அதிகாரம் 27
மத்தேயுவைக் கூப்பிடுகிறார்
மத்தேயு 9:9-13 மாற்கு 2:13-17 லூக்கா 5:27-32
-
வரி வசூலிப்பவரான மத்தேயுவை இயேசு கூப்பிடுகிறார்
-
பாவிகளுக்கு உதவி செய்வதற்காக இயேசு அவர்களோடு பழகுகிறார்
பக்கவாத நோயாளியைக் குணமாக்கிய பிறகு, கலிலேயா கடலோரமாக இருக்கிற கப்பர்நகூம் பகுதியிலேயே கொஞ்சக் காலத்துக்கு இயேசு தங்குகிறார். மறுபடியும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வருகிறார்கள். அவர்களுக்கு இயேசு கற்றுக்கொடுக்கிறார். அவர் நடந்து போகும்போது, வரி வசூலிக்கிற அலுவலகத்தில் மத்தேயுவைப் பார்க்கிறார். அவருக்கு லேவி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. இயேசு அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொல்லிக் கூப்பிடுகிறார். இது ஒரு அருமையான வாய்ப்பு!—மத்தேயு 9:9.
பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவானைப் போலவே மத்தேயுவும் இயேசுவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கலாம். அதனால், அவர்களைப் போலவே மத்தேயுவும் உடனடியாக முடிவு எடுக்கிறார். “உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார்” என்று மத்தேயு சுவிசேஷம் சொல்கிறது. (மத்தேயு 9:9) இப்படி, வரி வசூலிக்கிற வேலையை விட்டுவிட்டு, அவர் இயேசுவின் சீஷராக ஆகிறார்.
பிற்பாடு, மத்தேயு தன் வீட்டில் ஒரு பெரிய விருந்து வைக்கிறார். ஒருவேளை, இயேசு தன்னை அழைத்ததற்கு நன்றி காட்டுவதற்காக இதை ஏற்பாடு செய்திருக்கலாம். இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் தவிர வேறு யாரெல்லாம் அங்கே வந்திருக்கிறார்கள்? மத்தேயுவுடன் முன்பு வேலை செய்த வரி வசூலிக்கிறவர்கள் நிறைய பேர் அங்கே வந்திருக்கிறார்கள். மக்களால் வெறுக்கப்பட்ட ரோம அதிகாரிகளுக்காக இவர்கள் வரி வசூலித்தார்கள். துறைமுகத்துக்கு வருகிற கப்பல்களுக்கும் இறக்குமதி செய்யப்படுகிற பொருள்களுக்கும் இவர்கள் வரி வசூலித்தார்கள். நெடுஞ்சாலை வழியாகப் பயணம் செய்கிற வியாபாரிகளிடமும் வரி வசூலித்தார்கள். பொதுவாக, யூதர்கள் இவர்களை வெறுத்தார்கள். ஏனென்றால், இவர்கள் பெரும்பாலும் அநியாயமாக வரி வசூலித்து மக்களை ஏமாற்றினார்கள். ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்கிற ‘பாவிகளும்’ அந்த விருந்துக்கு வந்திருக்கிறார்கள்.—லூக்கா 7:37-39.
தங்களை நீதிமான்களாக நினைத்துக்கொள்கிற பரிசேயர்களும் அங்கே இருக்கிறார்கள். வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் இயேசு சாப்பிடுவதைப் பார்த்து, “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று அவருடைய சீஷர்களிடம் கேட்கிறார்கள். (மத்தேயு 9:11) அது இயேசுவின் காதில் விழுகிறது. அதனால் அவர்களிடம், “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொல்கிறார். (மத்தேயு 9:12, 13; ஓசியா 6:6) அந்தப் பரிசேயர்கள் இயேசுவை “போதகர்” என்று வாயளவில்தான் சொல்கிறார்கள். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் எண்ணம் அவர்களுக்குத் துளிகூட இல்லை.
மத்தேயு ஏன் வரி வசூலிக்கிறவர்களையும் பாவிகளையும் விருந்துக்குக் கூப்பிட்டிருக்கிறார்? ஒருவேளை, அவர்கள் இயேசு சொல்வதைக் கேட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும், கடவுளிடம் திரும்பி வர வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். அதனால்தான், இயேசுவை “பின்பற்றிய நிறைய பேர் அங்கே இருந்தார்கள்.” (மாற்கு 2:15) கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார். தங்களை நீதிமான்களாக நினைத்துக்கொண்ட பரிசேயர்களைப் போல, இயேசு அவர்களை வெறுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களிடம் கரிசனையும் இரக்கமும் காட்டுகிறார். நோயாளி குணமாவதற்கு ஒரு மருத்துவர் உதவி செய்வதுபோல, கடவுளை விட்டு விலகியவர்கள் அவரிடம் திரும்பிவர இயேசு உதவி செய்கிறார்.
இயேசு அவர்களிடம் இரக்கம் காட்டியதால், அவர்கள் பாவம் செய்வதை அவர் ஆதரிக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. அவர்கள் ஆன்மீக விதத்தில் நோயாளிகளாக இருக்கிறார்கள். அதனால் மற்ற நோயாளிகளிடம் காட்டிய அதே இரக்கத்தை அவர்களிடமும் காட்ட வேண்டும் என்று இயேசு நினைக்கிறார். உதாரணமாக, ஒரு தொழுநோயாளியைக் கரிசனையோடு தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று அவர் சொன்னதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (மத்தேயு 8:3) யாருக்காவது உதவி தேவைப்பட்டால், இயேசுவைப் போல நாமும் இரக்கத்தோடு உதவி செய்வோமா? அதுவும், ஆன்மீக விஷயங்களில் உதவி செய்வோமா?