உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
◼ மின் சாதனங்களை உபயோகிக்காத சமயங்களிலும் ‘ஆன்’ செய்யப்பட்ட நிலையிலேயே விடுகையில், மின்சக்தி வீணாகிறது; இவ்வாறு வீணாக்கப்படும் மின்சக்தி, கனடா நாட்டின் ஒரு சராசரி குடும்பம் செலுத்துகிற மின் கட்டணத்தில் கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதத்திற்கு ஈடானது.—நேஷனல் போஸ்ட், கனடா.
◼ அரசாங்கம் தலையிட்டுத் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகளில் “ஊழலை எதிர்த்துப்” போராடுவதும் “விலை ஏற்றத்தை கட்டுப்பாட்டுக்குள்” வைப்பதும் உட்படுவதாக ரஷ்ய நாட்டு மக்கள் கருதினரென்று ஒரு சுற்றாய்வு காட்டியது.—பிராவ்டா, ரஷ்யா.
◼ தைவானில் ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளில் 26.4 சதவீதத்தினர் “தற்கொலை செய்துகொள்ள நினைத்திருக்கிறார்கள்” என்று ஒரு சுற்றாய்வு கூறியது.—த சைனா போஸ்ட், தைவான்.
◼ தொழில்நுட்பம் காரணமாக அமெரிக்காவில் வேலை நாட்களின் எண்ணிக்கை ஒரு நூற்றாண்டில் சுமார் 38 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஆனாலும், பணியாளர்களுக்கு ஓய்வுநேரம் கிடைத்தபாடில்லை. ஏனெனில் பிரயாணத்திற்கு அதிக நேரம் பிடிக்கிறது, மேற்படிப்பு அதிகரித்து வருகிறது, வீட்டு வேலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.”—ஃபோர்ப்ஸ், அமெரிக்கா.
◼ 2003-க்கும் 2004-க்கும் இடைப்பட்ட காலத்திற்குள், தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் 1.6 சதவிகிதம் அதிகமாக பசுங்கூட வாயுக்கள் வளிமண்டலத்தில் கலந்திருக்கின்றன. “கடந்த 10 வருடங்களில் இதுவே மிக அதிகமானதாகும்.”—ராய்ட்டர்ஸ், ஆஸ்லோ, நார்வே.
சீனாவில் தண்ணீர் தட்டுப்பாடு
“தண்ணீர் மாசுபடுவதும் சுத்தமான நீருக்கான தட்டுப்பாடும்” சீனாவை படுமோசமாகப் பாதித்திருக்கிறது. சீனாவின் பெரும்பாலான நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கிறபோதிலும் அநேக நகரங்களில் போதுமான நிதி இல்லாததன் காரணமாக அவற்றை இயக்க முடிவதில்லை. “அந்நாட்டின் பெரும்பாலான ஆறுகளும் குளங்களும் கால்வாய்களும், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வருகிற சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் மாசுபடுகின்றன. அதோடு, வயல் நீராலும் அவை மாசுபடுகின்றன, ஏனென்றால் அவற்றில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்கிறது” என்று த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையிடுகிறது. அதுமட்டுமல்ல, “சுமார் 30 கோடி மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.” நிலைமை மிகவும் “மோசமாய் இருக்கிறது” என்று ஜர்னல் பத்திரிகை கூறுகிறது. நாளுக்கு நாள் சீரழிந்தும் வருகிறது.
“நீங்கள் . . . யெகோவாவின் சாட்சிகளா?”
போன வருடம், எல்பா என்ற இத்தாலியத் தீவின் கடற்கரையில் இளம் கத்தோலிக்கர்கள் சுற்றுலாப் பயணிகளை அணுகிப் பேசினார்கள். ஏன் தெரியுமா? மாஸ்ஸா மாரிட்டீமா பியாம்பீனோ பகுதியைச் சேர்ந்த பிஷப், ‘நீங்கள் தொடர்ந்து கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பினால், உங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டும்’ என அவர்களிடம் சொல்லியிருக்கிறார். அதனாலேயே அந்த இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகளை அணுகினார்கள். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர், “நீங்கள் . . . யெகோவாவின் சாட்சிகளா?” என்று கேட்டதாக ஈல் டெம்போ என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
செக்ஸும் இசையும்
“ஆபாசமான, செக்ஸ் சம்பந்தப்பட்ட பாடல் வரிகளை” உடைய இசையைக் கேட்கிற டீனேஜ் பிள்ளைகள் “மற்ற பாடல்களைக் கேட்கிற இளைஞர்களைவிட சீக்கிரமே செக்ஸில் ஈடுபடுவதாகத்” தெரிகிறதென ஓர் ஆராய்ச்சி காட்டுவதாக அஸோஸியேடெட் ப்ரெஸ் அறிக்கையிடுகிறது. “ஆண்களை ‘செக்ஸ் பைத்தியங்களாகவும்,’ பெண்களை செக்ஸ் பாத்திரங்களாகவும் சித்தரிக்கிற பாடல்களும், செக்ஸ் விஷயங்களை அப்பட்டமாக வர்ணிக்கிற பாடல்களும் சிறு வயதிலேயே செக்ஸில் ஈடுபடும்படி அதிகமாய்த் தூண்டுவதாகத் தெரிகிறது. ஆனால், செக்ஸை இலைமறை காயாகக் குறிப்பிடுகிற, உறவுகளை நிரந்தரமானவை எனக் குறிப்பால் உணர்த்துகிற பாடல் வரிகளை உடைய இசை, செக்ஸில் ஈடுபடும்படி அந்தளவு தூண்டுவதில்லை” என்று அந்த அறிக்கை கூறியது. “பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏன், டீனேஜ் பிள்ளைகளும்கூட பாடல் வரிகளைக் குறித்து சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கை கூறியது.
வீணடிக்கும் நுகர்வோர்
2004-ல் ஆஸ்திரேலியர்கள் 5.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள உணவை வீணாக்கியிருப்பதாக தி ஆஸ்ட்ரேலியா இன்ஸ்டிட்யூட் எனும் ஓர் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கையிடுகிறது. இந்தத் தொகை, 2003-ல் வெளிநாட்டு நிவாரண உதவிக்காக ஆஸ்திரேலியா நன்கொடையாகக் கொடுத்த பணத்தைவிட 13 மடங்குக்கும் அதிகமாய் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 10.5 பில்லியன் டாலர்கள் (8.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள பொருள்களையும் சேவைகளையும் ஆஸ்திரேலியர்கள் வீணாக்குகிறார்கள். இவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது துளியும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தத் தொகை, பல்கலைக்கழகங்களுக்கும் சாலைகள் அமைப்பதற்கும் அந்நாடு செலவிடும் பணத்தைவிட அதிகமான தொகையாகும்.