உபாகமம் 1:1-46
1 யோர்தான் பகுதிக்குப் பக்கத்திலுள்ள வனாந்தரத்தில், சூபுக்கு எதிரிலும் பாரான், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாப் ஆகியவற்றுக்கு இடையிலும் உள்ள பாலைநிலத்தில் இஸ்ரவேலர்கள் இருந்தபோது, மோசே அவர்கள் எல்லாரிடமும் சொன்ன விஷயங்கள்தான் இவை.
2 ஓரேபிலிருந்து சேயீர் மலைப்பகுதியின் வழியாக காதேஸ்-பர்னேயாவுக்குப்+ போக 11 நாட்கள் ஆகும்.
3 40-ஆம் வருஷம்,+ 11-ஆம் மாதம், முதலாம் நாளில், இஸ்ரவேலர்களுக்காக யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே அவர்களுக்குச் சொன்னார்.
4 அதாவது, எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவான சீகோனைத் தோற்கடித்த பின்பும்,+ அஸ்தரோத்தில் வாழ்ந்துவந்த பாசானின் ராஜாவான ஓகை+ எத்ரேயில்+ தோற்கடித்த பின்பும்* அவற்றைச் சொன்னார்.
5 மோவாப் தேசத்திலுள்ள யோர்தான் பிரதேசத்தில் இந்தத் திருச்சட்டத்தை மோசே விளக்கிச் சொன்னார்.+ அப்போது அவர்,
6 “ஓரேபில் நம் கடவுளாகிய யெகோவா நம்மிடம், ‘இந்த மலைப்பகுதியில் நீங்கள் ரொம்பக் காலம் தங்கிவிட்டீர்கள்.+
7 இப்போது நீங்கள் திரும்பி, எமோரியர்களின்+ மலைப்பகுதிக்கும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள அரபாவுக்கும்+ மத்திய மலைப்பகுதிக்கும் சேப்பெல்லாவுக்கும் நெகேபுக்கும் கடலோரப் பகுதிக்கும்+ போங்கள். கானானியர்களின் தேசத்துக்கும் போங்கள். லீபனோன்*+ வரைக்கும், பெரிய ஆறாகிய யூப்ரடிஸ்*+ வரைக்கும் போங்கள்.
8 இதோ, அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களுடைய முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும்+ யாக்கோபுக்கும்+ அவர்களுடைய சந்ததிக்கும்+ தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.
9 அந்தச் சமயத்தில் நான் உங்களிடம், ‘இனி என்னால் தனியாளாக உங்களைக் கவனித்துக்கொள்ள முடியாது.+
10 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார். நீங்கள் இப்போது வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ண முடியாதளவுக்கு இருக்கிறீர்கள்.+
11 உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவா உங்களை இதைவிட 1,000 மடங்கு பெருக வைக்கட்டும்,+ அவர் கொடுத்த வாக்கின்படியே உங்களை ஆசீர்வதிக்கட்டும்.+
12 ஆனால், நான் ஒருவனே எப்படி உங்கள் எல்லாரையும் கவனித்துக்கொள்ள முடியும்? நான் ஒருவனே எப்படி உங்களுடைய பிரச்சினைகளையும் வாக்குவாதங்களையும் தீர்த்துவைக்க முடியும்?+
13 அதனால், ஞானமும் விவேகமும் அனுபவமும் உள்ள ஆண்களை உங்களுடைய கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக நியமிப்பேன்’+ என்று சொன்னேன்.
14 அதற்கு நீங்கள் என்னிடம், ‘உங்களுடைய ஆலோசனை நல்ல ஆலோசனை’ என்று சொன்னீர்கள்.
15 அதனால், ஞானமும் அனுபவமும் உள்ள உங்களுடைய கோத்திரத் தலைவர்களை 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தேன்.+
16 அந்தச் சமயத்தில் நான் உங்களுடைய நியாயாதிபதிகளிடம், ‘நீங்கள் வழக்கு விசாரிக்கும்போது, அது இஸ்ரவேலனுக்கும் இஸ்ரவேலனுக்கும் இடையே இருந்தாலும் சரி, இஸ்ரவேலனுக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்தவனுக்கும் இடையே இருந்தாலும் சரி,+ நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்.+
17 நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டக் கூடாது.+ செல்வாக்குள்ள மனுஷனின் நியாயத்தைக் கேட்பது போலவே சாதாரண மனுஷனின் நியாயத்தையும் கேட்க வேண்டும்.+ மனுஷர்களுக்குப் பயப்படாதீர்கள்,+ ஏனென்றால் நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்.+ ஒரு வழக்கைத் தீர்ப்பது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தால், அதை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை விசாரிப்பேன்’+ என்று சொன்னேன்.
18 நீங்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அப்போது நான் உங்களுக்குச் சொன்னேன்.
19 பின்பு, நம் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைப்படி, ஓரேபிலிருந்து புறப்பட்டு பயங்கரமான பெரிய வனாந்தரம் வழியாகப் போனோம்.+ எமோரியர்களின் மலைப்பகுதிக்குப் போகும் வழியில் அந்த வனாந்தரத்தை நீங்கள் பார்த்தீர்களே.+ கடைசியில் காதேஸ்-பர்னேயாவுக்கு வந்துசேர்ந்தோம்.+
20 அப்போது நான் உங்களிடம், ‘நம் கடவுளாகிய யெகோவா கொடுக்கப்போகிற எமோரியர்களின் மலைப்பகுதிக்கு நீங்கள் வந்துசேர்ந்திருக்கிறீர்கள்.
21 இதோ, உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தத் தேசத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.+ பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்’ என்று சொன்னேன்.
22 ஆனால், நீங்கள் எல்லாரும் என்னிடம் வந்து, ‘அந்தத் தேசத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு நாம் ஆட்களை அனுப்பலாம். நாம் எந்த வழியாகப் போக வேண்டும், எப்படிப்பட்ட நகரங்களைத் தாண்டிப் போக வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் பார்த்துவிட்டு வந்து நமக்குச் சொல்லட்டும்’+ என்று சொன்னீர்கள்.
23 அந்த ஆலோசனை எனக்கு நல்லதாகப் பட்டது. அதனால், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவர் என்று 12 ஆண்களைத் தேர்ந்தெடுத்தேன்.+
24 அவர்கள் புறப்பட்டு மலைப்பகுதிக்குப் போய்,+ எஸ்கோல் பள்ளத்தாக்கை* அடைந்து, அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள்.
25 அங்கு விளைந்த பழங்களில் சிலவற்றைச் சுமந்துகொண்டு வந்தார்கள். அதோடு, ‘நம் கடவுளாகிய யெகோவா நமக்குக் கொடுக்கப்போகிற தேசம் நல்ல தேசம்’+ என்று சொன்னார்கள்.
26 ஆனால், நீங்கள் அங்கு போக விரும்பவில்லை, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+
27 உங்களுடைய கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தீர்கள். ‘யெகோவா நம்மை வெறுக்கிறார், நம்மை எமோரியர்களின் கையில் சிக்க வைத்து அழிப்பதற்காகத்தான் எகிப்திலிருந்து கொண்டுவந்திருக்கிறார்.
28 நாம் போகப்போகிற இடம் எப்படி இருக்குமோ? அதைப் பார்த்துவிட்டு வந்த நம் சகோதரர்கள், “அங்கிருக்கிற ஆட்கள் நம்மைவிட பலசாலிகள், உயரமானவர்கள். அவர்களுடைய நகரங்கள் ரொம்பவே பெரியதாக இருக்கின்றன. அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு உயரமாக இருக்கின்றன.+ அங்கே நாங்கள் ஏனாக்கியர்களைப்+ பார்த்தோம்” என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்புகிறார்களே’+ என்று புலம்பினீர்கள்.
29 அப்போது நான் உங்களிடம், ‘அவர்களை நினைத்துத் திகிலடையாதீர்கள், பயப்படாதீர்கள்.+
30 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே+ எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.+
31 வனாந்தரத்தில் நீங்கள் நடந்துவந்தபோது, ஒரு அப்பா தன் பிள்ளையைத் தூக்கிச் சுமப்பது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வழியெல்லாம் தூக்கிச் சுமந்து இந்த இடத்துக்குக் கொண்டுவந்ததை நீங்கள் பார்த்தீர்களே’ என்று சொன்னேன்.
32 இப்படியெல்லாம் நடந்தும், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் விசுவாசம் வைக்கவில்லை.+
33 நீங்கள் முகாம்போட வேண்டிய இடத்தைப் பார்த்துச் சொல்வதற்காக* அவர் உங்களுக்கு முன்னால் போனாரே. ராத்திரியில் நெருப்பின் மூலமாகவும் பகலில் மேகத்தின் மூலமாகவும் உங்களுக்கு வழிகாட்டினாரே.+
34 இப்படி நீங்கள் முணுமுணுத்துக்கொண்டே இருந்ததை யெகோவா கேட்டார். அதனால், அவர் பயங்கர கோபத்தோடு,
35 ‘உங்கள் முன்னோர்களுக்குத் தருவதாக நான் வாக்குக் கொடுத்த நல்ல தேசத்தை இந்தக் கெட்ட தலைமுறையைச் சேர்ந்த ஒருவர்கூட பார்க்கப் போவதில்லை.+
36 எப்புன்னேயின் மகன் காலேப் மட்டும்தான் அதைப் பார்ப்பான். யெகோவாவாகிய எனக்கு அவன் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் அவனுடைய காலடி பட்ட இடத்தை அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் கொடுப்பேன்.+
37 (உங்களால் யெகோவா என்மேலும் கோபப்பட்டு, “நீயும்கூட அங்கே போக மாட்டாய்.+
38 உன் ஊழியனும் நூனின் மகனுமாகிய யோசுவாதான்+ அந்தத் தேசத்துக்குப் போவான்.+ அவனுக்குத் தைரியம் கொடு,*+ ஏனென்றால் இஸ்ரவேலர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் உதவுவான்” என்றார்.)
39 உங்கள் பிள்ளைகளை அந்தத் தேசத்தார் பிடித்து வைத்துக்கொள்வார்கள் என்று சொன்னீர்களே,+ இன்றைக்கு நல்லது கெட்டது தெரியாமல் இருக்கிற அந்தப் பிள்ளைகள்தான் அங்கே போவார்கள். அவர்களுக்கு நான் அந்தத் தேசத்தைத் தருவேன், அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
40 ஆனால், நீங்கள் இங்கிருந்து திரும்பி, செங்கடலுக்குப் போகும் வழியாக வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப் போக வேண்டும்’+ என்று ஆணையிட்டுச் சொல்லிவிட்டார்.+
41 அதற்கு நீங்கள் என்னிடம், ‘நாங்கள் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோம். எங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே இப்போது போய்ப் போர் செய்கிறோம்’ என்று சொன்னீர்கள். பின்பு, நீங்கள் ஒவ்வொருவரும் போர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டீர்கள். மலைமேல் ஏறிப்போய் அவர்களைச் சுலபமாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்தீர்கள்.+
42 ஆனால் யெகோவா என்னிடம், ‘நீ இஸ்ரவேலர்களைப் பார்த்து, “நீங்கள் போய்ப் போர் செய்யக் கூடாது. நான் உங்களோடு இருக்க மாட்டேன்.+ என் பேச்சை மீறி நீங்கள் போனால், எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்” என்று சொல்’ என்றார்.
43 அதை நான் உங்களிடம் சொன்னேன், ஆனால் நீங்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள். அகங்காரத்தோடு* மலைமேல் ஏறிப் போனீர்கள்.
44 அப்போது, அந்த மலையில் வாழ்ந்துவந்த எமோரியர்கள் உங்களுக்கு எதிராக வந்து, தேனீக்கள் துரத்துவதைப் போல உங்களை சேயீருக்குத் துரத்தியடித்தார்கள். ஓர்மா வரைக்கும் உங்களைச் சிதறிப்போக வைத்தார்கள்.
45 அதனால், நீங்கள் திரும்பி வந்து யெகோவாவின் முன்னால் புலம்பி அழுதீர்கள். அதை யெகோவா கேட்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை.
46 அதனால்தான், காதேசில் நீங்கள் பல நாட்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தது” என்றார்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்துவந்த பாசானின் ராஜாவான ஓகை வீழ்த்திய பின்பும்.”
^ அதாவது, “ஐப்பிராத்து.”
^ அநேகமாக, “லீபனோன் மலைத்தொடர்.”
^ அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”
^ வே.வா., “உளவு பார்ப்பதற்காக.”
^ அல்லது, “கடவுள் அவனைப் பலப்படுத்தியிருக்கிறார்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.