Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த யோவன்னாள் யார்?

இந்த யோவன்னாள் யார்?

இயேசுவுக்கு 12 அப்போஸ்தலர்கள் இருந்தார்கள் என்று நிறைய பேருக்குத் தெரியும். ஆனால், அவரைப் பின்பற்றியவர்களில் சில பெண்களும் இருந்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் யோவன்னாள்.—மத். 27:55; லூக். 8:3.

இயேசுவின் ஊழியத்துக்கு யோவன்னாள் எப்படியெல்லாம் உதவி செய்தார்? யோவன்னாளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

யோவன்னாள் யார்?

கூசா என்பவர், ‘ஏரோதுவின் அரண்மனை மேற்பார்வையாளராக’ இருந்தார். ஏரோது அந்திப்பாவுடைய வீட்டு வேலைகளை எல்லாம் கவனித்துக்கொள்ளும் நிர்வாகியாக இவர் இருந்திருக்கலாம். இவருடைய மனைவிதான் யோவன்னாள். இயேசு குணப்படுத்திய பெண்களில் யோவன்னாளும் ஒருவர். இயேசுவும் அவருடைய 12 சீடர்களும் பயணம் செய்தபோது, யோவன்னாளும் மற்ற பெண்களும் அவர்களோடு போனார்கள்.—லூக். 8:1-3.

பெண்கள் அவர்களுடைய சொந்தக்காரர்களாக இல்லாத ஆண்களிடம் பேசவோ பழகவோ கூடாது என்று அன்றிருந்த யூத ரபீக்கள் சொன்னார்கள். அப்படியென்றால், அவர்கள் ஆண்களோடு பயணம் செய்வதைப் பற்றி சொல்லவே வேண்டாம்! பொதுவாக, யூத ஆண்கள் பெண்களிடம் பேசவே யோசிப்பார்கள். இந்த மாதிரியான பாரம்பரியங்களைப் பற்றியெல்லாம் இயேசு கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. இயேசு அவருடைய சீடர்களோடு யோவன்னாளையும் அவர்மீது விசுவாசம் வைத்த மற்ற பெண்களையும் அழைத்துக்கொண்டு போனார்.

இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பழகினால் மதத் தலைவர்கள், குடும்பத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் எல்லாம் என்ன சொல்வார்கள் என்று யோவன்னாள் கவலைப்படவில்லை. இயேசுவைப் பின்பற்றிய எல்லாரும் அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய தயராக இருந்தார்கள். அதனால்தான், “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்கிற இவர்களே என் தாய், இவர்களே என் சகோதரர்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 8:19-21; 18:28-30) இப்படித் தியாகங்கள் செய்தவர்களை இயேசு ரொம்பவே நேசித்தார். இதைப் படிக்கும்போது, உங்களுக்கு உற்சாகமாக இல்லையா?

‘உடமைகளைக் கொண்டு பணிவிடை செய்தார்’

யோவன்னாளும் மற்ற பெண்களும், “தங்களுடைய உடமைகளைக் கொண்டு” இயேசுவுக்கும் 12 சீடர்களுக்கும் சேவை செய்தார்கள். (லூக். 8:3) இதைப் பற்றி ஒரு எழுத்தாளர் இப்படி சொல்கிறார்: “பெண்கள் சமைத்துக்கொண்டு, பாத்திரம் கழுவிக்கொண்டு, துணி தைத்துக்கொண்டு இருந்தார்கள் என்று லூக்கா சொல்லவில்லை. ஒருவேளை, அவர்கள் அதை எல்லாம் செய்திருக்கலாம் . . . ஆனால், லூக்கா அதைப் பற்றி பேசவில்லை.” பெண்கள் அவர்களிடம் இருந்த பணம், பொருள், சொத்துக்களை எல்லாம் அவர்களோடு இருந்தவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தி இருக்கலாம்.

இயேசுவும் அவருடைய சீடர்களும் பிரசங்கிப்பதற்காக நிறைய ஊர்களுக்குப் போனார்கள். அவர்கள் மொத்தம் 20 பேர் இருந்திருக்கலாம். செலவுகளை சமாளிக்க அவர்கள் எந்த வேலைக்கும் போகவில்லை. அதனால், சாப்பாட்டுக்கும் மற்ற தேவைகளுக்கும் அவர்களிடம் போதுமான பணம் இருக்கவில்லை. மற்றவர்கள் அவர்களை உபசரித்தார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும் அவர்களையே நம்பி இருக்காமல், இயேசுவும் அவருடைய 12 சீடர்களும் எப்போதும் ‘பணப்பெட்டியை’ வைத்திருந்தார்கள். (யோவா. 12:6; 13:28, 29) யோவன்னாளும் மற்ற பெண்களும்கூட இவர்களுடைய செலவுகளுக்காகப் பண உதவி செய்திருக்கலாம்.

ஒரு யூத பெண்ணுக்குப் பணமோ சொத்தோ எப்படி இருக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு சொத்தும் பணமும் எப்படிக் கிடைத்திருக்கலாம் என்று இன்றிருக்கும் சில புத்தகங்கள் காட்டுகின்றன: (1) மகன்கள் இல்லாமல் அப்பா இறக்கும்போது, ஒரு பெண்ணுக்கு சொத்து கிடைத்திருக்கலாம், (2) யாராவது சொத்து கொடுத்திருக்கலாம், (3) விவாகரத்து ஆகும்போது சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய தொகை ஒரு பெண்ணுக்குக் கிடைத்திருக்கலாம், (4) கணவன் இறந்த பிறகு, ஜீவனாம்ச தொகை கிடைத்திருக்கலாம், அல்லது (5) ஒரு பெண் சொந்தமாக சம்பாதித்திருக்கலாம்.

இயேசுவின் சீடர்கள் அவர்களால் முடிந்த நன்கொடைகளைக் கொடுத்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய சீடர்களில் சிலர், வசதி வாய்ப்புள்ள பெண்களாகவும் இருந்திருக்கலாம். யோவன்னாள், ஏரோதுவின் அரண்மனை மேற்பார்வையாளருடைய மனைவியாக இருந்ததால் இவரும் பணக்காரராக இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இவரைப் போன்ற ஒருவர்தான் இயேசு போட்டிருந்த விலை உயர்ந்த, தையல் இல்லாத ஆடையைக் கொடுத்திருக்க வேண்டும். இந்த மாதிரியான ஆடைகளை, “மீன்பிடிப்பவர்களின் மனைவிகள் கொடுத்திருக்க முடியாது” என்று ஒரு எழுத்தாளர் சொல்கிறார்.—யோவா. 19:23, 24.

யோவன்னாள் பணம் கொடுத்து உதவியதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ஆனால், அவரால் முடிந்ததை செய்தார் என்பது மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. இவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதும் கொடுக்கிறோமா இல்லையா என்பதும் நம் கையில்தான் இருக்கிறது. நாம் எதை செய்தாலும், அதை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்.—மத். 6:33; மாற். 14:8; 2 கொ. 9:7.

இயேசுவின் மரணத்தின்போதும் அதற்குப் பிறகும்

இயேசு சாகும்போது, யோவன்னாளும் மற்ற பெண்களும் அங்கு இருந்திருக்கலாம். ஏனென்றால், “அவர் [இயேசு] கலிலேயாவில் இருந்தபோது அவர்கூடவே போய் அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள் இவர்களே. அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கு இருந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (மாற். 15:41) இயேசுவுடைய உடலை அடக்கம் செய்வதற்காகக் கொண்டுபோனபோது, “கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்கள் அங்கே போய், அந்தக் கல்லறையையும் அதில் அவருடைய உடல் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள்; பின்பு, நறுமணப் பொருள்களையும் வாசனைத் தைலங்களையும் தயார் செய்வதற்காகத் திரும்பிப் போனார்கள்.” ஓய்வுநாளை முடித்துவிட்டு திரும்பிவந்த சில பெண்களிடம், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட செய்தியைத் தேவதூதர்கள் சொன்னார்கள். இந்தப் பெண்கள், “மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள்” என்று லூக்கா சொல்கிறார்.—லூக். 23:55–24:10.

யோவன்னாளும் மற்ற பெண்களும் அவர்களால் முடிந்ததை இயேசுவுக்கு செய்தார்கள்

கி.பி. 33 பெந்தெகொஸ்தே அன்று இயேசுவின் சீடர்களும், அவருடைய சகோதரர்களும் அம்மாவும் எருசலேமில் கூடியிருந்தார்கள். அப்போது, யோவன்னாளும் அங்கு இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. (அப். 1:12-14) யோவன்னாளின் கணவர், ஏரோதுவின் அரண்மனையில் வேலை செய்ததால் ஏரோது அந்திப்பாவைப் பற்றிய விவரங்களை யோவன்னாள் லூக்காவிடம் சொல்லியிருக்கலாம். ஏனென்றால், சுவிசேஷ எழுத்தாளர்களில் லூக்கா மட்டும்தான் யோவன்னாளுடைய பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.—லூக். 8:3; 9:7-9; 23:8-12; 24:10.

யோவன்னாளிடமிருந்து நிறைய நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். அவர் தன்னால் முடிந்த மிகச் சிறந்ததை இயேசுவுக்கு செய்தார். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் மற்ற சீடர்களும் பிரசங்கிக்க பயணம் செய்தபோது, யோவன்னாள் கொடுத்த பணம் அவர்களுக்கு உதவியிருக்கும். இதை நினைத்து யோவன்னாள் நிச்சயம் சந்தோஷப்பட்டு இருப்பார். இவர் இயேசுவுக்கு பணிவிடை செய்தார், எந்தக் கஷ்டம் வந்தபோதிலும் இயேசுவுக்கு உண்மையாக இருந்தார். கிறிஸ்தவ பெண்களே, நீங்களும் யோவன்னாளைப் போல இருக்க ஆசைப்படுகிறீர்களா?