்ந்திருக்கிறவன் அவளோடு ஒரே உடலாக இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், “அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.+ 17  ஆனால், நம் எஜமானோடு சேர்ந்திருக்கிறவன் அவரோடு ஒரே சிந்தையாக இருக்கிறான்.+ 18  பாலியல் முறைகேட்டிலிருந்து* விலகி ஓடுங்கள்.+ ஒரு மனிதன் செய்கிற வேறெந்தப் பாவமும் உடலோடு நேரடியாகச் சம்பந்தப்படாதது. ஆனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்.+ 19  உங்கள் உடல் கடவுளுடைய சக்தி குடியிருக்கிற+ ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?+ நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் கிடையாது.+ 20  ஏனென்றால், நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்.+ அதனால், உங்கள் உடலால்+ கடவுளை மகிமைப்படுத்துங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மற்ற ஆண்கள் தங்களோடு உறவுகொள்ள அனுமதிக்கும் ஆண்கள்.”
நே.மொ., “அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்தை ஆஸ்தியாகப் பெற.”
வே.வா., “கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறவர்கள்.”
வே.வா., “அனுமதி.”
நே.மொ., “சதையாக.”