Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | நல்ல பழக்கங்களை வளர்க்க சில வழிகள்...

1 யதார்த்தமாக இருங்கள்

1 யதார்த்தமாக இருங்கள்

வாழ்க்கையில் எல்லாவற்றையும் திடுதிப்பென்று மாற்ற முயற்சி செய்வது உங்களுக்கு வசீகரமாகத் தோன்றலாம். ஒருவேளை நீங்கள் இப்படியெல்லாம் செய்ய நினைக்கலாம்: ‘இந்த வாரத்துல இருந்து சிகரெட் பிடிக்க மாட்டேன்... இனிமே சத்தியமே செய்ய மாட்டேன்... ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சிருக்க மாட்டேன். ஆனால் இன்னையில இருந்து “எக்ஸர்சைஸ்” செய்யப்போறேன்... உடம்புக்கு ஒத்துக்கிறத மட்டும்தான் சாப்பிடப்போறேன்... அடிக்கடி தாத்தா பாட்டிக்கு போன் பண்ணி பேசப்போறேன்.’ ஆனால் எல்லா இலக்குகளையும் ஒரே சமயத்தில் அடைய முயற்சி செய்தால் கடைசியில் ஒன்றையுமே அடைய முடியாது!

பைபிள் தரும் அறிவுரை: “அடக்கமாக இருப்பவர்களிடம் ஞானம் இருக்கும்.”நீதிமொழிகள் 11:2, NW.

அடக்கமாக இருப்பவர் யதார்த்தமாக யோசிப்பார். தனக்கு இருக்கிற நேரத்தை... சக்தியை... பொருள்களை... வைத்து என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்து வைத்திருப்பார். அதனால், எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் மாற்ற முயற்சி செய்வதற்குப் பதிலாக, படிப்படியாக முன்னேற்றம் செய்வார்.

எல்லா இலக்குகளையும் ஒரே சமயத்தில் அடைய முயற்சி செய்தால் கடைசியில் ஒன்றையுமே அடைய முடியாது!

நீங்கள் என்ன செய்யலாம்

ஒரே சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு பழக்கங்களை மட்டும் மாற்ற முயற்சி செய்யுங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்:

  1. இரண்டு ‘பட்டியல்கள்’ போட்டுக்கொள்ளுங்கள். ஒன்று... நீங்கள் வளர்த்துக்கொள்ள விரும்பும் நல்ல பழக்கங்களுக்காக. மற்றொன்று... ஒழித்துக்கட்ட வேண்டிய கெட்ட பழக்கங்களுக்காக. ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள், எத்தனை நினைக்கிறீர்களோ அத்தனையையும் அந்தப் பட்டியல்களில் எழுதிக்கொள்ளுங்கள்.

  2. பட்டியலில் இருக்கிற விஷயங்களில் எவையெல்லாம் மிக முக்கியம் என்பதை தீர்மானித்துக்கொண்டு, அவற்றை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.

  3. ஒவ்வொரு பட்டியலிலிருந்தும் சில பழக்கங்களை —ஒன்றோ இரண்டோ பழக்கங்களை—தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பழக்கங்கள் மீதே கவனம் செலுத்துங்கள். அதன்பின்பு பட்டியலிலிருந்து வேறு சிலவற்றை தேர்ந்தெடுங்கள்.

கெட்ட பழக்கத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொள்வதில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள். உதாரணத்துக்கு, அதிக நேரம் டிவி பார்ப்பது போன்ற கெட்ட பழக்கங்களும், பிடித்தமானவர்களோடு பழகுவது போன்ற நல்ல பழக்கங்களும் உங்களுடைய பட்டியலில் இருந்தால், நீங்கள் இப்படி செய்ய விரும்பலாம்: ‘வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் உடனே டிவியை ‘ஆன்’ பண்றதுக்குப் பதிலா, நண்பர்கிட்டயோ உறவினர்கிட்டயோ போன் பண்ணி பேசணும்.’ (g16-E No. 4)