யாருடைய கைவண்ணம்?
பாராசூட்டுக்கு சவால்விடும் டேன்டேலியன் விதை
இது பறவையும் கிடையாது, இதற்கு சிறகுகளும் கிடையாது. ஆனால் இயற்கையில் மிக சிறப்பாக பறக்கிறவற்றில் இதுவும் ஒன்று. அது என்ன? டேன்டேலியன் விதை! டேன்டேலியன் பூவின் தலைப்பகுதியை காற்று வருடிச் செல்லும்போது அதில் இருக்கிற எக்கச்சக்கமான சின்னச் சின்ன விதைகள் காற்றில் மிதக்க தொடங்குகின்றன. அவை குட்டிக் குட்டி பாராசூட்டுகள் மாதிரி பறக்கின்றன. தரைக்கு கொஞ்சம் மேலேயே மிதக்க தொடங்கினாலும் அவற்றில் சில, ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிக தூரத்துக்கு காற்றோடு கலந்து பயணம் செய்கின்றன. எப்படி இவ்வளவு தூரத்துக்கு காற்றில் மிதக்க இவற்றால் முடிகிறது? பறக்கிற முறைதான் இதற்கு காரணம். ஒரு பாராசூட் பறப்பதை விட நான்கு மடங்கு அதிக திறமையாகவும் நிலையாகவும் இது பறக்கிறது என்று சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்: ஒவ்வொரு விதையும் ஒரு காம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த காம்புக்கு மேலே பாப்பஸ் (pappus) என்று அழைக்கப்படுகிற பட்டு மாதிரியான மெல்லிய முடிகள் இருக்கும். இந்த பாப்பஸ்தான் பாராசூட் மாதிரி செயல்பட்டு, விதை காற்றில் மிதக்க உதவுகிறது.
வட்ட வடிவான சுழல் காற்றினால்தான் விதைகள் கீழே விழாமல் ரொம்ப நேரம் காற்றில் மிதப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்
அதுமட்டுமல்ல, விதை காற்றில் பறப்பதற்காக இந்த பாப்பஸில் இருக்கிற மெல்லிய முடிகள் இன்னொரு வேலையும் செய்கின்றன. அந்த முடிகளை சுற்றியும் அதற்கு உள்ளேயும் காற்று பயணிக்கும்போது அந்த காற்றின் மேல்பகுதியில் வட்ட வடிவான சுழல் ஏற்படுகிறது. இதன் விளைவாக, அந்த இடத்தில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகிறது. அதுதான் இந்த குட்டி பாராசூட்டுகள் ‘தரை இறங்காமல்’ ரொம்ப நேரம் காற்றில் மிதக்க உதவுகிறது.
அந்த பாப்பஸில் இருக்கிற முடிகள் ஒழுங்காக அமைக்கப்பட்டு இருப்பதால்தான் ஒரு பாராசூட்டை விட ரொம்பவே திறமையாகவும் நிலையாகவும் செயல்பட பாப்பஸால் முடிகிறது. ஆச்சரியம் என்னவென்றால், பாப்பஸில் 90 சதவீத இடம் காலியாகத்தான் இருக்கிறது. வெறும் 10 சதவீத பொருள்களை வைத்துக்கொண்டு அது பக்காவாக பறக்கிறது!
டேன்டேலியன் விதைகளுடைய பறக்கும் திறனை காப்பியடிக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் யோசிக்கிறார்கள். இந்த தகவல்களை வைத்து, ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்காக குறைவான சக்தியில் இயங்குகிற குட்டி ட்ரோன்களை (drones) தயாரிக்க முயற்சி செய்கிறார்கள். காற்று மாசுபடுவதை கண்காணிப்பது போன்ற நிறைய விஷயங்களுக்காக இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம்.
டேன்டேலியன் விதைகளின் பறக்கும் திறனை பாருங்கள்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: காற்றில் தள்ளாடாமல் ரொம்ப பக்காவாக பறக்கும் இந்த திறமை டேன்டேலியன் விதைகளுக்கு தானாகாவே வந்திருக்குமா அல்லது யாராவது அதை அப்படிப் படைத்திருப்பார்களா?