Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்​—உண்மைகளின் களஞ்சியம்

பைபிள்​—உண்மைகளின் களஞ்சியம்

காலம் காலமாகவே, பைபிள் நம்பகமானது என்று வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். இன்று, பல லட்சம் பேர் அதன்படி வாழ்கிறார்கள். ஆனால் வேறு சிலர், ‘அது நம்ம காலத்துக்கெல்லாம் ஒத்துவராது’ என்றும், ‘அதெல்லாம் வெறும் கட்டுக்கதை’ என்றும் சொல்லி அதை ஏற்றுக்கொள்வதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிளை நம்பலாமா?

பைபிளை ஏன் நம்பலாம்

பைபிளை ஏன் நம்பலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் நண்பர் உங்களிடம் எப்போதும் உண்மையையே சொல்லியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரை நீங்கள் முழுமையாக நம்புவீர்கள், இல்லையா? பைபிளைப் பற்றி என்ன சொல்லலாம்? பைபிள் எல்லா சமயங்களிலும் உண்மையையே சொல்லியிருக்கிறதா? இதோ சில உதாரணங்கள்!

உண்மை சொல்லும் எழுத்தாளர்கள்

பைபிளை எழுதியவர்கள் நேர்மையானவர்கள். தங்களுடைய தவறுகளைக்கூட அவர்கள் மறைக்காமல் எழுதினார்கள். உதாரணத்துக்கு, தான் கீழ்ப்படியாமல் போனதைப் பற்றி யோனா தீர்க்கதரிசி எழுதினார். (யோனா 1:1-3) தன்னுடைய புத்தகத்தை முடிக்கும்போது, கடவுள் தன்னைக் கண்டித்ததைப் பற்றி மட்டும்தான் சொல்கிறார். செய்த தவறை எப்படித் திருத்திக்கொண்டார் என்றெல்லாம் சொல்லி தனக்குப் பெருமை தேடிக்கொள்ளவில்லை. (யோனா 4:1, 4, 10, 11) உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதில் பைபிள் எழுத்தாளர்கள் எந்தளவு உறுதியாக இருந்தார்கள் பாருங்கள்!

வாழ்க்கைக்கு உதவும் உண்மைகள்

அன்றாட வாழ்க்கைக்கு பைபிள் எப்போதுமே நல்ல ஆலோசனைகளைத் தருகிறதா? அதிலென்ன சந்தேகம்! எல்லாரோடும் சுமுகமாக இருப்பதைப் பற்றி பைபிள் சொல்வதைக் கவனியுங்கள். “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 7:12) அதோடு, “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்” என்றும் அது சொல்கிறது. (நீதிமொழிகள் 15:1) பைபிள் சொல்லும் உண்மைகள், அன்று மட்டுமல்ல இன்றும் பொருந்துகின்றன, இல்லையா?

வரலாற்று உண்மைகள்

பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆட்கள், இடங்கள், சம்பவங்கள் எல்லாம் நிஜமானவை. புதைபொருள் ஆராய்ச்சிகள் அவற்றை உறுதிசெய்திருக்கின்றன. உதாரணத்துக்கு, பைபிளில் குறிப்பிடப்பட்ட ஒரு சிறிய விவரத்தைக் கவனியுங்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெகேமியாவின் காலத்தில், எருசலேமில் இருந்த தீரு ஜனங்கள் (அதாவது, தீரு நகரத்திலிருந்து வந்த பெனிக்கேயர்கள்) ‘மீன்களையும் எல்லாவித சரக்குகளையும் விற்பனை செய்துகொண்டிருந்ததாக’ பைபிள் சொல்கிறது.—நெகேமியா 13:16.

இந்த பைபிள் வசனம் உண்மை என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது! புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரேலில் பெனிக்கேய சரக்குகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதிலிருந்து, அந்த இரண்டு தேசங்களுக்கும் இடையில் வர்த்தகம் நடந்திருப்பது தெரிகிறது. அதோடு, மத்தியதரைக் கடலில் இருக்கும் மீன்களின் புதைபடிவங்கள் எருசலேம் நகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த மீன்களை, தொலைதூரத்தில் இருக்கும் கடலிலிருந்து வியாபாரிகள் கொண்டுவந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். கிடைத்த ஆதாரத்தை ஆராய்ந்து பார்த்த ஓர் அறிஞர், “எருசலேமில் தீரு ஜனங்கள் மீன் விற்றார்கள் என்று நெ[கேமியா] 13:16-ல் சொல்லப்பட்டிருப்பது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்.

அறிவியல் உண்மைகள்

பைபிள் ஒரு அறிவியல் புத்தகம் அல்ல. அது முக்கியமாகக் கடவுளைப் பற்றியும் சரித்திரச் சம்பவங்களைப் பற்றியும் சொல்கிற ஒரு புத்தகம். இருந்தாலும், அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, அது துல்லியமாக இருக்கிறது. இதோ ஒரு உதாரணம்...

பூமி “அந்தரத்தில்” தொங்குவதாக சுமார் 3,500 வருஷங்களுக்கு முன்பே பைபிள் சொல்லிவிட்டது! (யோபு 26:7) பூமி தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது என்றும் ஓர் ஆமை அதைச் சுமந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லப்பட்ட கட்டுக்கதைகளுக்கும் பைபிள் சொன்னதற்கும் எவ்வளவு வித்தியாசம்! யோபு புத்தகம் எழுதப்பட்டு சுமார் 1,100 வருஷங்கள் கழித்தும்கூட, பூமி அந்தரத்தில் தொங்க வாய்ப்பே இல்லை என்றும் ஏதோவொன்று அதைத் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும்தான் மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். 300 வருஷங்களுக்கு முன்புதான், அதாவது 1687-ல்தான், ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைப் பற்றிய தனது ஆராய்ச்சியை வெளியிட்டார். அதில், பூமி தன் சுற்றுப்பாதையிலேயே இருப்பதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விசைதான் என்று விளக்கினார். முக்கியமான இந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதை நிரூபிக்கிறது? 3,000 வருஷங்களுக்கு முன்பு பைபிள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத்தான்!

உண்மையுள்ள முன்னறிவிப்புகள்

பைபிளில் உள்ள முன்னறிவிப்புகள், அதாவது தீர்க்கதரிசனங்கள், எந்தளவு உண்மை? ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். பாபிலோனின் அழிவைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனம்தான் அது.

தீர்க்கதரிசனம்: கி.மு. எட்டாவது நூற்றாண்டில், பிற்பாடு பலம்படைத்த பேரரசின் தலைநகரமாக ஆகவிருந்த பாபிலோன் அழிக்கப்படும் என்றும் அங்கு யாருமே குடியிருக்க மாட்டார்கள் என்றும் பைபிள் எழுத்தாளரான ஏசாயா முன்னறிவித்தார். (ஏசாயா 13:17-20) இதைச் செய்யப்போகிறவரின் பெயரைக்கூட சொன்னார். அவர்தான் கோரேஸ். அவருடைய போர் தந்திரத்தைப் பற்றிச் சொல்லும்போது, ஆறுகளை அவர் ‘காய்ந்துபோக’ வைப்பார் என்று ஏசாயா சொன்னார். அதோடு, பாபிலோன் நகரத்தின் கதவுகள் பூட்டப்படாமல் திறந்து விடப்பட்டிருக்கும் என்றும் முன்னறிவித்தார்.—ஏசாயா 44:27–45:1.

நிறைவேறியதா? ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்லி சுமார் 200 வருஷங்களுக்குப் பிறகு, பெர்சியாவின் ராஜா பாபிலோனைத் தாக்கினார். அவர் யார் தெரியுமா? கோரேஸ். எளிதில் தகர்க்க முடியாத மதில்களைக் கொண்ட நகரம் பாபிலோன். நகரத்தின் நடுவிலும் அதைச் சுற்றிலும் ஐப்பிராத்து நதி வேறு பாய்ந்தோடியது. கோரேஸ் என்ன செய்தார்? நதி ஆரம்பமான இடத்துக்கும் பாபிலோனுக்கும் இடையில், ஏதோவொரு இடத்தில் கால்வாய் வெட்டி சதுப்பு நிலம் ஒன்றில் தண்ணீரைத் திருப்பிவிட்டார். நீர்மட்டம் மளமளவென்று குறைந்தது. இதனால், நகரத்தின் மதிலை ஒட்டியிருந்த ஆற்றுப்படுகை வழியாகத் தொடையளவு தண்ணீரில் கோரேசின் படை வீரர்களால் நடந்துபோக முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால், ஆற்றை நோக்கியிருந்த நகரத்தின் கதவைப் பாபிலோனியர்கள் பூட்டாமல் திறந்தே வைத்திருந்தார்கள்! அதன் வழியாக நுழைந்த கோரேசின் படை பாபிலோனைக் கைப்பற்றியது!

ஆனால் தீர்க்கதரிசனத்தின்படி, பாபிலோனில் யாருமே குடியிருக்கவில்லையா? சில நூற்றாண்டுகளுக்கு மக்கள் அங்கு வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் இன்று, பாபிலோனில் வெறும் இடிபாடுகள் மட்டுமே இருக்கின்றன. அந்த இடம் ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியிருப்பதை இது காட்டுகிறது. அப்படியென்றால் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? எதிர்காலச் சம்பவங்களைப் பற்றி பைபிள் சொல்வது எல்லாமே நம்பகமானது!