Skip to content

யாருடைய கைவண்ணம்?

பைலட் திமிங்கலத்தின் தோல்—ஓர் அற்புதம்

பைலட் திமிங்கலத்தின் தோல்—ஓர் அற்புதம்

 பார்னக்கிள்ஸ் என்று சொல்லப்படுகிற சிறிய உயிரினங்களும் மற்ற கடல்வாழ் உயிரினங்களும், கப்பலின் உடற்பகுதியை ஒட்டிக்கொண்டு அங்கேயே வளர்கின்றன. இதைத்தான் பயோ பௌஃலிங் (Biofouling) என்று சொல்கிறார்கள். கப்பலை ஓட்டுகிறவர்களுக்கு இவை பெரும் தலைவலியாக இருக்கின்றன. இதனால் கப்பலின் வேகம் குறைகிறது, எரிபொருளை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது, இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை கப்பலைப் பழுதுபார்த்து சுத்தம் செய்யவும் வேண்டியிருக்கிறது. இதற்கான தீர்வைத் தேடி விஞ்ஞானிகள் இயற்கையிடம்தான் போகிறார்கள்.

  யோசித்துப் பாருங்கள்: நீளமான துடுப்புகள் கொண்ட பைலட் திமிங்கலத்தின் (Globicephala melas) தோல், தானாகவே சுத்தமாகிக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தோல் முழுவதும் சின்னச் சின்ன மேடுகளால் (nanoridges) மூடப்பட்டிருக்கிறது. அவை மிகவும் சிறியதாக இருப்பதால், குட்டி பார்னக்கிள்களுக்கு திமிங்கலத்தின் உடலில் ஒட்டிக்கொள்ள பிடி கிடைப்பதில்லை. இந்த மேடுகளுக்கு இடையில் ஜெல் போன்ற ஒரு திரவம் இருக்கும். இது கடல்பாசிகளையும் பாக்டீரியாக்களையும் தாக்குகிறது. திமிங்கலம் தன்னுடைய பழைய தோலை உரித்து போட்ட பிறகு, மறுபடியும் இந்த ஜெல் அதன் தோலில் சுரக்கிறது.

 திமிங்கலத்தின் தோல் அமைப்பை காப்பியடித்தால், கப்பலின் உடற்பகுதியைப் பாதுகாக்க முடியுமே என்று விஞ்ஞானிகள் யோசனை செய்துவருகிறார்கள். முன்பு, கடல்வாழ் உயிரினங்கள் கப்பலில் ஒட்டுவதை தடுக்க சிலவகை பெயிண்டுகளை (anti fouling) பயன்படுத்தினார்கள். இப்படிப் பயன்படுத்தப்பட்ட பெயிண்டுகள் கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கு உலை வைப்பதால், அவைத் தடை செய்யப்பட்டுவிட்டன. கடைசியாக, ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்தார்கள்? கப்பலின் உடற்பகுதி முழுவதும் சின்னச் சின்ன துளைகள் போட்டு, அதைக் கம்பி வலையால் மூடினார்கள். அந்தத் துளைகள் வழியாக, உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத ஒரு ரசாயனத்தை வெளியேற்றினார்கள். கடல் தண்ணீர் பட்டவுடன், இந்த ரசாயனம் கெட்டியான ஜெல் போல ஆகிவிடும். 0.7 மில்லிமீட்டர் அளவுக்கு கெட்டியாக இருக்கிற இந்த ஜெல் ஒரு தோல் போல கப்பலின் உடற்பகுதியை மூடும். காலப்போக்கில், இது கப்பலின் உடற்பகுதியிலிருந்து உரிந்துவிடும். அப்படி உரியும்போது அதில் ஒட்டிக்கொண்டு குடித்தனம் நடத்தும் உயிரினங்களும், அதோடு சேர்ந்து போய்விடும். அதற்குப் பிறகு, மறுபடியும் அந்தத் துளைகள் வழியாக புது ஜெல் வெளியேறி கப்பலின் உடற்பகுதியை மூடும்.

பார்னக்கிள்ஸ் கப்பலின் வேகத்தைக் குறைக்கிறது. இதை அகற்றுவது ரொம்பக் கஷ்டம்

 இந்த அமைப்பைப் பயன்படுத்தினால், கப்பலின் உடற்பகுதியில் உயிரினங்கள் ஒட்டிக்கொள்வதை தடுக்க நூறு மடங்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பது சோதனைகள் மூலம் தெரியவந்திருக்கிறது. ஒரு கப்பலை உலர்ந்த இடத்துக்கு கொண்டுவந்து சுத்தம் செய்வதற்கு ஏகப்பட்ட பணம் செலவாகும். அதனால் இந்தக் கண்டுபிடிப்பு கப்பல் கம்பெனிகளுக்கு கிடைத்த ஒரு பெரிய நன்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தானாக சுத்தம் செய்துகொள்ளும் பைலட் திமிங்கலத்தின் தோல் பரிணாமத்தினால் உருவானதா? அல்லது வடிவமைக்கப்பட்டதா?