கதை 66
யேசபேல்—ஒரு பொல்லாத ராணி
யெரொபெயாம் ராஜா இறந்த பின், இந்த 10 கோத்திர வடக்கு ராஜ்யத்தை ஆளுகிற ஒவ்வொரு ராஜாவும் கெட்டவனாக இருக்கிறான். அவர்கள் எல்லோரையும்விட ஆகாப் என்ற ராஜா படு மோசமானவனாக இருக்கிறான். ஏன் என்று உனக்குத் தெரியுமா? அவனுடைய பொல்லாத மனைவியான யேசபேல் ராணிதான் அதற்கு முக்கிய காரணம்.
யேசபேல் ராணி இஸ்ரவேல் பெண் அல்ல. அவள் சீதோன் ராஜாவின் மகள். பொய்க் கடவுளான பாகாலை வணங்குபவள், ஆகாபையும் இஸ்ரவேலர் பலரையும்கூட அந்தப் பொய்க் கடவுளை வணங்கும்படி செய்கிறாள். யெகோவாவை யேசபேல் வெறுக்கிறாள், அவருடைய தீர்க்கதரிசிகள் பலரைக் கொன்று போடுகிறாள். அவளுக்குப் பயந்து மற்ற தீர்க்கதரிசிகள் குகைகளில் மறைந்துகொள்கிறார்கள். தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் ஒருவரைக் கொலை செய்யக்கூட அவள் தயங்க மாட்டாள்.
ஒருநாள் ஆகாப் ராஜா ரொம்பவும் சோகமாக இருக்கிறான். அதனால் யேசபேல்: ‘நீர் ஏன் இன்று சோகமாக இருக்கிறீர்?’ என்று கேட்கிறாள்.
‘நாபோத் என்பவனுடைய திராட்சத் தோட்டத்தை வாங்கிக்கொள்ள விரும்பினேன். ஆனால் அவன் அதைத் தர முடியாது என்று சொல்லிவிட்டான். அதனால்தான் சோகமாக இருக்கிறேன்’ என்று சொல்கிறான்.
‘கவலைப்படாதீர், நான் அதை உமக்கு வாங்கித் தருகிறேன்’ என்று யேசபேல் சொல்கிறாள்.
அதனால், நாபோத் வாழ்கிற பட்டணத்திலுள்ள சில முக்கிய ஆட்களுக்கு யேசபேல் கடிதங்களை அனுப்புகிறாள். ‘ஒன்றுக்கும் உதவாத மனிதர் சிலரை அழையுங்கள். கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்தான் என்று அவர்களை சொல்லச் சொல்லுங்கள். அதன் பிறகு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்’ என்று அவற்றில் எழுதுகிறாள்.
அவ்வாறே நடக்கிறது. நாபோத் செத்துவிட்டான் என்ற செய்தி யேசபேலுக்குத் தெரிய வந்தவுடனே, அவள் ஆகாபிடம்: ‘இப்போது நீர் போய் அவனுடைய திராட்சத் தோட்டத்தை எடுத்துக் கொள்ளும்’ என்று சொல்கிறாள். இப்படிப்பட்ட ஒரு பயங்கர காரியத்தைச் செய்ததற்காக யேசபேல் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் இல்லையா?
எனவே, தக்க சமயத்தில் அவளைத் தண்டிக்க யெகூ என்பவரை யெகோவா அனுப்புகிறார். யெகூ வருகிறார் என்று கேள்விப்பட்டதும் யேசபேல் தன் கண்களுக்கு மை பூசி, அலங்காரம் செய்து தன்னை அழகாக காட்டிக்கொள்ள முயலுகிறாள். யேசபேல் ஜன்னல் அருகில் நிற்பதை வரும் வழியிலேயே யெகூ பார்க்கிறார். அப்போது அந்த அரண்மனையிலுள்ள ஆட்களிடம்: ‘அவளைக் கீழே தூக்கிப் போடுங்கள்’ என்று உரக்க சொல்கிறார். இந்தப் படத்தில் நீ பார்க்கிறபடி, அந்த ஆட்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து ஜன்னல் வழியே அவளைத் தூக்கிப் போடுகிறார்கள். அவள் கீழே விழுந்து செத்துப் போகிறாள். பொல்லாத ராணி யேசபேலுக்கு ஏற்பட்ட முடிவு இதுதான்.