வாசகர் கேட்கும் கேள்விகள்
“நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்” என்று நீதிமொழிகள் 24:16 சொல்கிறது. அப்படியென்றால், ஒருவர் திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும் கடவுள் அவரை மன்னிப்பதைப் பற்றி இந்த வசனம் சொல்கிறதா?
இல்லை. இந்த வசனம் அதைப் பற்றி சொல்லவில்லை. ஒருவருக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தாலும், அதைச் சகித்திருந்து அதிலிருந்து அவர் மீண்டுவருவதைப் பற்றி சொல்கிறது.
இந்த வசனத்துக்கு முன்பும் பின்பும் வருகிற வசனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம். “நீதிமானின் வீட்டுக்குப் பக்கத்தில் கெட்ட எண்ணத்தோடு பதுங்கியிருக்காதே. அவன் குடியிருக்கும் இடத்தை அழிக்காதே. நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான். ஆனால், பொல்லாதவன் பேராபத்தில் சிக்கி விழுந்துபோவது உறுதி. உன் எதிரி விழுந்தால் கைகொட்டிச் சிரிக்காதே. அவனுக்கு அடிசறுக்கினால் உன் உள்ளத்தில் சந்தோஷப்படாதே.”—நீதி. 24:15-17.
ஒருவர் திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும் மனம் திருந்தி கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதைப் பற்றி இந்த வசனம் சொல்வதாக சிலர் நினைக்கிறார்கள். “அந்தக் காலத்தில் இருந்த பிரசங்கிப்பாளர்களும் சரி இந்தக் காலத்தில் இருக்கிற பிரசங்கிப்பாளர்களும் சரி, [இந்த அர்த்தத்தில்] இந்த வசனத்தை நிறைய தடவை பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்று இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு குருமார்கள் எழுதினார்கள். அதோடு, “ஒருவர் மோசமான பாவங்களைச் செய்துவிட்டாலும் . . . ஒவ்வொரு தடவையும் மனம் திருந்தினால், கடவுளிடம் இருக்கிற பந்தத்தை ஒருபோதும் அவர் இழக்க மாட்டார்” என்று இந்தப் பிரசங்கிப்பாளர்கள் சொல்வதாக அந்த அறிஞர்கள் எழுதினார்கள். இந்தக் கருத்து, பாவம் செய்கிறவரை ஊக்கப்படுத்துவதுபோல் இருக்கிறது. எத்தனை தடவை தவறுகள் செய்தாலும் கடவுள் தன்னை மன்னித்துவிடுவார் என்று ஒருவரை நினைக்க வைப்பதுபோல் இருக்கிறது.
ஆனால், நீதிமொழிகள் 24:16-க்கு இந்த அர்த்தம் கிடையாது.
வசனம் 16-லும் 17-லும் இருக்கிற “விழுந்தாலும்” “விழுந்தால்” என்பதற்கான எபிரெய வார்த்தை நிறைய வழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு காளை வழியில் விழுந்துகிடப்பதற்கும், ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுவதற்கும், கற்கள் கீழே விழுவதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (உபா. 22:4, 8; ஆமோ. 9:9, அடிக்குறிப்பு) இந்த வசனங்களில் இருப்பதைப் போல் இந்த வார்த்தை அடையாள அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது: “ஒருவன் போகிற வழி யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவனுக்கு அவர் வழிகாட்டுவார். அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான். ஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.”—சங். 37:23, 24; நீதி. 11:5.
“விழுவது என்பதற்கான எபிரெய வார்த்தை பாவம் செய்வதைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுவதே இல்லை” என்று பேராசிரியர் எட்வர்ட் ஹெச். ப்ளம்ப்ட்ரெ சொன்னார். நீதிமொழிகள் 24:16-க்கு இன்னொரு அறிஞர் இப்படி விளக்கம் கொடுக்கிறார்: “கடவுளுடைய மக்களைக் கஷ்டப்படுத்துவது வீண்தான். ஏனென்றால், அவர்கள் மீண்டு வந்துவிடுவார்கள். ஆனால், கெட்டவர்களால் அது முடியாது.”
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பாவத்தில் ‘விழுவதை’ பற்றி நீதிமொழிகள் 24:16 சொல்லவில்லை என்பது தெரிகிறது. கஷ்டங்களிலும் பிரச்சினைகளிலும் விழுவதைப் பற்றித்தான் அது சொல்கிறது. திரும்பத் திரும்ப பிரச்சினைகளில் விழுவதையும் அது குறிக்கிறது. மோசமான இந்த உலகத்தில், நீதிமானாக இருக்கிற ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினைகளோ மற்ற பிரச்சினைகளோ வரலாம். அரசாங்கத்திடமிருந்தும் எதிர்ப்பு வரலாம். ஆனால், கடவுள் தனக்குத் துணையாக இருப்பார் என்றும், பிரச்சினைகளிலிருந்து மீண்டுவர தனக்கு உதவுவார் என்றும் அவர் உறுதியாக நம்பலாம். நம்முடைய சகோதர சகோதரிகளின் விஷயத்தில் இது எந்தளவு உண்மை என்பதை நீங்கள் நிறைய தடவை பார்த்திருப்பீர்கள். “கீழே விழுகிற எல்லாரையும் யெகோவா தாங்கிப்பிடிக்கிறார். துவண்டுபோனவர்களைத் தூக்கி நிறுத்துகிறார்” என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—சங். 41:1-3; 145:14-19.
தான் மட்டும் அல்ல, எல்லாருமே கஷ்டப்படுகிறார்கள் என்பதை “நீதிமான்” தெரிந்துவைத்திருக்கிறார். ஆனால், அதை நினைத்து அவர் ஆறுதல் அடைவதில்லை. அதற்குப் பதிலாக, இதைத் தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர் ஆறுதல் அடைகிறார்: “உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத்தான் எல்லாமே நல்லபடியாக நடக்கும் . . . ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே கடவுளுக்குப் பயந்து நடக்கிறார்கள்.”—பிர. 8:11-13; யோபு 31:3-6; சங். 27:5, 6.