யோவான் எழுதியது 4:1-54

  • இயேசுவும் சமாரியப் பெண்ணும் (1-38)

    • “சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” கடவுளை வணங்க வேண்டும் (23, 24)

  • சமாரியர்கள் நிறைய பேர் விசுவாசம் வைக்கிறார்கள் (39-42)

  • அதிகாரியின் மகனை இயேசு குணமாக்குகிறார் (43-54)

4  யோவானைவிட இயேசு நிறைய பேரைச் சீஷர்களாக்கி ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார் என்ற செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள்.+  உண்மையில் இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள்தான் கொடுத்தார்கள்.  அந்தச் செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியவந்தபோது, யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவுக்குப் புறப்பட்டார்.  ஆனால், அவர் சமாரியா வழியாகப் போக வேண்டியிருந்தது;  அதனால், சீகார் என்ற சமாரிய நகரத்துக்கு அவர் வந்தார். யாக்கோபு தன்னுடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்குப் பக்கத்தில் அந்த நகரம் இருந்தது.+  அங்கே யாக்கோபின் கிணறு* இருந்தது.+ பயணம் செய்து களைப்பாக இருந்ததால் இயேசு அந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது.  அந்தச் சமயத்தில், ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுக்க அங்கே வந்தாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்டார்.  (அவருடைய சீஷர்கள் உணவு வாங்குவதற்காக நகரத்துக்குள்ளே போயிருந்தார்கள்.)  சமாரியர்களோடு யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்+ என்பதால் அந்தச் சமாரியப் பெண் அவரிடம், “நான் ஒரு சமாரியப் பெண், நீங்களோ ஒரு யூதர். அப்படியிருக்கும்போது, குடிப்பதற்கு என்னிடம் எப்படித் தண்ணீர் கேட்கிறீர்கள்?” என்றாள். 10  அதற்கு இயேசு, “கடவுள் கொடுக்கும் இலவச அன்பளிப்பு+ எது என்றும், குடிப்பதற்கு உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்றும் உனக்குத் தெரிந்திருந்தால், நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்”+ என்று சொன்னார். 11  அப்போது அவள், “ஐயா, தண்ணீர் எடுக்க உங்களிடம் வாளிகூட இல்லை, கிணறும் ஆழமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, வாழ்வு தரும் தண்ணீர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? 12  எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்த எங்கள் மூதாதையான யாக்கோபைவிட நீங்கள் உயர்ந்தவரா? அவரும் அவருடைய பிள்ளைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தார்கள், அவருடைய கால்நடைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தன” என்று சொன்னாள். 13  அதற்கு இயேசு, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற எல்லாருக்கும் மறுபடியும் தாகமெடுக்கும். 14  ஆனால், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற ஒருவனுக்கும் என்றுமே தாகம் எடுக்காது;+ நான் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து பொங்கிவருகிற நீரூற்றாக மாறி, முடிவில்லாத வாழ்வைத் தரும்”+ என்று சொன்னார். 15  அந்தப் பெண் அவரிடம், “ஐயா, எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடுங்கள்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் எடுக்க நான் இங்கே வர வேண்டிய அவசியமும் இருக்காது” என்று சொன்னாள். 16  அதற்கு அவர், “நீ போய் உன் கணவனை இங்கே கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னார். 17  அந்தப் பெண்ணோ, “எனக்குக் கணவன் இல்லை” என்று சொன்னாள். அப்போது இயேசு, “‘எனக்குக் கணவன் இல்லை’ என்று நீ சொன்னது சரிதான். 18  ஏனென்றால், உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள், இப்போது உன்னோடு இருப்பவன் உன் கணவன் அல்ல. நீ உண்மையைச் சொன்னாய்” என்றார். 19  அந்தப் பெண், “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று எனக்குப் புரிந்துவிட்டது.+ 20  எங்களுடைய முன்னோர்கள் இந்த மலையில் கடவுளை வணங்கினார்கள். ஆனால், எருசலேமில்தான் அவரை வணங்க வேண்டுமென்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்கள்”+ என்றாள். 21  இயேசு அவளிடம், “பெண்ணே, என்னை நம்பு. நேரம் வருகிறது, அப்போது பரலோகத் தகப்பனை நீங்கள் இந்த மலையிலும் வணங்க மாட்டீர்கள், எருசலேமிலும் வணங்க மாட்டீர்கள். 22  நீங்கள் தெரியாமல் வணங்குகிறீர்கள்.+ நாங்களோ தெரிந்து வணங்குகிறோம். ஏனென்றால், மீட்பு யூதர்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.+ 23  ஆனாலும், உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கப்போகிற நேரம் வருகிறது, அது ஏற்கெனவே வந்துவிட்டது. சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்.+ 24  கடவுள் பார்க்க முடியாத உருவத்தில்* இருக்கிறார்.+ அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”+ என்று சொன்னார். 25  அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து என்ற மேசியா வருவார் என்று எனக்குத் தெரியும். அவர் வரும்போது எல்லா விஷயங்களையும் எங்களுக்கு வெளிப்படையாகச் சொல்வார்” என்றாள். 26  அதற்கு இயேசு, “உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நான்தான் அவர்”+ என்று சொன்னார். 27  அந்தச் சமயத்தில் அவருடைய சீஷர்கள் திரும்பி வந்தார்கள், அவர் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், “என்ன வேண்டும்?” என்றோ “அவளோடு ஏன் பேசுகிறீர்கள்?” என்றோ யாரும் அவரிடம் கேட்கவில்லை. 28  பின்பு, அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் ஜாடியை வைத்துவிட்டு, நகரத்துக்குள் போய் அங்கிருந்த மக்களிடம், 29  “நான் செய்த எல்லாவற்றையும் ஒருவர் என்னிடம் சொன்னார்; அவரை வந்து பாருங்கள். அவர் கிறிஸ்துவாக இருப்பாரோ?” என்றாள். 30  அதனால், அவர்கள் நகரத்திலிருந்து புறப்பட்டு அவரிடம் வர ஆரம்பித்தார்கள். 31  இதற்கிடையே அவருடைய சீஷர்கள், “ரபீ,+ சாப்பிடுங்கள்” என்று அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 32  ஆனால் அவர், “உங்களுக்குத் தெரியாத ஒரு உணவு என்னிடம் இருக்கிறது” என்று சொன்னார். 33  அப்போது சீஷர்கள், “யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருப்பார்களோ?” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 34  இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி* செய்து+ அவருடைய வேலையை முடிப்பதே+ என்னுடைய உணவாக இருக்கிறது. 35  அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறதென்று நீங்கள் சொல்வதில்லையா? இதோ! நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன.+ 36  அறுவடை செய்கிறவர் ஏற்கெனவே கூலியை வாங்கிக்கொண்டு, முடிவில்லாத வாழ்வுக்காகப் பயிர்களைச் சேகரித்து வருகிறார். இதனால், விதைக்கிறவரும் அறுவடை செய்கிறவரும் ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுகிறார்கள்.+ 37  விதைக்கிறவர் ஒருவர், அறுவடை செய்கிறவர் வேறொருவர் என்ற பழமொழி இந்த விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. 38  நீங்கள் பாடுபட்டு பயிர் செய்யாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள், அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்களும் அனுபவித்துவருகிறீர்கள்” என்று சொன்னார். 39  “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொன்னார்”+ என்று சாட்சி சொன்ன பெண்ணின் வார்த்தையைக் கேட்டு, அந்த நகரத்திலிருந்த சமாரியர்கள் நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள். 40  அதனால் அந்தச் சமாரியர்கள் அவரிடம் வந்து, தங்களோடு தங்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். 41  இதன் விளைவாக, இன்னும் நிறைய பேர் அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள். 42  அந்தப் பெண்ணிடம் அவர்கள், “நீ சொன்னதை வைத்து நாங்கள் இனி நம்ப வேண்டியதில்லை, நாங்களே அவர் பேசியதைக் கேட்டோம்; நிச்சயமாக அவர்தான் இந்த உலகத்தின் மீட்பர் என்று தெரிந்துகொண்டோம்”+ என்றார்கள். 43  அந்த இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் கலிலேயாவுக்குப் புறப்பட்டார். 44  ஆனாலும், ஒரு தீர்க்கதரிசிக்குத் தன்னுடைய சொந்த தேசத்தில் மதிப்பில்லை என்று இயேசுவே சொல்லியிருந்தார்.+ 45  அவர் கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். ஏனென்றால், பண்டிகைக்காக எருசலேமுக்கு அவர்கள் போயிருந்தபோது+ அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்தார்கள்.+ 46  பின்பு, கலிலேயாவில் இருந்த கானா ஊருக்கு அவர் மறுபடியும் வந்தார். அங்கேதான் முன்பு தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றியிருந்தார்.+ அவர் வந்த சமயத்தில், ஓர் அரசு அதிகாரியின் மகன் கப்பர்நகூமில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். 47  இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்பதை அந்த அதிகாரி கேள்விப்பட்டு அவரிடம் போனார், சாகக்கிடந்த தன் மகனைக் குணப்படுத்த வரும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். 48  இயேசு அவரிடம், “நீங்கள் எல்லாரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்தால் தவிர ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்”+ என்று சொன்னார். 49  அந்த அரசு அதிகாரி அவரிடம், “எஜமானே, என்னுடைய பிள்ளை சாவதற்கு முன்பு என் வீட்டுக்கு வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். 50  அதற்கு இயேசு, “நீ புறப்பட்டுப் போ, உன்னுடைய மகன் பிழைத்துக்கொண்டான்”+ என்று சொன்னார். இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். 51  அவர் போய்க்கொண்டிருந்தபோதே அவருடைய வேலைக்காரர்கள் அவர் எதிரில் வந்து, அவருடைய மகன் பிழைத்துக்கொண்டதாக* சொன்னார்கள். 52  அவன் எந்த நேரத்தில் குணமடைந்தான் என்று அவர்களிடம் விசாரித்தார். அதற்கு அவர்கள், “நேற்று ஏழாம் மணிநேரத்தில்* அவனுக்குக் காய்ச்சல் விட்டது” என்று சொன்னார்கள். 53  சரியாக அதே மணிநேரத்தில்தான், “உன்னுடைய மகன் பிழைத்துக்கொண்டான்”+ என்று இயேசு சொல்லியிருந்ததை அவர் நினைத்துப் பார்த்தார். அதன் பின்பு, அவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள். 54  இதுதான் இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபோது செய்த இரண்டாவது அற்புதம்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “நீரூற்று.”
அதாவது, “மதியம் சுமார் 12 மணியாக.”
அதாவது, “பரலோகத்துக்குரிய உடலில்.”
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “குணமாகி வருவதாக.”
அதாவது, “பிற்பகல் சுமார் 1 மணிக்கு.”