அதிகாரம் 58
அற்புதமாக உணவளிக்கிறார், புளித்த மாவைப் பற்றி எச்சரிக்கிறார்
மத்தேயு 15:32–16:12 மாற்கு 8:1-21
-
4,000 ஆண்களுக்கு இயேசு உணவளிக்கிறார்
-
பரிசேயர்களின் புளித்த மாவைப் பற்றி எச்சரிக்கிறார்
கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் உள்ள தெக்கப்போலிக்கு இயேசு வந்திருக்கிறார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வருகிறார்கள். பெரிய பெரிய கூடைகளில் உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டு, அவருடைய போதனையைக் கேட்பதற்காகவும், குணமாவதற்காகவும் அவரிடம் வருகிறார்கள்.
பிற்பாடு இயேசு தன் சீஷர்களிடம், “இந்த மக்களைப் பார்க்கும்போது என் மனம் உருகுகிறது; இவர்கள் மூன்று நாட்களாக என்னோடு இருக்கிறார்கள், சாப்பிடுவதற்கும் இவர்களிடம் ஒன்றுமே இல்லை. இவர்களை நான் பட்டினியாக வீட்டுக்கு அனுப்பிவிட்டால், போகிற வழியிலேயே மயங்கி விழுந்துவிடுவார்கள். அதுவும் இவர்களில் சிலர் ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்” என்று சொல்கிறார். அதற்கு அவருடைய சீஷர்கள், “ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் இந்த மக்களுக்குத் தேவையான ரொட்டிகளை எங்கிருந்து வாங்க முடியும்?” என்று கேட்கிறார்கள்.—மாற்கு 8:2-4.
அப்போது இயேசு, “உங்களிடம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “ஏழு ரொட்டிகளும் சில சிறிய மீன்களும் இருக்கின்றன” என்று சொல்கிறார்கள். (மத்தேயு 15:34) இயேசு எல்லாரையும் தரையில் உட்காரும்படி சொல்கிறார். ரொட்டிகளையும் மீன்களையும் எடுத்து, ஜெபம் செய்கிறார். பிறகு அவற்றைத் தன் சீஷர்களிடம் கொடுத்து பரிமாறும்படி சொல்கிறார். எல்லாரும் திருப்தியாகச் சாப்பிடுகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு அற்புதம்தான்! பிறகு, மீதியானதை ஏழு பெரிய கூடைகளில் சேகரிக்கிறார்கள். இத்தனைக்கும், பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, 4,000 ஆண்கள் சாப்பிட்டிருந்தார்கள்!
இதற்குப் பிறகு, அந்த மக்களை இயேசு அனுப்பிவிடுகிறார். அவரும் அவருடைய சீஷர்களும் படகில் ஏறி, கலிலேயா கடலின் மேற்குக் கரையில் இருக்கிற மக்தலா என்ற இடத்துக்குப் போகிறார்கள். பரிசேயர்களும் சதுசேயப் பிரிவைச் சேர்ந்த சிலரும் இயேசுவைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்கிறார்கள்.
அவர்களுடைய உள்நோக்கத்தை இயேசு புரிந்துகொள்கிறார். அதனால், “சாயங்கால நேரத்தில், ‘வானம் சிவந்திருக்கிறது, அதனால் வானிலை நன்றாக இருக்கும்’ என்று சொல்கிறீர்கள்; காலை நேரத்தில், ‘வானம் சிவந்து மேகமூட்டமாக இருக்கிறது, இன்றைக்குக் காற்றுடன்கூடிய மழை வரும்’ என்று சொல்கிறீர்கள். வானத்தைப் பார்த்து வானிலை எப்படி இருக்குமென்று உங்களால் சொல்ல முடிகிறது, ஆனால் காலங்களின் அடையாளங்களைப் பார்த்து உங்களால் அர்த்தம் சொல்ல முடியவில்லை” என்று சொல்கிறார். (மத்தேயு 16:2, 3) பிறகு, யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளமும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது என்று இயேசு அவர்களிடம் சொல்கிறார்.
இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகில் ஏறி, கலிலேயா கடலின் வடகிழக்கு கரையில் இருக்கிற பெத்சாயிதாவை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். தேவையான அளவு ரொட்டிகளை எடுத்துக்கொண்டு வரவில்லை என்ற விஷயம் வழியில்தான் சீஷர்களுக்கு ஞாபகம் வருகிறது. இப்போது அவர்களிடம் ஒரேவொரு ரொட்டிதான் இருக்கிறது. பரிசேயர்களிடமும் ஏரோதுவை ஆதரிக்கிற சதுசேயர்களிடமும் சமீபத்தில் பேசியதை மனதில் வைத்து, “பரிசேயர்களுடைய புளித்த மாவையும் ஏரோதுவுடைய புளித்த மாவையும் குறித்து ஜாக்கிரதையாகவும் விழிப்பாகவும் இருங்கள்” என்று இயேசு எச்சரிக்கிறார். ரொட்டியை எடுத்துக்கொண்டு வர மறந்ததைப் பற்றித்தான் இயேசு சொல்கிறார் என்று சீஷர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இயேசு இதைப் பார்த்து, “ரொட்டியை எடுத்துக்கொண்டு வராததற்காக ஏன் இப்படி மாற்கு 8:15-17.
வாக்குவாதம் செய்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.—இயேசு அப்போதுதான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவளித்திருந்தார். அதனால், ரொட்டிகளைக் கொண்டுவராததைப் பற்றி இயேசு கவலைப்பட மாட்டார் என்பது அந்தச் சீஷர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “உங்களுக்கு ஞாபகமில்லையா, நான் ஐந்து ரொட்டிகளைப் பிட்டு 5,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய சேகரித்தீர்கள்?” என்று இயேசு கேட்கிறார். அதற்கு அவர்கள், “பன்னிரண்டு” என்று சொல்கிறார்கள். அப்போது அவர், “நான் ஏழு ரொட்டிகளைப் பிட்டு 4,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை பெரிய கூடைகள் நிறைய சேகரித்தீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “ஏழு” என்று சொல்கிறார்கள்.—மாற்கு 8:18-20.
“நான் ரொட்டிகளைப் பற்றிப் பேசவில்லை என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை?” என்று இயேசு கேட்கிறார். பிறகு, “பரிசேயர்கள் சதுசேயர்களுடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 16:11.
இப்போதுதான் சீஷர்களுக்கு விஷயம் புரிகிறது. மாவைப் புளிக்க வைப்பதற்கும், ரொட்டியை உப்ப வைப்பதற்கும், ரொட்டி செய்கிற மாவில் கொஞ்சம் புளித்த மாவைச் சேர்ப்பார்கள். ஆனால், கெட்டுப்போவதற்கு அடையாளமாகப் புளித்தமாவை இயேசு இங்கே குறிப்பிடுகிறார். மற்றவர்களைக் கெட்டுப்போக வைக்கிற “பரிசேயர்கள் சதுசேயர்களுடைய போதனையை” குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய சீஷர்களை எச்சரிக்கிறார்.—மத்தேயு 16:12.